Election bannerElection banner
Published:Updated:

`கோவிட் முன்களப் பணியாளர்களுக்கான ₹50 லட்சம் காப்பீட்டுத் திட்டம் ரத்தா?' - சு.வெங்கடேசன் கண்டனம்

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

`கோவிட் பணிகளில் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.50,00,000 காப்பீடு திட்டம் காலாவதியாகி 27 நாள்கள் ஆகிவிட்ட அதிர்ச்சியான செய்தியை எப்படி ஏற்றுக்கொள்வது?'

கோவிட் நோயாளிகளுக்கு சேவையாற்றும் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர்கள் அதன் காரணமாக உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,00,000 இழப்பீடு வழங்கும் காப்பீட்டுத் திட்டத்தை கடந்த 2020 மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் மரணமடைந்த முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

தற்போது கோவிட் இரண்டாம் அலை தீவிரமாகியுள்ள நிலையில் இக்காப்பீட்டுத் திட்டத்தை கடந்த மார்ச் மாதத்துடன் ரத்து செய்துள்ள மத்திய அரசு, புதிய காப்பீட்டு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

முன்களப் பணியாளர்கள்
முன்களப் பணியாளர்கள்

இந்த நிலையில், ``கோவிட் பேரிடரை எதிர்கொள்ளும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.50,00,000 காப்பீட்டுத் திட்டம் காலாவதியாகி 27 நாள்கள் ஆகிவிட்ட அதிர்ச்சியான செய்தியை எப்படி ஏற்றுக்கொள்வது?'' என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ``அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணிப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் போராளிகளின் குடும்பத்தினருக்கு பயனளிக்கும் காப்பீடாகும் இது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூசனின் மார்ச் 24-ம் தேதியிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான கடிதத்தில், மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு வரையிலான உரிமக் கோரல்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும், அந்த உரிமக் கோரல்களை சமர்ப்பிக்க இறுதித் தேதி இந்த மாதம் 24-ம் தேதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

அப்படியென்றால் கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இறந்த விலை மதிப்பற்ற உயிர்களுக்கு என்ன பதில்? அவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் தரப்போகிறோம்? இன்னும் வீரியத்தோடு தாக்கிக் கொண்டிருக்கிற கோவிட் இரண்டாவது அலையை எதிர்த்து முன் வரிசையில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு எந்த நம்பிக்கையை தரப் போகிறோம்?

இன்று நான் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அக்கடிதத்தில், இக்காப்பீட்டுத் திட்டம் எவ்வித கால தாமதமின்றி உடனடியாகப் புதுப்பிக்கப்பட வேண்டும்...

கடந்த மார்ச் 24 நள்ளிரவுக்குப் பின்னர் உயிரை இழந்துள்ளவர்களுக்கும் காப்பீட்டுப் பயன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியாக வேண்டும்...

மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கடிதம்
மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கடிதம்

இத்திட்டம் நடைமுறையாகும்போது தகுதியுள்ள உரிமங்கள் பல இழுத்தடிக்கப்படுவதாக அறிய வருகிறேன். ஆகவே இப்பயன் அதற்கு உரித்தான ஒவ்வொருவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தெளிவான வழிகாட்டல்கள் இன்ஷுரன்ஸ் நிறுவனத்துக்கும், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்... என மிக முக்கியமான 3 கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கிறேன். உடனடியாக இக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமென்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு