Published:Updated:

சசிகலா: `நுரையீரல் தொற்று; கடும் நிமோனியா காய்ச்சல்!’ - மருத்துவ அறிக்கை

வீல் சேரில் சசிகலா
வீல் சேரில் சசிகலா ( ANI )

சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு என்ற தகவல் அவரது குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, சிறையிலுள்ள சசிகலா, தனது தண்டனைக் காலம் முடிவடைந்து, வரும் ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகவிருக்கிறார். இந்தநிலையில், சிறையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தநிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக சிறை மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து பெங்களூரு சிவாஜி சாலையிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் தொடர் சிகிச்சைக்காகவும் சி.டி ஸ்கேன் பரிசோதனைக்காகவும் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சசிகலா.

வீல் சேரில் சசிகலா
வீல் சேரில் சசிகலா
ANI

சசிகலா உடல்நிலை தொடர்பாக நேற்று மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், `` சி.டி ஸ்கேன் முடிவுகளில் அவருக்குத் தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. உடலின் சக்கரை அளவும் கூடியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. சசிகலா தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். நுரையீரலின் பாதிப்பு 16/25 என்ற அளவில் இருப்பதால், அவருக்குத் தீவிர சிகிச்சை தேவையென்றும் அதோடு, அவர் மருத்துவர்களின் தொடர் கணிக்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியானது. சி.டி ஸ்கேனை அடுத்து செய்யப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு என்ற தகவல் அவரது குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவ அறிக்கை
மருத்துவ அறிக்கை

இந்நிலையில் இன்று காலை சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ``கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகாலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சக்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு முதலியவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் கொரோனா நோய் வழிகாட்டுதல்படி அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு