Published:Updated:

கொரோனா: `தினமும் கபசுர குடிநீர், பூண்டு பால்’ -எப்படி இருக்கிறார் அமைச்சர் கே.பி.அன்பழகன்?

கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்

கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகன். எப்படி இருக்கிறார் அவர்?

தமிழக அமைச்சர்களிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் முதலாவது அமைச்சர் கே.பி.அன்பழகன்தான். தற்போது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எப்படி இருக்கிறார் அன்பழகன்..? அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.

அன்பழகனின் பழைய புகைப்படம்
அன்பழகனின் பழைய புகைப்படம்

``பல ஆண்டுகளுக்கு முன்பே அன்பழகனுக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. அப்போதிருந்தே உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டார். 62 வயதாகும் அவரை சர்க்கரை நோய் பாதியாக உருக்கிவிட்டது. கொரோனா பாதித்தவுடன் அவரது குடும்பத்தினர் கடுமையாக பயந்தனர். ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அன்பழகன் தேறி வருகிறார். பேச முற்படும்போது இருமல் வருவதால், தொண்டையில் ரணம் ஏற்பட்டுள்ளது. அதற்காகவும் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார். தினமும் கபசுர குடிநீர், பூண்டு பால் பருகுகிறார். இன்னும் ஒருவாரத்தில் அவரை வீட்டுக்குச் செல்லலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்றனர்.

`நான் வெளிய வந்துட்டேன்; வந்து கூட்டிட்டுப் போ!’ - கோவையைப் பதறவைத்த கொரோனா நோயாளி

கே.பி.அன்பழகனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலன் விசாரிக்கவில்லை என்கிற வருத்தம் அவர் குடும்பத்தில் இருந்தது. சமீபத்தில் அவர் மகன்களிடம் பேசிய எடப்பாடி, அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தாராம்.

இன்றைய கே.பி.அன்பழகன்
இன்றைய கே.பி.அன்பழகன்

“அன்பழகனுக்கு கொரோனா தொற்று இல்லை என்று நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அவரும் அதைத்தான் சொல்லியிருந்தார். இடையில் அது அரசியல் சர்ச்சையாகிவிட்டது. இனி வெளிப்படையாக நலம் விசாரித்தால் அது எதிர்கட்சிகளுக்கு தீனி போட்டது போலாகிவிடும். அப்பாவை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் உடல்நிலை ரிப்போர்ட்டை நான் தினமும் பார்க்கிறேன். அவர் சீக்கிரம் மீண்டு வருவார்” என்று நம்பிக்கையூட்டியுள்ளார் எடப்பாடி.

அடுத்த கட்டுரைக்கு