Election bannerElection banner
Published:Updated:

உச்சத்தில் கொரோனா... N95 முதல் துணி மாஸ்க் வரை... எது பாதுகாப்பானது?

Fight against Covid-19
Fight against Covid-19

மாஸ்க்குகளில் பல வகைகள் உண்டு... சாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் துணி மாஸ்க் முதல் N95 மாஸ்க் வரை இருக்கும் ரகங்களில் எது சிறந்தது? இவையிரண்டுக்குமான வித்தியாசம் என்ன?

உலகம் முழுக்க கோவிட் 19 எனும் கொடிய வைரசோடு ஓர் ஆண்டுக்கு மேலாக போராடி கொண்டிருக்கிறது. சீனா, நியூஸிலாந்து, தைவான், சிங்கப்பூர் போன்ற ஒரு சில நாடுகளே அதில் ஓரளவு வெற்றியாவது பெற்றிருக்கின்றன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் ஒரே நாளில் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை 3 லட்சத்தை தொடுகிறது. ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

முதல் தடுப்பூசி போட்ட பிறகும்கூட கொரோனா பாதிப்பு ஏற்படுவதால், சமூக இடைவெளி, கை கழுவுதல், மாஸ்க் அணிவது உள்ளிட்ட சுய பாதுகாப்பு விதிகளையே அதிகம் நம்பவேண்டியிருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாஸ்க்
மாஸ்க்

இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகள் கடந்த ஒரு வருடமாகவே மாஸ்க் அனைவதை கட்டாயமாக்கி உள்ளது. மனிதர்களின் முகமே மறந்து போகும் அளவு, மாஸ்க் நம் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது.

நார்வே போன்ற சில நாடுகள் மட்டுமே, மாஸ்க் அணிவதை ஆரம்பம் முதலே ஊக்கப்படுத்தவில்லை. அந்நாட்டின் சுகாதார அமைப்பு இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், ''இங்கு நோய் பரவும் வேகம், எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஒருவரை நோய் தொற்றிலிருந்து காக்க, 2 லட்சம் பேர் மாஸ்க் அணியவேண்டி உள்ளது. ஆகவே அனைவரும் மாஸ்க் அணிவதில் இருக்கும் பலனை விட செலவு மிக அதிகம்'' என தெரிவித்தது.

இஸ்ரேல் நாட்டில் ஓர் ஆண்டுக்கு முன், உடற்பயிற்சி தவிர வேறு எந்த விதமான செயல்பாடுகளுக்கும் மாஸ்க் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டது.

அங்கு தற்போது 80% மக்கள் முதல் மற்றும் இரண்டாவது கொரோனா தடுப்பூசிகளை பெற்று பாதுகாப்பாக உள்ளனர். இதனையடுத்து மக்கள் அனைவரும் இனி சுதந்திரமாக மாஸ்க் அணியாமல் வெளியே வரலாம் என அரசு அறிவித்துள்ளது.

டபுள் மாஸ்க்
டபுள் மாஸ்க்

அர்ஜென்ட்டினாவில் மருத்துவ பணியாளர்கள் தவிர மற்றவர்களுக்கு N95 மாஸ்க் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்படி மாஸ்க் குறித்து ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முடிவுகளை எடுக்கின்றன.

இந்நிலையில் மாஸ்குகளில் பல வகைகள் உண்டு... சாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் துணி மாஸ்க் முதல், N95 மாஸ்க் வரை இருக்கும் ரகங்களில் எது சிறந்தது, இவையிரண்டுக்குமான வித்தியாசம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

லான்சட் எனும் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கோவிட் 19 மிக அதிகமாகப் பரவுவது காற்றின் மூலமாகத்தான் எனக் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் N95 அல்லது KN95 மாஸ்க் அணிவது சிறந்தது என அமெரிக்க வல்லுநர் டாக்டர் ஃபாஹீம் யுனஸ் கருத்து தெரிவித்துள்ளார். இவர் மேரிலேண்ட் பல்கழைகத்தின் தொற்றுநோயியல் துறையின் தலைவர் ஆவார். மேலும் துணி மாஸ்குகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் இவர் அறிவுறுத்தியுள்ளார். இரண்டு N95 மாஸ்க் வாங்குங்கள், ஒரு நாளைக்கு ஒரு மாஸ்க் என மாற்றி மாற்றி பயன்படுத்துங்கள் என அவர் கூறியுள்ளார்.

N95 Mask
N95 Mask

காற்றில் பரவும் என்பதால், வெளியிலுள்ள காற்று முழுவதும் வைரஸ் நிறைந்தது என்பதல்ல. கோவிட் தொற்று உடையவர் இடமிருந்து இருமல், தும்மல், பேசுதல் மூலமாக வெளியேறிய வைரஸ் சில நேரம் காற்றில் அப்படியே அவ்விடத்தில் மிதக்கும். லான்சட் ஆய்வின்படி Silent transmission அதாவது, இருமல் தும்மல் இல்லாமல் கூட காற்றில் கலக்கும் கிருமிகளால் தான் 40% நோய் பரவுகிறது. இப்படியான தொற்றிற்கு எதிரான சிறப்பான பாதுகாப்பு மாஸ்க் மட்டுமே. இரண்டு மாஸ்க்குகளை அணுவதிலும் தவறில்லை. கூடுதல் பாதுகாப்புதான். ஆனால், இரண்டு மாஸ்க்குகள் கட்டாயம் என எந்த ஆய்வும் சொல்லவில்லை.

பெரும்பாலும் N95 மாஸ்குகள் ஒருமுறை பயன்பாட்டிற்காகவே தயாரிக்கபடுகின்றன. அவற்றை துவைத்து மறுபயன்பாடு செய்ய முடியாது. துவைக்கக்கூடிய N95 மாஸ்க் வாங்கினாலும் சுத்தம் செய்கையில், அதை மிகக் கவனமாக கையாள வேண்டும்.

N95 மாஸ்குகள் மிக அதிகமான பாதுகாப்பு அளிப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இரண்டாவது சிறப்பான மாஸ்க் சர்ஜிக்கள் மாஸ்க் என்றும், மூன்றாவதாக தான் துணி மாஸ்குகள் பயன்பாடு இருக்க வேண்டும் என்றே ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

இவையெல்லாவற்றையும் தாண்டி, ஒருவர் அணியும் மாஸ்க்கினை சரியாக அணிவதே கொரோனா வைரசிற்கு எதிரான சிறந்த பாதுகாப்பு என்கிறார்கள். உங்கள் முகத்திற்கு பொருத்தமான அளவில் ஃபிட் ஆகும் மாஸ்க்தான் சரியான மாஸ்க் என்பதே நிபுணர்களின் கருத்து.

தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது அறிவியல். இந்நிலையில் மாஸ்க் அணிவது என்பது காலத்தின் கட்டாயம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு