Published:Updated:

``சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கு!''- தலைமைச் செயலாளர் உத்தரவு

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வரவிருக்கும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதால் சென்னை மற்றும் அதையொட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (ஜூன் 19) முதல் 12 நாள்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

''கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்த ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்'' என சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 12 நாள்கள் ஊரடங்கின்போது செயல்படுத்தப்பட வேண்டிய உத்தரவுகள் தொடர்பாக ஐந்து பக்கங்கள் கொண்ட கடிதத்தை உயர் அதிகாரிகளிடம் தலைமைச்செயலாளர் அளித்துள்ளார்.

வாகனப் போக்குவரத்து
வாகனப் போக்குவரத்து

சென்னை காவல் எல்லைக்குள் உட்பட்ட பகுதிகளில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுதான் இந்த ஊரடங்கின் நோக்கம். எனவே, மாநகர எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் நடமாட்டம் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்படும். அதே நேரத்தில், கன்டெய்ன்மென்ட் ஏரியா எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் வீடுகளிலும் தீவிரமான கண்காணிப்பு இருக்கும். நோய்க் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே காய்ச்சல் முகாம்கள் நடத்துவது, கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படும் நபர்களைச் சோதனை செய்வது, நோயாளிகளைக் கவனிப்பது, சிகிச்சை அளிப்பது, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுசெல்வது ஆகிய நடவடிக்கைகள் உறுதிசெய்யப்படும்.

காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மளிகைக்கடைகளும் காய்கறிக்கடைகளும் திறந்திருக்கும். ஆனால், மளிகை மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு வாகனங்களில் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 கி.மீ சுற்றளவில் இருக்கக்கூடிய மளிகைக்கடைகள் மற்றும் காய்கறிக்கடைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள் திறந்திருக்கும். உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி கிடையாது. பார்சல் மட்டுமே வாங்கிச் செல்லலாம். தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை. கடந்த ஒரு வார காலமாகவே சென்னை நகரின் பல இடங்களில் சாலையோரம் காய்கறிகள், பழங்கள் விற்பவர்களிடம் போலீஸார் கெடுபிடி காண்பித்து வந்தனர்.

மருந்தகம்
மருந்தகம்

இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் 12 நாள்களில், ஜூன் 21-ம் தேதி, ஜூன் 28-ம் தேதி என இரண்டு முறை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மற்ற நாள்களைக் காட்டிலும், இந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு கடுமையாகப் பின்பற்றப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆட்டோ, டாக்ஸி உட்பட வேறு எந்த வானங்களையும் எக்காரணம் கொண்டும் அன்றைக்கு இயக்குவதற்கு அனுமதி கிடையாது.

கடைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வந்தால், அபராதம் விதிக்கப்படும். சென்னைப் பெருநகரக் காவல்துறை ஆணையர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும். முக்கியமான இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தினமும் இரு முறை கிருமிநாசினி தெளிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு உணவுப்பொருள்கள் கொண்டுசெல்வதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதிசெய்யும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அரசுப்பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வரத் தேவையில்லை.

முகக்கவசம் அணிந்தவர்கள்
முகக்கவசம் அணிந்தவர்கள்

பால் பூத்கள், மருந்துக்கடைகள் செயல்படும். பால் விநியோகம் மற்றும் குடிநீர் வாகனங்கள் அனுமதிக்கப்படும். விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து பயணிகளை ஏற்றிச்செல்ல ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும். உள்ளூர் அரசு அலுவலகங்கள், வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகம், காவல்துறை, மின்சாரம், குடிநீர்த் துறைகள், கருவூலங்கள் செயல்படும். வங்கிகளின் தலைமையகங்களும், வங்கிக் கிளைகளும் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும். சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய விநியோகத்துக்கு அனுமதி உண்டு.

ஊரடங்கு அமலில் உள்ள எல்லா நாள்களிலும் அம்மா உணவகங்கள் திறந்திருக்கும். துறைமுகங்களில் சில பணிகள் அனுமதிக்கப்படும். குறிப்பாக, குறைந்த ஊழியர்களை வைத்துக்கொண்டு அத்தியாவசியப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை கப்பலில் ஏற்றவும், இறக்கவும் அனுமதி உண்டு. தொலைத்தொடர்பு மற்றும் ஐ.டி நிறுவனங்கள் ஊரடங்கு நேரத்தில் அலுவலகத்துக்கு வரும் தங்கள் ஊழியர்களுக்கு இ-பாஸ் வாங்க வேண்டும். பெட்ரோல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களும் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

ஏற்கெனவே திரையரங்களும், மால்களும் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கிலும் அவை மூடப்பட்டிருக்கும். முதல் ஊரடங்களிலிருந்து சென்னையில் மூடப்பட்டிருந்த சலூன் கடைகள் சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. இந்த ஊரடங்கின்போதும் சலூன்களும் அழகு நிலையங்களும் மூடப்பட்டிருக்கும். நீச்சல்குளங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், மதுபானக்கூடங்கள், ஆடிட்டோரியம் போன்றவையும் மூடப்பட்டிருக்கும்.

கட்டுப்படுத்தப்பட்டபகுதி
கட்டுப்படுத்தப்பட்டபகுதி

இந்த ஊரடங்கு நேரத்தில், கன்டெய்ன்மென்ட் ஏரியா எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கடுமையாகப் பின்பற்றப்படும். அங்கு தளர்வுகள் பொருந்தாது. முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கான சேவைகளுக்கு எந்தத் தடையும் இல்லை. அதே நேரத்தில் தன்னார்வ நிறுவனங்களும் பிற அமைப்புகளும் அரசிடம் உரிய அனுமதியைப் பெற வேண்டும்.

சென்னையில் மீண்டும் ஊரடங்கு... ஊரைக் காலி செய்யும் மக்கள்... தலைநகரில் குறையுமா கொரோனா?

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இதுவரை கொரோனாவால் 570-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். சென்னைப் பகுதியில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 450-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஊரடங்கின்போது, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தீவிரமாகக் கண்காணிப்படும் என்றும், சம்பந்தப்பட்ட நபர்கள் வெளியே நடமாடுவது கட்டுப்படுத்தப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனை உறுதிப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர்
காவல்துறையினர்

சுமார் ஒரு கோடி மக்கள்தொகையைக் கொண்ட சென்னையில் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. ஏற்கெனவே இரண்டு முறை சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், முன்பைவிட இப்போது கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. எனவேதான், தற்போது மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதென்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது. கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதாலும், ஊரடங்களால் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் இழந்த மக்கள், சென்னையைக் காலிசெய்துவிட்டு குடும்பம் குடும்பமாக சொந்த ஊர்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இதனால் சென்னையில் மக்கள் நெருக்கம் ஓரளவும் குறையும் என்றும், இது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் நம்பப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் முதியோர், உடல்நலன் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு