Published:Updated:

கொரோனாவின் பிடியில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்... விழித்துக்கொள்ளுமா அரசு?

ஸ்டான்லி அரசு மருத்துவமனை
ஸ்டான்லி அரசு மருத்துவமனை

ஸ்டான்லி மட்டுமன்றி கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் பிற அரசு மருத்துவமனைகளிலும் இதே நிலை நீடிக்கிறது.

கொரோனா வைரஸ் நோயைத் தடுக்கும் முயற்சிகளில் சாமான்யன் முதல் அரசாங்கம்வரை ஈடுபடலாம். ஆனால் அந்த நோய்க்கு சிகிச்சையளிக்கும் பொறுப்பை மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே முழுவதுமாகத் தம் தோள்களில் தாங்க முடியும். ஒரு நோயாளியின் நலனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு சிகிச்சையளிப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டியது அவசியம்.

சென்னையில் பிரபல மருத்துவமனைகளில் ஒன்றும் மருத்துவத் துறைகளுக்கு பல ஜாம்பாவான்களை உருவாக்கிக் கொடுத்த கல்வி நிறுவனமுமான அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதையடுத்து அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் சிலரிடம் பேசினோம்.

"ஸ்டான்லி மருத்துவமனையில் 17 மருத்துவர்கள், 10-க்கும் மேற்பட்ட ஆய்வக நிபுணர்கள் மற்றும் ஓரிரு செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையின் உறுப்பு மருத்துவமனையான ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையைச் சேர்ந்த 5 செவிலியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இன்னும் ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்களைப் பொறுத்தவரை, 17 பேரில் 10 பேர் வேறு வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்கள். மீதம் உள்ளவர்கள் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள்" என்று தெரிவித்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்காத துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் பாதிக்கப்படுவதற்குமான காரணங்கள் என்னவென்று விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

முதல்வருக்கே பாதிப்பு!

கல்லூரியின் முதல்வர் மருத்துவர் பாலாஜிக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில் தனியார் ஆய்வகத்துக்கு அனுப்பி அவரது சளி மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்திருக்கிறது. இதையடுத்து அதே கல்லூரியில் செயல்படும் ஆய்வகத்துக்கு மாதிரி அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டதில் பாதிப்பு இல்லை என்று முடிவு வந்திருக்கிறது. தினமும் மருத்துவர்களுடன் பல்வேறு சந்திப்புகள், கூட்டங்களை நடத்தும் முதல்வருக்கு நோய் பாதித்தது தெரிந்தால், மருத்துவர்களுக்கு நோய் பரவுவதற்கான முகாந்திரம் அவர்தான் என்ற குற்றச்சாட்டு எழும் என்பதற்காகவே தான் பணியாற்றும் மருத்துவமனையிலேயே பரிசோதனைக்கு அனுப்பி நெகட்டிவ் முடிவைப் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நோய் உறுதி செய்யப்பட்ட அனைத்து மருத்துவர்களுக்கும் அறிகுறிகள் இல்லாத லேசான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வர் மருத்துவர் பாலாஜி
`ஒரு லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை..!’ - அமெரிக்காவில் கொரோனா #Updates #NowAtVikatan

மேலும் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவப் பேராசிரியர்களில் பெரும்பாலானவர்கள் அவருடன் தினமும் மீட்டிங் நடத்துபவர்கள்தான். இருப்பினும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல், தினமும் வார்டுகளுக்கு விசிட் செல்வது, மருத்துவர்களுடன் மீட்டிங் என இயல்பாகவே இயங்கிக்கொண்டிருக்கிறாராம் கல்லூரி முதல்வர். தனியார் லேப்பில் பாசிட்டிவ் முடிவு வந்த அன்றைக்குகூட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து வந்திருக்கிறார்.

குறைவான க்வாரன்டீன் காலம்

கோவிட்-19 வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒரு வாரம் பணி முடிந்ததும் அவர்கள் 14 நாள்கள் க்வாரன்டீனில் இருக்க வேண்டும். அதற்குப் பிறகு வேறு வார்டில் ஒரு வாரம் பணியாற்றிவிட்டு மீண்டும் கோவிட்-19 வார்டு பணிக்குச் செல்ல வேண்டும். ஆனால், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 நாள்கள் மட்டுமே க்வாரன்டீன் காலம் வழங்கப்படுகிறதாம். அதற்குப் பிறகு மீண்டும் கோவிட் வார்டுக்கே அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.

கவச உடையின் அசௌகர்யம், புழுக்கத்தின் இடையில் தொடர்ச்சியாகப் பணி வழங்கப்படுவதும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நோய் பரவுவதற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற தொடர்ந்து பணியிலிருப்பவர்கள் அதிக மனஅழுத்தத்துக்கும் ஆளாகி வருகிறார்களாம்.

Medical professionals
Medical professionals
``கொரோனா மிக விரைவில் இரண்டாம் அலை தாக்குதலை ஏற்படுத்தக்கூடும்!" - எச்சரிக்கும் WHO

ஸ்டான்லி மருத்துவமனையில் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், மருத்துவர்கள் என 400 பேர், முதுநிலை மருத்துவர்கள் 300 பேர் என சுமார் 700 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். ஆனால் நாள்தோறும் 2,000 புறநோயாளிகள், 600 முதல் 800 உள்நோயாளிகளைக் கையாள வேண்டிய நிலை இருக்கிறது. இதுதவிர கொரோனா வார்டில் நாள்தோறும் சுமார் 290 பேருக்கு சிகிச்சையளிக்க வேண்டியிருக்கிறது.

இதுதவிர, அறிகுறிகளற்று நோய் உறுதி செய்யப்பட்டவர்களுக்கென்று தனியாக ஓரிரு இடங்களில் இயங்கி வரும் கண்காணிப்பு மையங்கள் ஆகிய அனைத்திலும் ஸ்டான்லி மருத்துவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். குறைவான மனிதவளத்துடன் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் அவலநிலையும் இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஆபத்தில் அரசு மருத்துவமனைகள்

ஸ்டான்லி மட்டுமன்றி கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் பிற அரசு மருத்துவமனைகளிலும் இதே நிலை நீடிக்கிறது. கொரோனாவுக்கென்று பிரத்யேகமாகச் செயல்பட்டு வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும் 7 நாள்கள் மட்டுமே க்வாரன்டீன் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கப் போவதாகத் தெரிவித்ததையடுத்து, தற்போது 14 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்றைய நிலவரப்படி 3 மருத்துவர்கள், 4 செவிலியர்கள், ஆய்வக நிபுணர் ஒருவர் ஆகியோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Stanley medical college hospital
Stanley medical college hospital

கையிலிருக்கும் மனிதவளத்தை முறையாகக் கையாளத் தெரியாத நிர்வாகச் சிக்கல் காரணமாகவே இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால் மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மனிதவளம் சரியாகக் கையாளப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

இதுதொடர்பாக விளக்கம் பெறுவதற்கு முன்னாள் சுகாதாரத் துறை செயலரும் சென்னை கொரோனா தடுப்புப் பணிகளுக்கான சிறப்பு அலுவலருமான ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். "இது சுகாதாரத்துறை சம்பந்தப்பட்ட விஷயம். சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகிய இருவரும் இருக்கும்போது மூன்றாவதாக நான் இதில் கருத்து கூறுவது சரியாக இருக்காது" என்று முடித்துக்கொண்டார்.

doctors
doctors

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் பாலாஜியிடம் பேசினோம்:

"எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல். அடிக்கடி வார்டுகளுக்குப் போய் வருவதால் இதுவரை ஐந்து முறை கோவிட்-19 பரிசோதனை செய்துவிட்டேன். நெகட்டிவ் என்றுதான் இதுவரை முடிவு வந்துள்ளது.

ஸ்டான்லி மருத்துவமனை அமைந்துள்ள ராயபுரம் பகுதி முழுவதுமே நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு புறநோயாளிகள், உடன் வருபவர்கள் என 2,000 பேர் வந்து செல்கின்றனர். இதனால் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம். இதற்கு மருத்துவர்களும் இலக்காகவே செய்கின்றனர். நோய் உறுதி செய்யப்பட்ட அனைத்து மருத்துவர்களுக்கு அறிகுறிகள் இல்லாத லேசான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது. தகுந்த சிகிச்சையில் க்வரான்டீனில் இருக்கிறார்கள். அனைவரும் நலமாகவே உள்ளனர். மருத்துவமனையில் நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நாள்தோறும் நடைபெறுகிறது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் தேவையான கவச உடைகள், முகக்கவசம், கையுறை, மருந்து, மாத்திரைகள் என அனைத்தும் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 வார்டுகளில் பணியாற்றுபவர்களை 7 நாள்கள் க்வாரன்டீன் செய்தால் போதும் என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் வழிகாட்டு நெறிமுறை. அதையே பின்பற்றி வருகிறோம். தேவைப்படுவோருக்கு 14 நாள்கள் க்வாரன்டீனும் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகும் கோவிட் அல்லாத வார்டுகளுக்குத்தான் பணிக்குச் செல்கின்றனர்" என்றார்.

படை வீரர்களின் பலம்தான் போரில் வெற்றியைத் தேடித் தரும். கொரோனாவுக்கு எதிரான போரில் வீரர்களாக முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் நலனையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இன்றோ நாளையோ முடியப்போவதில்லை இந்த யுத்தம். குறைந்தது இரண்டு ஆண்டுகள் அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்வரை இப்படித்தான் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

doctors
doctors
தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை குறைவாகச் செய்யப்படுவது ஏன்?

இதுபோன்ற பிரச்னைகளால் வடஇந்தியாவில் செவிலியர்கள் பலர் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். மருத்துவர்கள் வேலையை ராஜினாமா செய்யும் தகவல்களைக் கேள்விப்படுகிறோம். தமிழகத்தில் இதே நிலை நீடித்தால் இங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கள் வேலைகளை உதறிவிட்டுப் போக நேரிடும்.

மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் கொரோனாவுடன் மனித இனம் போராட முடியாது என்பது அப்பட்டமான உண்மை. நோயாளிகளும் மருத்துவர்களும் நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை உணர்ந்து அவர்கள் நலனில் அரசு அக்கறை செலுத்த வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு