``சீனாவில் இருந்து பரவிவரும் புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது; எனினும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சீனாவில், கொரோனாவின் புதிய வகை வைரஸ் திரிபு ஏற்பட்டு, அங்கு வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை வைரஸால் தினமும் சீனாவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் நாள்களில் இது பல மடங்கு அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவிலும், பிஎஃப் 7 வகை கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

இந்நிலையில், புதிய வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் இருப்பதாக, அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, மூதறிஞர் ராஜாஜி குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசினார்.
அப்போது அவர், ``சீனாவில் இருந்து தற்போது 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பி.எஃப்.7 வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்தியாவிலும் புதிய வகை வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக உள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தியபடி தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 15 நாள்களாக ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கிறது.
புதியவகை கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு, சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட்டு இதுபற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் கையிருப்பு, மருந்துகள், கொரோனா பாதிப்பைத் தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பொதுமக்கள் கொரோனா விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாட்டிலேயே கொரோனா தொற்றுக்கு மரபணு பரிசோதனை செய்யும் மையம் தமிழகத்தில்தான் உள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி முகாம்களின் மூலம் 90 சதவிகிம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டுள்ளனர்” என்றார்.