Published:Updated:

N95 மாஸ்க், பல்ஸ்ஆக்ஸி மீட்டர்... கொரோனா மருத்துவப் பொருள்களின் விலையைக் குறைத்த பினராயி விஜயன்!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தொற்றுப் பரவல் அதிகம் உள்ள நான்கு மாவட்டங்களில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. நாளொன்றுக்குச் சராசரியாக 30 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

முழு ஊரடங்கும் அமலில் இருந்தபோதிலும் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது. எனவே இன்று முதல் (மே 17) இந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி தொற்றுப் பரவல் அதிகம் உள்ள இந்த மாவட்டங்களில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, கொரோனா சிகிச்சைக்கான மருத்துவப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் விலை நிர்ணயச் சட்டம் (1986)-ன் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதன்படி பிபிஇ கிட், என்95 முகக் கவசம், பிளாஸ்டிக் முகத் தடுப்புகள், சானிடைசர் உள்ளிட்ட கொரோனா மருத்துவ பொருள்களின் விலை கணிசமாகக் குறைகின்றன.

கள்ளச் சந்தையில் பொருள்கள் விற்கப்படுவதைத் தடுக்கவும், வியாபாரிகள் லாபம் கொழிப்பதைத் தடுக்கவும் இது வழிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதுகாப்பு
கொரோனா பாதுகாப்பு

அத்தியாவசியப் பொருட்கள் விலை நிர்ணயச் சட்டம் (1986)-ன் கீழ் கொண்டுவரப்பட்ட கொரோனா மருத்துவப் பொருள்களின் விலை நிலவரம்

பிபிஇ கிட் – ரூ. 273

என்95 முகக் கவசம் – ரூ.22

மூன்று அடுக்கு முகக் கவசம் – ரூ.3.90

பிளாஸ்டிக் முகத் தடுப்பு – ரூ.21

மேல் அங்கி – ரூ.12

சிகிச்சை கவுன் – ரூ.65

ஆய்வுக் கையுறைகள் – ரூ.5.75

சானிடைசர் – ரூ.192 (500 மி.லி); ரூ.98 (200 மி.லி.); ரூ.55 (100 மி.லி)

கையுறைகள் (ஒரு ஜோடி) – ரூ.15

என்.ஆர்.பி. முகக்கவசம் – ரூ.80

ஆக்ஸிஜன் முகக்கவசம் – ரூ.54

பல்ஸ் ஆக்ஸிமீட்டர் – ரூ.1500

இன்று முதல் (மே 17) 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டு, 84 நாள்கள் முடித்த பின்னரே இரண்டாவது டோஸ் போடப்படும்.

அடுத்த கட்டுரைக்கு