Published:Updated:

அடுத்தடுத்து 12 பேர் பாதிப்பு... தியேட்டர்கள் மூடல்!- முன்னெச்சரிக்கைகளை தீவிரப்படுத்தும் கேரள அரசு

தியேட்டர்கள் மூடல்!
தியேட்டர்கள் மூடல்!

ஐரோப்பிய நாட்டிலிருந்து தன் பெற்றோருடன் திரும்பிய 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்கெனவே மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இத்தாலியிலிருந்து திரும்பிய குடும்பத்தினர் 3 பேரின் மூலமாகப் பத்தினம் திட்டாவைச் சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஐரோப்பிய நாட்டிலிருந்து தனது பெற்றோருடன் திரும்பிய 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கொரோனா
கொரோனா

சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் மற்றும் அதிகாரி உடன் அவர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``ஏற்கெனவே 6 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். தற்போது இத்தாலியிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், அந்தக் குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பாவில் இருந்து தனது பெற்றோருடன் திரும்பிய 3 வயதுக் குழந்தைக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12 பேருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அதேபோல் அறிகுறிகளுடன் தென்பட்ட 1,116 பேர் 149 மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிப்பு அதிகமாகி வருவதால், 7-ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. ஆனால் 9, 10 மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகள் நடக்கும். அனைத்துக் கல்லூரிகளையும் மாத இறுதிவரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண விழாக்கள் நடத்தத் தடையில்லை. ஆனால், மக்கள் அதிகமான அளவில் பங்கேற்க வேண்டாம். சபரிமலைக்கும் பக்தர்கள் அதிகமாகச் செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

Pinarayi Vijayan
Pinarayi Vijayan

தியேட்டர்கள் மூடல்!

இதற்கிடையே, நாளை முதல் இந்த மாதம் இறுதிவரை தியேட்டர்கள் மூடப்படும் என்று கேரள தியேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே முதல்வர் பினராயி விஜயன் தியேட்டர்களை தற்காலிகமாக மூட வேண்டும் என அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது மூடப்பட்டுள்ளது.

கூட்டம் சேரும்போது வைரஸ் பாதிப்பு அதிகமாகப் பரவக்கூடும் என்பதால் மக்களை வீட்டைவிட்டு வெளியே வருவதை மறைமுகமாகத் தடுக்கும் நடவடிக்கையாக இதுபோன்ற நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மார்ச் 13-ம் தேதி தொடங்கும் மாத பூஜைக்காக சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு