Published:Updated:

மக்களைத் தேடி மருத்துவம்: குற்றம்சாட்டிய எடப்பாடி... சவால்விட்ட அமைச்சர் மா.சு - என்ன நடந்தது?!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்
News
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

`மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியாக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டம், சன்னாசிப்பட்டியிலுள்ள மீனாட்சி என்பவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கைகளால் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.

மக்களைத் தேடி மருத்துவம்: குற்றம்சாட்டிய எடப்பாடி... சவால்விட்ட அமைச்சர் மா.சு - என்ன நடந்தது?!

`மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியாக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டம், சன்னாசிப்பட்டியிலுள்ள மீனாட்சி என்பவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கைகளால் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.

Published:Updated:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்
News
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

`மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நீடிப்பதாகவும், மருந்துச் செலவுகள், விநியோகங்கள், பயனாளிகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றில் எந்தவிதமான புள்ளிவிவரங்களும் இல்லை எனவும் குற்றம்சாட்டியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், `எல்லா விவரங்களும் தயார்நிலையில் இருக்கின்றன; தேவைப்பட்டால் அலுவலகத்துக்கு வந்து பார்த்துத் தெரிந்துகொள்ளவும்' என பதிலடி கொடுத்திருக்கிறார்.

மக்களைத் தேடி மருத்துவம்
மக்களைத் தேடி மருத்துவம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்:

கடந்த 2021, ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி எனும் கிராமத்தில், `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின்கீழ் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களைச் சென்றடையும் வகையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2022, டிசம்பர் 29-ம் தேதி, `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியாக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டம், சன்னாசிப்பட்டியிலுள்ள மீனாட்சி என்பவர் கண்டறியப்பட்டு, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகளால் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.

அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி அறிக்கை:

இந்த நிலையில், நேற்று ஜனவரி 19-ம் தேதி அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ``ஒரு கோடிப் பேருக்கும்மேல் மருந்துப் பெட்டகங்கள் நோயாளிகளுக்குக் கொடுத்ததாக எந்தவிதமான புள்ளிவிவரக் குறிப்பும் இல்லை; `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பல குளறுபடிகள் இருக்கின்றன" எனக் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

அந்த அறிக்கையில், `` `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளன. பெரும்பாலான நோயாளிகளுக்குத் தொடர்ந்து மருந்துப் பொருள்கள் வழங்கப்படுவதில்லை என்று கூறுகிறார்கள். குறிப்பாக, நோயாளிகள் இந்தத் திட்டத்தைப் பற்றி, `முதல் தடவை மட்டும் எங்களைப் பரிசோதித்து, மாத்திரை கொடுத்துட்டுப் போனாங்க', `முதல் தடவை வந்தபோது மாசா மாசம் வீட்டுக்கே வந்து மாத்திரை தந்து, பி.பி, சுகர் செக் பண்ணிட்டுப் போவோம்னு சொன்னாங்க. ஆனா, அதன் பிறகு இதுவரை ஒருநாள்கூட வந்து பார்க்கல. அருகிலுள்ள தெரிஞ்சவங்ககிட்ட காசு கொடுத்து, மாத்திரை வாங்கிச் சாப்பிடுறேன்', `போனவங்க வரவே இல்ல'. `போட்டோ எடுக்க மட்டும் வந்தாங்க', `யாராவது வந்து கேட்டா அடிக்கடி வர்றாங்கன்னு சொல்லச் சொன்னாங்க' என்று கூறியதையும், அந்தத் திட்டத்திலுள்ள குளறுபடிகளையும் கடந்த 7.8.2022 அன்று நான் வெளியிட்டிருந்த அறிக்கையில் விவரமாக எடுத்துரைத்திருந்தேன்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

இந்த நிலையில், 29.12.2022 அன்று விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின், `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கியதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது. அப்படி ஒரு கோடிப் பேருக்குமேல் மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டிருந்தால், மருந்துக்காக மட்டும் எவ்வளவு செலவிடப்பட்டிருக்கிறது என்றும், என்னென்ன நோய்க்கு, எந்த வகையான மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன, ஒரு கோடிப் பயனாளிகளின் விவரங்கள் இருக்கின்றனவா என்றும் விசாரித்தபோது, மாநில மருத்துவத்துறை அதிகாரிகள் உண்மையில் `மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு கோடிப் பேருக்கும்மேல் மருந்துப் பெட்டகங்கள் நோயாளிகளுக்கு கொடுத்ததாக எந்தவிதமான புள்ளிவிவரக் குறிப்பும் இல்லை என்று தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

மேலும், நோயாளிகள் பற்றிய புள்ளிவிவரங்களில் டூப்ளிகேஷன், அதாவது ஒரே புள்ளிவிவரம், இரண்டு, மூன்று முறை பதிவுசெய்யப்பட்டதால், ஒரு கோடிப் பேருக்குமேல் பயன் பெற்றுள்ளனர் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய `வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு’ சிகிச்சை என்ற திட்டத்தில், ஒரு வாகனத்தை மட்டும் கூடுதலாக்கி, இந்த அரசு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்று மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தியிருக்கிறது.

மக்களைத் தேடி மருத்துவம்
மக்களைத் தேடி மருத்துவம்

ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் முடிவடைந்த பிறகும், இப்போதும் முந்தைய ஆட்சியின் மீது குறைகள் சொல்லியே விளம்பர ஆட்சி நடத்திவரும் இந்த அரசு, `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துக்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டிருக்கிறது என்றும், ஒரு கோடிப் பயனாளிகளின் முழு விவரங்களையும் இந்த விளம்பர அரசின் முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்:

எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு சவால்விடுக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்திருக்கிறார். அந்த விளக்கத்தில், ``எடப்பாடி பழனிசாமி எப்போது தூக்கத்திலிருந்து விழித்தார் எனத் தெரியவில்லை. `மக்களைத் தேடி மருத்துவம்’ தொடங்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி தொடங்கி, ஒரு கோடியே ஓராவது பயனாளி கண்டறியப்பட்ட திருச்சி சன்னாசிபட்டி வரை, முதலாவது பயனாளி, 50 லட்சமாவது பயனாளி, 60 லட்சமாவது பயனாளி, 75 லட்சமாவது பயனாளி, 80, 90 லட்சமாவது பயனாளி, ஒரு கோடியே ஓராவது பயனாளி என்ற நீண்ட வரலாற்றை `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கொண்டிருக்கிறது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இது உலகில் எந்தவொரு நாட்டிலும் செய்யப்படாத ஒரு அற்புதமான காரியம். இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாக இப்படியான செய்திகளைப் பரப்புகிறார்கள். ஒரு கோடிப் பயனாளிகள் யார் யார், எடப்பாடியில் எத்தனை பயனாளிகள் இருக்கின்றனர், சேலத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர், பயனாளிகள் பெயர், விலாசம் அவருக்கான நோய்த்தன்மை உள்ளிட்ட எல்லா விவரங்களும் தற்போது தயார்நிலையில் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி விருப்பப்பட்டால், டிபிஎச் அலுவலகத்துக்கு வந்து தேவைப்பட்டால் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அதைவிடுத்து அறிக்கைகள் மூலம் மக்களைக் குழப்பலாம் என்று நினைத்தாலும், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைத்தாலும் நிச்சயம் நடக்காது. இது அவருக்கு அழகான விஷயமும் அல்ல" என பதிலளித்திருக்கிறார்.