Published:Updated:

`20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம்?!'- கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசுகள்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( CNMD )

கொரோனா வைரஸால் இதுவரை 213 பேர் இறந்துள்ளதாகவும் 9,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சீனாவின் எல்லை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவுவதைத் தடுக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் அதிகளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், பல்வேறு நாட்டின் அரசுகள் மக்களுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

ரஷ்யாவின் பிரதமர் மிகைல் மிஷூஸ்தின், ``வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ரஷ்ய-சீன எல்லை மூடப்படுகிறது" என அறிவித்துள்ளார். மேலும், சீன நாட்டு சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவுக்குள் நுழைவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் இருக்கும் வுகான் நகரைச் சேர்ந்த மக்களை வெளியேற்றுவது தொடர்பாகவும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஏற்கெனவே விடுமுறையில் இருக்கும் சீனர்கள், முறையான அறிவிப்பு வரும்வரை பணிக்குத் திரும்ப வேண்டாம் என்று ரஷ்ய அரசால் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அந்நாட்டின் மருத்துவ கண்காணிப்புக் குழுவும் சில கட்டுப்பாடுகளை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதில், ``ரஷ்யர்கள் தங்களது நீண்ட தலைமுடியைக் கட்டிக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் உள்ள பொருள்களைத் தொடுவது, காய்ச்சல் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுவது, கைகொடுப்பது, முத்தமிடுவது மற்றும் அணைப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசங்களை அணிந்துகொள்ளவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல, பல நாடுகளும் தங்களின் மக்களுக்குப் பாதுகாப்பு தொடர்பான காரணிகளை அறிவுறுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸால் இதுவரை 213 பேர் இறந்துள்ளதாகவும் 9,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சீனாவைத் தவிர்த்து ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியா, கம்போடியா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, மலேசியா, நேபால், பிலிப்பைன்ஸ், ஶ்ரீலங்கா, தைவான், லண்டன், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பு

இந்த வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பும் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை நேற்று அறிவித்துள்ளது. பரவுதலை தடுக்க உலக நாடுகளின் விமான நிலையங்கள் அனைத்திலும் பயணிகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். நோய் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளாவிய அவசரநிலை அறிவிக்கப்பட்ட பின்னர் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா ஷூனிங் ``வைரஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறுவதற்கான நம்பிக்கையும் திறனும் சீனாவுக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு