Published:Updated:

ஓர் ஆய்வகம் மட்டுமே 120 கோடி இந்தியர்களைக் காப்பாற்றுமா?!- கொரோனா குறித்து நாகை முன்னாள் எம்.எல்.ஏ

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை
நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை

கொரோனோ வைரஸைக் கண்டறியும் ஆய்வகங்கள் இந்தியாவில் எத்தனை இருக்கின்றன. அவைகள் நம் நாட்டு மக்களைக் காப்பாற்றுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் நாகை முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் உலகில் பெரும் நாடான சீனாவையே முடக்கியுள்ளது. இவ்வகை வைரஸைக் கண்டு உலகநாடுகள் அச்சத்தில் சிக்கி அதற்கான தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன. இந்த நிலையில் இந்தியா, சீனாவுக்கு உதவத் தயார் என தன் பங்குக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

நாகை முன்னாள் எம். எல்.ஏ.
 நிஜாமுதீன்.
நாகை முன்னாள் எம். எல்.ஏ. நிஜாமுதீன்.

அதே நேரத்தில் இந்தியாவிலும் சீனாவிலிருந்து இந்தியா வந்துள்ள வெகு சிலருக்கு கொரோனோ வைரஸ் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாகவும், சிலர் சந்தேகத்தின் பேரில் ஆய்வில் உள்ளதாகவும், கொரோனோ பாதிப்பு விவரங்களை வெளியில் தெரிவிக்கக் கூடாது என மருத்துவத்துறை ரகசியமாக உத்தரவிட்டுள்ளாகதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இதுபற்றி நாகை முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீனிடம் பேசினோம். ``சுமார் 120 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் கொரோனோ வைரஸைக் கண்டறியும் வசதிகொண்ட ஆய்வகங்கள் எத்தனை என்ற கேள்விக்குப் பதில் மிக அதிர்ச்சி தரும் வகையில் இருக்கிறது. ஏனென்றால் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகம் மட்டுமே இருக்கிறது. இது எப்படி 120 கோடி மக்கள்தொகை கொண்ட பரந்த நமது நாட்டுக்கு ஒரே ஆய்வகமாக செயல்பட முடியும்..? அதே நேரத்தில் சென்னை கிண்டியில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் கொரோனோ வைரஸ் கண்டறியும் வசதியே இல்லை என்பது வேதனையான விஷயம்.

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை
ஆய்வகம்
நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை ஆய்வகம்

கொரோனோ வைரஸ் ஆபத்தை எதிர்கொள்ள மத்திய - மாநில அரசுகள் தன்னை தயார்படுத்திக்கொள்ளவில்லை. மக்களை துச்சமாக நினைத்து மக்களின் உயிரோடு விளையாடுகின்றன என்பதுதான் வேதனை.

இவ்வளவு பெரிய ஆபத்து நெருங்கிவரும் நிலையில் கேரளாவில் உள்ள ஆலப்புழா வைரஸ் ஆய்வகம் மட்டுமே கொரோனோ வைரஸைக் கண்டறியும் வசதிகொண்டதாக மேம்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது. இது குறித்து மத்திய - மாநில அரசுகள் மக்களுக்குத் தெளிவான விளக்கத்தை வெளியிட வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு