Published:Updated:

கொரோனா: `இம்ப்ரோ’ மருந்தை ஆய்வு செய்யுங்கள்! - ஆயுஷ் அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

மத்திய ஆயுஷ் அமைச்சகம் `இம்ப்ரோ’ சித்த மருந்தைப் பரிசோதித்து, ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,17,39,169 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 66,41,866 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,36,720 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சையில் பாரம்பர்ய சித்த மருத்துவத்தையும் பயன்படுத்த வேண்டும் எனச் சித்த மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

madurai hc
madurai hc

இந்த நிலையில் சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த மனு, இப்போது கவனம் பெற்றிருக்கிறது. கொரோனோவைக் கட்டுப்படுத்த 66 மூலிகைகள் கொண்டு கசாயப் பொடி மருந்தைக் கண்டுபிடித்துள்ளேன். 'இம்ப்ரோ' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பொடியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, சாப்பிடுவதற்கு முன்பு தினமும் இரு வேளை குடித்துவந்தால், கொரோனா நோயிலிருந்து விடுபட கைகொடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கொரோனா: `சித்த மருந்து 'இம்ப்ரோ'வை ஆய்வுக்கு உட்படுத்துங்கள்!' - வழக்கும் விசாரணையும்

இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது. சீனாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பாரம்பர்ய மருத்துவமே உதவியது. "எனவே, பொடி மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. கொரோனா நோய் சிகிச்சையில் பங்களிக்கக்கூடிய இந்தச் சித்த மருந்தான மூலிகைப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்
Freepik

இந்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், `மருந்தைப் பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. எனவே, இந்த மருத்துவமுறையை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்குவது குறித்தும், மருந்தை ஆய்வு செய்து அது தொடர்பான விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, அடித்தட்டு மக்களும் மருந்தைப் பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

`இம்ப்ரோ' மருந்து தொடர்பாகத் தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. அதனடிப்படையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் இம்ப்ரோ மருந்தைப் பரிசோதித்து, அதுகுறித்த அறிக்கையை ஆகஸ்ட் 3-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

கொரொனா
கொரொனா

இது குறித்து சுப்ரமணியன் நம்மிடம்,``நீதிமன்றம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை `இம்ப்ரோ’ சித்த மருந்தை பரிசோத்தித்து ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கூறியுள்ளது. இது தமிழக பாரம்பர்ய சித்த மருத்துவத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த மருந்து கண்டிப்பாகப் பயன்பாட்டிற்கு வரும் என நம்பிக்கையாக இருப்போம். இம்ப்ரோ மருந்தால் உலக நாடுகளுக்கும் நல்ல தீர்வாக அமையும். இந்த சித்த மருந்தை பரிந்துரை செய்த அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த கட்டுரைக்கு