Published:Updated:

`சொன்னாலும் கேட்பதில்லை, சுற்றிச்சுற்றி வருகிறார்கள்!' -விதிகளை மீறுகிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்?

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி
அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி

புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், போதிய தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம் என்ற பெயரில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகியன போட்டிப் போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகின்றன.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த மாதமே தன்னை வெற்றிபெற வைத்த விராலிமலை தொகுதி மக்களுக்குத் தன் சொந்த செலவில் அரிசி மூட்டைகளை நிவாரணமாக வழங்கத் தொடங்கிவிட்டார்.

அவர் வழங்கிய அரிசி மூட்டைகளில், `நாளைய முதல்வர்' என்ற வாசகத்துடன் புகைப்படம் இருந்தது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், `புதுக்கோட்டையின் மற்ற பகுதிகளில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லையா?' என்று மற்ற தொகுதி மக்கள் கொந்தளித்தனர்.

`சொன்னாலும் கேட்பதில்லை, சுற்றிச்சுற்றி வருகிறார்கள்!' -விதிகளை மீறுகிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்?

இதனால், அப்செட் ஆன அமைச்சர், அத்துடன் நிவாரணம் வழங்கியதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு புதுக்கோட்டைத் தொகுதிக்குட்பட்ட கந்தவர்வக்கோட்டை, ஆலங்குடி ஒன்றியத்தில் மலையூர், கருக்காக்குறிச்சி, வெட்டன்விடுதி உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு தன் சொந்த செலவில் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.

பல இடங்களில் மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கப்படாமலும் நிவாரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், மீண்டும் புதுக்கோட்டையில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் அமைச்சர் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

புதுக்கோட்டையில் ஜூன் 14-ம் தேதி செல்லப்பா நகரில் அம்ருத் திட்டத்தில் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட பூங்கா ஒன்றை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர், அதிகாரிகள், அ.தி.மு.க தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டு விட்டனர். இந்த நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி அறவே கடைப்பிடிக்கப்படவில்லை.

முன்னதாக, அ.தி.மு.க சார்பில் புதுக்கோட்டையில் உள்ள காந்திநகர், போஸ் நகர் என 22 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற நிவாரண விழாவில் அ.தி.மு.க தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அமைச்சரின் அருகருகே நின்றனர். இங்கும் ஒரு சில இடங்கள் தவிர, மற்ற இடங்களில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. அனைத்து நிகழ்வுகளும் அமைச்சரின் முன்னிலையிலேயே நடந்ததுதான் வேதனைக்குரியது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

`சொன்னாலும் கேட்பதில்லை, சுற்றிச்சுற்றி வருகிறார்கள்!' -விதிகளை மீறுகிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்?

புதுக்கோட்டையில் ஒற்றை இலக்கத்திலிருந்த கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை, இரட்டை இலக்க எண்ணாக அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் விதிகள் மீறப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இதுபற்றி பேசிய அமைச்சரின் ஆதரவாளர் ஒருவர், ``நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே அமைச்சர் கட்டாயம் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டால்தான் கலந்துகொள்வேன் என்று கூறிவிட்டுத்தான் நிகழ்ச்சியிலேயே கலந்துகொள்வார். பின்னர் நிகழ்ச்சி தொடங்கிய பின், நடப்பதே வேறாக இருக்கிறது. நான் பார்த்துக்கொள்கிறேன் யாரும் வரவேண்டாம் என்று சொன்னாலும், பல இடங்களில் கட்சிக்காரர்கள் சொன்னாலும் கேட்பதில்லை. சுற்றிச் சுற்றி வருகிறார்கள். பாதிப்பில் உள்ள பொதுமக்களுக்கு அரிசியாவது கொடுத்து உதவ வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் ஓடிக் கொண்டிருக்கிறார்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு