Published:Updated:

`நோய் எதிர்ப்பு சக்திக்கு கை வைத்தியம்!’ - விளக்கம் சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா வராமல் தடுக்கிற கபசுரக்குடிநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளைப் பாராட்டி பேசிய அமைச்சர் ஜெயக்குமார், `கொரோனா வராமல் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சீரகத் தண்ணீர் வைத்தியம் ஒன்றையும் சொன்னார்.

கொரோனாவை சாதாரண ஜலதோஷம் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு வாட்ஸ்அப்களில் ஆளாளுக்கு கை வைத்தியம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பார்த்தே மிரண்டு கொண்டிருக்கிற இந்த நேரத்தில், அமைச்சர் ஜெயக்குமாரும் காரசாரமான கை வைத்தியம் ஒன்றை வழங்கியிருக்கிறார்.

கொரோனா
கொரோனா

சென்னையில் கொரோனா தொற்று அதிகம் இருக்கிற மண்டலங்களில் ஒன்று ராயபுரம். அந்தப் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ``சென்னைக்கு வருகை தரவிருக்கிற மத்தியக் குழு பரிந்துரைத்தால் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிற ஒரு பகுதிக்கு ஒருவர் இரண்டு முறை சென்றால், அவர் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்” என்று எச்சரித்திருக்கிறார். தவிர, கொரோனா வராமல் தடுக்கிற கபசுரக்குடிநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளைப் பாராட்டி பேசிய அமைச்சர் ஜெயக்குமார், `கொரோனா வராமல் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சீரகத் தண்ணீர் வைத்தியம் ஒன்றையும் சொன்னார். அதாவது ஒரு டம்ளர் தண்ணீருடன் ஒரு பச்சை மிளகாய், தலா ஒரு சிட்டிகை சீரகம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து காய்ச்சிக் குடிக்க வேண்டுமாம். அதுவும் தொடர்ந்து 5 நாள்கள், வெறும் வயிற்றில்.

இவருடைய பேட்டி சமூக வலைதளங்களில் டிரெண்டானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மட்டுமல்லாமல் சிட்டிசன்களும் அமைச்சரையும் அவருடையை கை வைத்தியத்தையும் ட்ரோல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ்
சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ்
கொரோனாவை `லெப்ட்’ கையில் டீல் செய்யும் ஒடிசா! சொல்லித்தரும் பாடம் என்ன?

மேலே சொன்ன சம்பவம் குறித்து சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராஜிடம் கருத்து கேட்டோம். `இன்னொரு தடவை சொல்லுங்க' என்று ஒரு முறைக்கு இரு முறை அமைச்சரின் கஷாய செய்முறையைக் கேட்டுக்கொண்டவர், ``ஒரு டம்ளர் தண்ணீருக்கு ஒரு பச்சை மிளகாயைப் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் வயிற்றால் போக ஆரம்பித்து விடும்'' என்றதுடன் நிறுத்திக்கொண்டார்.

சித்த மருத்துவரின் கருத்து தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரை மீண்டும் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், ``அரசு சித்த மருத்துவர் மஞ்சு ஹேம மாலினிதான் என்னிடம் அந்த முறையைத் தெரிவித்தார். அந்தச் செய்தியாளர் சந்திப்பின்போதும் அவரும் அங்கு இருந்தார். அதன் செய்முறை இதுதான். பச்சை மி்ளகாயை இரண்டாக கீறி, உப்பு, சீரகம், மஞ்சள் பொடியுடன் ஒரு கப் தண்ணிரில் கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும். அதில் காரம் இருக்காது. மருத்துவர் சொன்னதைதான் நானும் சொன்னேன்” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு