Published:Updated:

`சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் சார்ஸ் நோய்!' -உச்சகட்ட அலர்ட்டில் உலக நாடுகள்

சீனா
சீனா

சீனாவின் வுகான் நகரத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது என்றும், கூடுதல் எண்ணிக்கையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

2003-ம் ஆண்டு சீனாவை அச்சுறுத்தியது சார்ஸ் நோய். ஒரு வகை வைரஸால் பரவும் இந்த நோய் சுவாச மண்டலத்தைத் தாக்கும் தன்மையுடையது. சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் 37 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. சார்ஸ் நோயால் 8,098 பேர் பாதிக்கப்பட்டனர், 774 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே வகையான வைரஸின் தாக்கம் சீனாவில் ஊருடுவியுள்ளது.

respiratiory problem
respiratiory problem
Pixabay

கொரோனா வைரஸ் (Corona virus) என்று அழைக்கப்படும் இந்த வைரஸானது நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் கிருமிகள் காற்றில் பரவும் தன்மை கொண்டதால், ஒரே நேரத்தில் பலருக்கும் தொற்று ஏற்படும். பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும், சளியைக் காறித் துப்பும்போதும் இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதை சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.

ஒரு மனிதரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மையுடைய இது, விலங்குகளிடமிருந்து பரவுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், லண்டன் இம்பீரியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் சர்வதேச தொற்றுநோய்கள் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 1,723 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Travel
Travel

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சீனாவின் வுகான் நகரத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது என்றும், கூடுதல் எண்ணிக்கையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர் என்றும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சீனாவிலிருந்து ஜப்பானுக்கும் தாய்லாந்துக்கும் சென்ற இருவருக்கு இதே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் அந்தந்த நாடுகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சீனாவிலிருந்து சர்வதேச விமானங்களில் பயணிப்பவர்களால் இந்த நோய் மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Virus
Virus
Pixabay

சீன நாட்டின் முக்கியக் கொண்டாட்டங்களில் ஒன்றான புத்தாண்டு இன்னும் சில தினங்களில் வரவுள்ளதால், 44 கோடி பேர் ரயில்கள் மூலமும் 7.9 கோடி பேர் விமானங்களின் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கும், வேறு நாடுகளுக்கும் பயணிப்பார்கள். இதனால் இந்த நோயின் தாக்கம் மேலும் பரவலாம் என்று அந்நாட்டு அரசு அச்சம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், ``சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவ வாய்ப்பில்லை. தமிழக சுகாதாரத் துறை சிறப்பாகச் செயல்பட்டு பல்வேறு நோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்தியுள்ளது. இருப்பினும் கூடுதல் கண்காணிப்புக்காக சீனாவிலிருந்து தமிழகத்துக்கு வரும் விமானப் பயணிகளுக்கு வைரஸ் தொற்று குறித்த சோதனை செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

உங்க வீட்டு நாய்க்குட்டிக்கு உடம்பு சரியில்லையா?- `கோரோனா வைரஸ்’ டெஸ்ட் பண்ணுங்க
பின் செல்ல