Published:Updated:

மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தாயார் மறைவு... உடல் ஆராய்ச்சிக்காக ஒப்படைப்பு!

ஹர்ஷ் வர்தன், மத்திய அமைச்சர்
ஹர்ஷ் வர்தன், மத்திய அமைச்சர்

89 வயதான என் தாயார் மாரடைப்பால் இன்று காலை இறந்துவிட்டார். உலகத்திலேயே எனக்கு மிகவும் நெருக்கமானவர் என் அம்மா. அவர் சொர்க்கத்தை அடைந்துவிட்டார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் ஷர்ஷ் வர்தனின், 89 வயதான தாயார் சினேகலதா கோயல் ஞாயிற்றுக் கிழமையன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

திடீரென்று, சுய நினைவை இழந்து மயக்கமடைந்தவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருந்த போதிலும், காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து ஹர்ஷ் வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``உலகிலேயே எனக்கு மிகவும் நெருக்கமானவர் என் அம்மா. அவர் சொர்க்கத்தை அடைந்துவிட்டார். 89 வயதான என் தாயார் மாரடைப்பால் இன்று காலை இறந்துவிட்டார். என்னுடைய வழிகாட்டியும் தத்துவவாதியுமான அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று உருக்கமாகப் பதிவிட்டு, தன் தாயாருடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பதிவில் இணைத்திருந்தார்.

காது, மூக்கு, தொண்டை நிபுணரான ஹர்ஷ் வர்தன், தன் தாயின் கண்களை எய்ம்ஸ் மருத்துவமனையிலுள்ள கண் வங்கி அமைப்புக்கு (ORBO) தானமாக அளித்துள்ளார். அந்த அமைப்பின் தலைவர் ஆர்த்தி விஜ், இதுகுறித்துக் கூறுகையில், ``சுகாதாரத் துறை அமைச்சரின் அம்மா இறந்தவுடன் அவருடைய கண்களை தானமளிக்க ஹர்ஷ் வர்தன் ஒப்புக்கொண்டு, ஒப்புதல் படிவத்தில் அவரே கையெழுத்திட்டார். இந்தச் செயல், பலருக்கும் தூண்டுகோலாக அமையும்” என்று கூறினார்.

வயது மூப்பு காரணமாக அவரின் மற்ற உறுப்புகளைத் தானமளிக்க முடியாததால், மருத்துவர் ஹர்ஷ் வர்தன், தன் தாயின் உடல் முழுவதையுமே மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் உடற்கூறியல் படிப்புக்காக வழங்கியுள்ளார்.

மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து லோக் நாயக் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் சுரேஷ் சேத் இதுபற்றிப் பேசியபோது, ``அவருடைய உடல் தானம் அளிக்கப்படுவதாக முன்னரே உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இறந்தவுடன் அவரது உடல் தானமாக வழங்கப்பட்டுள்ளது. வருங்கால மருத்துவர்களுக்கு உடற்கூறியல் பாடம் கற்பிக்க உதவுவதன் மூலம் அவர் இறந்தாலும், அனைவருடைய நினைவுகளிலும் அவர் வாழ்வார். உடல் தானம் அளிக்க பலர் தயங்கும் சூழலில், அமைச்சர் எடுத்துள்ளது தைரியமான முடிவு” என்று கூறியுள்ளார்.

ஹர்ஷவர்தன் தாயார்
ஹர்ஷவர்தன் தாயார்
Twitter

பிரதமர் அலுவலக மாநில அமைச்சர் ஜிதேந்திர சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``மருத்துவம் மற்றும் பொது வாழ்க்கையில் என் நீண்டநாள் வழிகாட்டியான மருத்துவர் ஹர்ஷ் வர்தன் அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். தாயாரின் மறைவால், ஏற்படுகின்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திக்விஜய் சிங், இந்திய மருத்துவக் கழகம் எனப் பலரும் அமைச்சரின் தாயார் மறைவுக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு