Published:Updated:

மயிலாடுதுறை: சத்தான உணவு; ஆரோக்கிய பானம்! - பேரூராட்சியின்`குக் ஃப்ரம் ஆபீஸ்' அசத்தல்

குக் ஃப்ரம் ஆபீஸ்
குக் ஃப்ரம் ஆபீஸ்

கொரோனா நோய் எதிர்ப்பில் நோய் எதிர்ப்புச் சக்தி முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதால், குக் ஃப்ரம் ஆபீஸ் என்ற திட்டத்தை முன்னெடுத்தார், பேரூராட்சி செயல் அலுவலர் குகன்.

கொரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் கண்டறியப்பட்ட நாள் முதல் வொர்க் ஃப்ரம் ஹோம் (work from home) என்ற வார்த்தை பரவலாகிவிட்டது. நோய்த் தொற்றைத் தவிர்க்க பணியாளர்கள் நலன் கருதி தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்குள் வரவிடாமல் வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறையைப் பின்பற்றி வருகிறது.

ஆனால், வொர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை அரசு அலுவலகங்களுக்கு சாத்தியமில்லை, அதுவும் 24 மணிநேரமும் நேரடி மக்கள் சேவையில் உள்ள உள்ளாட்சித்துறைகளில் வாய்ப்பே இல்லை என்ற சூழலில் ஊழியர்களே ஒன்று சேர்ந்து கூட்டாஞ்சோறு போல் இயற்கை முறையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சமைத்து உண்டு அசத்தி வருகின்றனர்.

சமையல் பணி
சமையல் பணி

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பல்வேறு தரப்பினரும் பணிபுரிந்து வருகின்றனர்.

கொரோனா நோய் உடனான ஊழியர்களின் போராட்டத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதால் அவர்களுக்கு சத்தான உணவைக் கொடுக்க குக் ஃப்ரம் ஆபீஸ் என்ற திட்டத்தை முன்னெடுத்தார், பேரூராட்சி செயல் அலுவலர் குகன்.

இந்தத் திட்டத்தின் மூலம், அலுவலகத்தில் காபி, டீ தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக காலை 11.00 மணிக்கு அலுவலகத்திலேயே இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் மற்றும் மிளகு கலந்த சூடான பானம், தேன் சேர்த்து தயாரித்து வழங்கப்படுகிறது. மாலை 4.00 மணிக்கு மஞ்சள் மிளகுப் பால் தயாரித்து பனங்கற்கண்டு கலந்து வழங்கப்படுகிறது. இதற்காக பொதுமக்களே பேரூராட்சிக்கு எரிவாயு அடுப்பு ஒன்றை நன்கொடையாக அளித்துள்ளனர்.

மதியம் உணவுக்கு, மண்பாண்டத்தில் அரிசி சமைக்கப்படுகிறது. அன்றாடம் ஒரு கீரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மிளகு, சீரகம், பூண்டு ரசமும் நோய் எதிர்ப்பு சக்திக்காகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிப்புச் செலவுகள் அனைத்தும் பணியாளர்களால் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. பெண் பணியாளர்கள் ஒற்றுமையாகச் சுழற்சி முறையில் சமைக்கின்றனர்.

குகன்
குகன்

"சூடான சுவையான மற்றும் மண் மனம் மணக்கும் ஆரோக்கியமான உணவு எங்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது" என்கின்றனர் அலுவலக ஊழியர்கள்.

மயிலாடுதுறை: `குப்பைமேடு காய்கறித் தோட்டமானது!’ - மாற்றிக் காட்டிய தூய்மைப் பணியாளர்

"வீட்டில் இருந்து அலுவலகம் புறப்படும் அவசரத்தில் சத்தான சமையலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர மாட்டேன். ஆனால், இங்கே கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ஆரோக்கியமாக உணர்கிறோம்" என்கிறார் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியின் வரித்தண்டலர் ஜெ.அமுதா.

அமுதா
அமுதா

குக் ஃப்ரம் ஆபீஸ் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் குகனிடம் பேசினோம்

``சத்தான ஆரோக்கிய உணவு முறை பற்றித் தெரிந்திருப்பது என்பது வேறு. கடைப்பிடிப்பது என்பது வேறு. ஒன்றைப் பற்றி தெரிந்திருப்பதால் மட்டும் பலனில்லை. கடைப்பிடித்தால் மட்டுமே வெற்றி கொள்ளலாம். இங்கே கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளோம். இது அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால் களத்தில் சுழலும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய முடியும்" என்றார் உறுதியான குரலில்.

ஒர்க் ஃப்ரம் ஹோமில்கூட சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வாய்ப்பின்றித் தவிக்கும் சூழலில் அலுவலக வேலைகளையும் சாதுர்யமாக கையாண்டு ஒற்றுமையுடன் ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ளும் குக் ஃப்ரம் ஆபீஸ் திட்டம் ஊழியர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு