Published:Updated:

மோடிக்கு கருமிளகு... எடப்பாடிக்கு கபசுரக் குடிநீர்! - பிரதமர், முதல்வரின் புதிய மெனு!

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

கொரோனாவை எதிர்கொள்வதற்காக பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் உணவு முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாம். அவை என்ன என விசாரித்தோம்.

கொரோனாவை எதிர்கொள்ள அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், இந்த விஷயத்தில் தனி மனிதர்கள் ஒவ்வொருவரின் பங்கும் மிக அவசியம். இதற்கேற்ப, பொது இடங்களில் இடைவெளியை கடைபிடிப்பது தொடங்கி, வீட்டில் அடிக்கடி சானிட்டைசர் போட்டு கைகளைக் கழுவுவது வரை ஒவ்வொருவரும் சுகாதாரம் பேணவும், கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கவும் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.

இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் என்ன செய்கின்றனர். கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள என்னென்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாள்கிறார்கள்? விவரம் அறிந்துகொள்ள பிரதமர் அலுவலகத்திலுள்ள சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடமும், சென்னை தலைமைச் செயலக வட்டாரத்திலும் பேசினோம். அதில் கிடைத்த தகவல்கள் இங்கே...

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாற்றமடைவதைத் தடுக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவைக் கண்காணிக்கவும் கொரோனா மீட்பு நடவடிக்கையை மேற்பார்வையிடவும் 11 பேர் கொண்ட சிறப்பு குழுவை பிரதமர் மோடி அமைத்துள்ளார். மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா ஒருங்கிணைப்பில் செயல்படும் இந்த டீமில், நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.பால், மத்திய சுற்றுச்சூழல்துறையின் செயலாளர் சி.கே.மிஸ்ரா, பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஷிர்கார் பர்தேசி, மயூர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உள்ளனர்.

கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, பிரதமரின் நம்பர் 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்திலேயே முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு வரும் பிரதமர், நள்ளிரவு இரண்டு மணி தாண்டியும் பணிகளைக் கண்காணித்துவிட்டுதான் உறங்கச் செல்கிறார். ஒருநாளைக்கு 18-19 மணிநேரம் உழைக்கிறார். மோடியின் உணவு முறை என்ன?

பிரதமர் அலுவலகத்திலுள்ள தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

மோடி
மோடி

̀̀`காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம் பழச்சாறுடன் இஞ்சியும் தேனும் கலந்த நீராகாரத்தைப் பருகுவார். முதுகு மேல்தடத்தை பலப்படுத்தி சுவாசத்தை அதிகரிக்க உதவும் அர்த பிஞ்ச மயூராசனம், நுரையீரலைப் பலப்படுத்தும் பூர்வோத்தாசனம், மன அழுத்தத்திலிருந்து விடுபடச் செய்யும் பாலாசனம் ஆகிய யோகாசனங்களை முடித்துவிட்டு, ஐந்து நிமிடம் யோக நித்ரா ஆசனத்தை மேற்கொள்வார். தினமும் இந்தப் பயிற்சி தொடர்கிறது. காலையில் சிறிது கோதுமை பிரெட்டுடன் பச்சைக் காய்கறிகளை உட்கொள்வார். 10 முதல் 11 மணிக்குள் முகாம் அலுவலகம் வரும் பிரதமர், பெரும்பாலும் நள்ளிரவு தாண்டிய பிறகுதான் உறங்கச் செல்கிறார். ஒருநாளைக்கு 300 பேரிடமாவது தொலைபேசியில் பேசிவிடுகிறார்.

கொரோனாவை எதிர்கொள்வதற்கு கருமிளகைப் பொடியாக இடித்து, டீ தூள் சாறு அல்லது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையுடன் கலந்து, தினமும் இருவேளை உட்கொள்வதை மோடி வழக்கமாக வைத்துள்ளார். இந்த கருமிளகு நீரை தன்னுடன் பணியாற்றுபவர்களும் அருந்த வேண்டுமென்று கட்டளையிட்டுள்ளார். பிரதமரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கேயே தங்கியுள்ளனர். வெளியிலிருந்து வரும் ஒருசிலருக்கு தினமும் காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என சோதிக்கப்படுகிறது” என்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மோடிக்கு கருமிளகு என்றால், முதல்வர் எடப்பாடிக்கு கபசுர குடிநீர். முதல்வருக்கு நெருக்கமான ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், ``தினமும் காலை எழுந்தவுடன் சிறு நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, சோறு வடித்த நீரில் மோர் கலந்து ஒரு டம்ளர் பருகுவது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வழக்கம். காலை அல்லது மதிய உணவில் பிரண்டைத் துவையல் அல்லது சட்னி இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். தினமும் ஒரு ஸ்பூன் கபசுர சூரணத்தை இரண்டு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து, அதை வடிகட்டி உட்கொள்கிறார். இந்த நெருக்கடியான சூழலில் முதல்வருக்கு யார் மூலமாகவும் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம். அவர் எங்களைவிட முன்னெச்சரிக்கையாக இருக்கிறார். வெளியே கிளம்புவதற்கு முன்னர் தேங்காய் எண்ணெய்யை சிறிதளவு எடுத்து, தன் கை, கால்களில் நன்றாக தேய்த்துக்கொள்கிறார். இதனால் தோலில் கிருமி தங்காது என நம்புகிறார்” என்றார்.

கொரோனாவுக்கு ஆயுர்வேத, சித்த மருந்துகள் எடுத்துக்கொள்வது குறித்து இந்தியாவின் மூத்த ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவர்களுடன் பிரதமர் மோடி அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பிரதமருடன் கலந்துரையாடிய மூத்த சித்த மருத்துவர் ஜெய் பிரகாஷ் நாராயணிடம் பேசினோம். நம் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் அப்படியே இங்கே...

(இதில் கூறப்பட்டிருக்கும் பதில்கள் அனைத்தும் மருத்துவரின் கருத்துகளே. அரசு இதுவரை கொரோனாவிற்கான சிகிச்சை முறைகளில் சித்த மருத்துவம் குறித்தோ, அவற்றின் பலன்கள் குறித்தோ எதுவும் அதிகாரபூர்வமாக, அறிவியல் பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பதை இங்கே குறிப்பிட்டு காட்டுகிறோம்.)

̀`பிரதமருக்கு நீங்கள் அளித்த ஆலோசனை என்ன?"

``தமிழ்நாட்டில் டெங்கு பரவியபோது, வீதி வீதியாகச் சென்று நிலவேம்புக் கஷாயத்தை வழங்கினோம். கொரோனா வைரஸுக்கு ஏற்ற மருந்து கபசுரக் குடிநீர்தான். கடுக்காய், சீந்தில், பற்பாடகம் எனப் 15 மூலிகைகளை ஒன்றுசேர்த்து இந்தச் சூரணம் தயாரிக்கப்படுகிறது. இதைப் பொதுமக்கள் பருகக் கொடுக்க வேண்டுமென்று கூறினேன். அமைச்சர் விஜயபாஸ்கரும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷும் மேற்கத்திய மருத்துவம் பயின்றவர்கள். ஆயுஷ் மருத்துவர்கள் அளிக்கும் ஆலோசனைகளை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நீங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, சித்த மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்குமாறு கூற வேண்டும் என்று பிரதமரிடம் கூறினேன்."

ஜெய் பிரகாஷ் நாராயண்
ஜெய் பிரகாஷ் நாராயண்

``என்னது... கபசுரக் குடிநீர்தான் கொரோனாவுக்கு மருந்தா?"

``முதல் இரண்டு வாரத்துக்கு இதை முன்னெச்சரிக்கை மருந்தாகவே உட்கொள்ளலாம். ஒரு ஸ்பூன் கபசுர சூரணத்தை இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அரை டம்ளர் நீராகும் அளவுக்கு காய்ச்சிக்கொள்ள வேண்டும். பெரியவர்கள் இதை அப்படியே குடிக்கலாம். 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களாக இருந்தால், கால் டம்ளர் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு அரைச் சங்கு அளவு கொடுக்க வேண்டும். தினமும் ஒருவேளை மட்டும் பருகினால் போதுமானது. சளி, இருமல் தொல்லை இருந்தால் நாளொன்றுக்கு இரண்டு முறை குடிக்கலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பன்மடங்கு கூடும்."

``கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களும் இதைக் குடித்தால், நோயிலிருந்து விடுபடலாம் என்கிறீர்களா?"

``கபசுரக் குடிநீருடன் இன்னும் பிற மூலிகைகளையும் சேர்த்துக் கொடுத்தால் கொரோனா பாதித்தவர்களும் விடுபடும் வாய்ப்புண்டு. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப இந்த மூலிகைகள் இணைத்துக் கொள்வது மாறுபடும். நிலவேம்புக் கஷாயத்தைக் கொடுத்தது போல, கபசுரக் குடிநீரையும் ஒரு இயக்கமாக நடத்தி மக்களுக்கு அருந்தக் கொடுத்தால், கொரோனா அச்சுறுத்தல் இருக்காது."

அடுத்த கட்டுரைக்கு