Published:Updated:

மகாராஷ்டிரா: கொரோனா நோயாளிகளைத் தாக்கும் கறுப்பு பூஞ்சை நோய் - 52 பேர் பலி

சிகிச்சைக்குக் கொண்டுவரப்படும் நோயாளி
சிகிச்சைக்குக் கொண்டுவரப்படும் நோயாளி

மகாராஷ்டிராவில் ஏற்கெனவே கொரோனா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிதாகப் பரவும் கறுப்பு பூஞ்சைத் தொற்று நோய்க்கு 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் வேகம் குறைய ஆரம்பித்துள்ளது. ஆனாலும், தற்போது தினமும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. தற்போது கொரோனாவுடன் சேர்ந்து புதிய வகை நோய் பரவ ஆரம்பித்துள்ளது. மியூகோமைகாசிஸ் எனப்படும் கறுப்பு பூஞ்சைத் தொற்றுநோயும் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்தநோய் அதிகம் ஏற்படுகிறது.

சர்க்கரைநோய் அல்லது ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை அளவு, அதிகப்படியான் ஸ்டீராய்டு மருந்துகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக்கொள்வதால் கறுப்பு பூஞ்சைத் தொற்று பரவுகிறது. மகாராஷ்டிராவில் இந்த நோய் பரவி 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோயாளிக்குச் சிகிச்சை
கொரோனா நோயாளிக்குச் சிகிச்சை

மாநிலம் முழுவதும் கறுப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கு 1,500 பேர் வரை சிகிச்சை பெற்றுவருகின்றனர். மும்பை மற்றும் அதையொட்டிய தானேயில் இந்த நோய் அதிகமாகப் பரவிவருகிறது. இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க ஒரு லட்சம் டோஸ் மருந்தை வாங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

கறுப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும். எனவே இந்தநோய் இருப்பவர்களுக்கு உடனே சிகிச்சையளிக்கப்படவேண்டியது அவசியம் என்று ராஜேஷ் தோபே தெரிவித்திருக்கிறார்.

இந்த நோய் வந்து இறந்த அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள். கொரோனா இரண்டாவது அலையில்தான் இந்த கறுப்பு பூஞ்சையின் தாக்கமும் அதிகரித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த நோய் எளிதில் பரவக்கூடியது என்றும், இந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மாநிலம் முழுவதும் 18 மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நோய் தொற்று ஏற்பட்ட எட்டு பேருக்கு ஒரு கண்பார்வை பறிபோய் இருக்கிறது. இந்த நோய் பொதுவாக மூக்கு மற்றும் கண் வழியாகப் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நோயை ஏற்படுத்தும் பூஞ்சைகள் மண், அழுகிய இலைகள், குப்பை உரங்கள், அழுகிய மரங்களில் அதிகமாக வாழ்கின்றன. இவை பரவியிருக்கும் காற்றை சுவாசித்தாலே இந்த நோய் தொற்றிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. இது அதிகமாக நுரையீரலை பாதிக்கும். அதிகப்படியான காற்று மாசு மற்றும் தூசிகளால் இந்த நோய் எளிதில் பரவக்கூடியது என்றும், மும்பை போன்ற நகரங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியது என்ன என்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். உரிய விழிப்புணர்வோடு சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டால், இந்த நோயிலிருந்து மீளலாம் என அவர் தெரிவித்துள்ளார். அந்தத் தகவல்கள் கீழே...

அடுத்த கட்டுரைக்கு