Published:Updated:

ஒரு பக்கம் கொரோனா.. மறுபக்கம் பறவைக் காய்ச்சல்! - உஷார் நிலையில் நீலகிரி

bird flue monitroing
bird flue monitroing

ஏற்கெனவே 8 எல்லையோர சோதனைச் சாவடிகளில் கொரோனா தடுப்பு கண்காணிப்புக் குழுவினர் பணியாற்றி வரும் நிலையில், தற்போது பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனாவின் வுகான் மாகாணத்தில் துவங்கி இன்றைக்கு ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவிலும் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona treatment ward
corona treatment ward

கேரள மாநிலத்தில் மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், தற்போது புதிதாக மேலும் 5 பேருக்கு கொவிட்-19 தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுத்தியுள்ளது. இதுபோதாது என்று தற்போது கேரளாவின் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் பகுதிகளில் பறவைக்கக்காய்ச்சலும் சேர்ந்துகொண்டு மக்களைப் பாடாய் படுத்திவருகிறது.

இதேபோல் கர்நாடக மாநிலத்துக்கு சவுதி அரேபியாவிலிருந்து வந்த பயணி ஒருவர் இரண்டு நாள்கள் தங்கி பேருந்துகளில் பயணித்து ஆந்திர மாநிலம் சென்றார். அங்கு அவருக்கு நடைபெற்ற சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் கர்நாடக மற்றும் ஆந்திராவில் பெரும் பதற்றம் ஏற்பட்டு ஒரே நாளில் மாஸ்குகள் விற்றுத்தீர்ந்தன.

state border
state border

தமிழகத்திலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அது மேலும் பரவாமல் தடுக்க தீவிர தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநில எல்லையோரங்களில் அமைந்துள்ள நீலகிரியில் பறவைக்காய்ச்சல் மற்றும் கொரோனா தடுப்பு தற்காப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

நாடுகாணி சோதனைச் சாவடியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு பணியில் குழுவுடன் ஈடுபட்டுவரும் கால்நடை மருத்துவர் பாலாஜி, ``கேரளாவில் ஏற்பட்ட பறவைக்காய்ச்சல் பாதிப்பில் ஆயிரத்துக்கும் அதிகமான கோழிகள் இறந்துள்ளன. எனவே, தமிழகத்திற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க நேற்று முதலே தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

bird flue monotoring
bird flue monotoring

கேரளாவிலிருந்து வரக்கூடிய கோழி, காடை, புறா, வாத்து, முட்டை, தீவனம் உள்ளிட்டவற்றை நமது எல்லைக்குள் அனுமதிப்பதில்லை. இவற்றை ஏற்றிவரும் வாகனங்களை திருப்பி அனுப்புகிறோம். மேலும், எல்லா வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கின்றோம்" என்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அதிகாரிகள், ``கேரளா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களிலிருந்து காய்ச்சல் அறிகுறியுடன் வந்தால் கூட தீவிரமாக கண்காணிக்கின்றோம். அனைத்து சோதனைச் சாவடிகளிலும் மருத்துவக் குழுக்கள் கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன" என்கின்றனர்.

corona treatment ward
corona treatment ward

ஒரு பக்கம் கொரோனா மறுபக்கம் பறவைக் காய்ச்சல் என தொற்று நோய்கள் துரத்துவதால் மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு