Published:Updated:

கொரோனா- மும்பையில் 1,305 கட்டடங்களுக்கு சீல்; ஒரே நாளில் ரூ.27 லட்சம் அபராதம்!

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

மும்பையில் கொரோனா அதிகமுள்ள பகுதியில் 1,305 கட்டடங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்திருக்கிறது. முகக்கவசம் அணியாத 13,592 பேரிடமிருந்து ரூ.27 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் யவத்மால் உட்பட மூன்று மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மும்பையிலும், புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஐந்து வார்டுகளில் கடந்த ஒரு வாரத்தில் 50 சதவிகிதம் கொரோனா அதிகரித்திருக்கிறது. இதனால் முகக் கவசம் அணியாமல் பொதுமக்கள் விதிகளை மீறி நடந்துகொண்டால் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்திருக்கிறார். முகக் கவசம் அணியாத 13,592 பேரிடம் ஒரே நாளில் ரூ.27.18 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளியில் கொரோனா சோதனை
பள்ளியில் கொரோனா சோதனை

முகக் கவசம் அணியாதவர்களைக் கண்டுபிடிப்பதற்காக நகர் முழுவதும் 1,200 மார்ஷல்கள் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். புறநகர் ரயில்களிலும் மார்ஷல்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முகக் கவசம் அணியாமல் அபராதம் செலுத்தாதவர்களுக்கு சமூக சேவைகள், தெருக்களைச் சுத்தப்படுத்துதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுவருகின்றன. மும்பையில் மட்டும் புதிதாக எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 897 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நடிகர் விவேக் ஒபராய் முகக் கவசம் இல்லாமல் பைக் ஓட்டியதால் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பருக்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. கொரோனாவுக்கு இதுவரை மும்பையில் 11,435 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மும்பை: எரிபொருள் விலை உயர்வு; குரல் கொடுக்காத அமிதாப், அக்‌ஷய்! - எச்சரிக்கும் காங்கிரஸ்

தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால் மாநகராட்சி அதிகாரிகளின் தீவிர சோதனையில் ஐந்து கொரோனா நோயாளிகள் இருக்கும் கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டுவருகின்றன. அந்த அடிப்படையில் இரண்டு நாள்களில் மட்டும் 1,305 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள். முலுண்ட் பகுதியில்தான் அதிக அளவு கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மீண்டும் பொதுமுடக்கத்தைக் கொண்டுவருவது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்ய மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 6,281 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. மும்பையில் மட்டும் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.18 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. 94 சதவிகிதம் பேர் குணமடைந்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா முழுக்க 21 லட்சம் பேர் வரைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே 50 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை மாநில தொழில் ஆலோசகர் டாக்டர் சுபாஷ் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா
கொரோனா

மேலும் வரும் ஒன்றாம் தேதியில் இருந்து மும்பை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவிருக்கிறது. அனைத்து கவுன்சிலர்களும் 50 வயதைக் கடந்தவர்கள் என்பதால், வயது அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படவிருக்கிறது. அதேசமயம், மகாராஷ்டிரா சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் மாநில அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. அரசியல்வாதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு