Published:Updated:

``உறுதியானது 3 பேர்; 1,94,236 பேருக்கு பரிசோதனை; 39 பேர் அனுமதி" - அமைச்சரின் கொரோனா தகவல்

கொரோனா ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 பேருக்கு உறுதியானது. அதில் ஒருவர் சிகிச்சைக்குப்பிறகு வீடு திரும்பியுள்ளார். 1,94,236 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்தச் சூழலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதாகும் ஒருவர் டெல்லியிலிருந்து சென்னைக்கு வரும் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன்பு வந்தார். அவர் ரயிலில் வரும்போது சளி, காய்ச்சல் இருந்துள்ளது. சென்னை வந்த அவர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நண்பர்களுடன் தங்கினார். பின்னர் அவர் சலூன் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். வேலைக்குச் சேர்ந்த அடுத்தநாளே அந்த இளைஞருக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதையடுத்து அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரிகளை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டுக்கும் புனேவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர்
ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர்

இதையடுத்து உ.பி. இளைஞர், தனிமைப்படுத்தப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உ.பி.இளைஞர், சென்னையில் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், அவருடன் தங்கியிருந்த 10 பேரை அழைத்து வந்துள்ளனர். அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்ய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்தியிடம் கேட்டதற்கு, ``பாதிக்கப்பட்ட உ.பி-யைச் சேர்ந்த இளைஞர் குணம் அடைந்து வருகிறார். எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்" என்றார் சுருக்கமாக,

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. அவருக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

`10 நிமிடத்துக்கு ஒருவர் உயிரிழப்பு!’ - இரானை வாட்டி வதைக்கும் கொரோனா தொற்று
அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டர் தகவல்
அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டர் தகவல்

உ.பியைச் சேர்ந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்துவருகிறோம். அவருடன் சென்னையில் வேலை பார்த்தவர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தவர்களும் கண்காணிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டர் பக்கத்தில், ``காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினீயர், உ.பி இளைஞர், அயர்லாந்தைச் சேர்ந்த இளைஞர் ஆகிய 3 பேருக்கு கொரோனா இருப்பதாகப் பதிவு செய்துள்ளார்" அதோடு தினமும் 3 மணிக்கு ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தொடர்பான தகவல்களை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவு செய்துவருகிறார்.

கொரோனா ஆய்வில் அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா ஆய்வில் அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாஸ்க், கிருமி நாசினிகள் கையிருப்பு குறித்த தகவல்களை தமிழக அரசு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். முன்னதாக இந்த வழக்கில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் 2,984 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள் என்று அரசு தரப்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர், 19.3.2020-ல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தொடர்பாக ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார். அதில், 1,94,236 பயணிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். 3,481 பேர் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். 1,120 படுக்கை வசதிகள் உள்ளன. 39 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 320 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 232 பேருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் ஒருவர் வீடு திரும்பியுள்ளார். 86 பேருக்கான பரிசோதனையின் முடிவு இன்னும் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ட்விட்டரின் கொரோனா தகவல்
அமைச்சர் ட்விட்டரின் கொரோனா தகவல்
வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை
வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை

தாம்பரம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் கோவிட்-19 தனிமைப்படுத்தல் பிரிவு (isolation ward) மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கொரோனா நடவடிக்கைகள் குறித்த வீடியோ கான்ஃபரன்ஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அடுத்த கட்டுரைக்கு