Published:Updated:

"ஆரம்பத்தில் உள்ளே இருங்கன்னு சொல்லிட்டு இப்போ எல்லாத்தையும் திறந்துவிட்டா எப்படி?"- மக்களின் கேள்விக்கு என்ன பதில்?

ஊரடங்கு
ஊரடங்கு

"இப்ப கொரோனா பரவாதா? இதுக்கு எதுக்கு ரெண்டு மாசம் இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிச்சு வீட்டுக்குள்ள வெச்சுருந்தாங்கனு தெரியல."

கொரோனா பரவலில் உலகளவில் பத்தாவது இடத்திலிருந்த இந்தியா, இப்போது ஏழாவது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களைவிட தீவிரமாகத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை அடிப்படையாகக்கொண்டு, தமிழக மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டங்களாகப் பிரித்துள்ளார்கள். "தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் எனக் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் மீண்டும் இப்போது இருக்கும் இதே ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மற்ற மாவட்டங்கள் ஏழு மண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஏழு மாவட்டங்களில் தளர்வுகளோடு ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படும்" என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது .

கொரோனா ஊரடங்கு ஒரு வாகனத்தில் 4 பேர் பயணம்
கொரோனா ஊரடங்கு ஒரு வாகனத்தில் 4 பேர் பயணம்

மண்டலங்களுக்குள் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகளையும் 50 சதவிகிதப் பயணிகளுடன் மண்டலங்களுக்குள் இயக்கலாம் என அரசு அனுமதி கொடுத்திருந்தாலும், கட்டணங்கள் கட்டுப்படியாகாது என அவற்றின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்திற்குச் செல்ல சில ரயில்கள் இயக்கப்படுகின்றன. தளர்வுகள் விதிக்கப்பட்டு போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டாலும் மக்களின் மனநிலை என்ன? பொதுவெளியில் நடமாடவும், பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தவும் மக்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள பொதுமக்கள் சிலரிடம் பேசினோம்.

"கொரோனா வந்தா உசுரு போயிரும். கொத்துக் கொத்தா சாவு விழுகும்னு சொல்லி பயம் காட்டிடாங்கம்மா. எங்க ஊருல யாருக்குமே கொரோனா இல்லை. ஆனாலும் அவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்துச்சு. ஆனா, இப்போ நிறைய பேருக்குக் கொரோனா பரவியிருக்கு. இந்த நேரத்தில் தளர்வுகள்னு சொல்லி பஸ் விடுறாங்க. இப்ப கொரோனா பரவாதா? இதுக்கு எதுக்கு ரெண்டு மாசம் இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிச்சு வீட்டுக்குள்ள வெச்சுருந்தாங்கனு தெரியல" எனக் கோபமாகத் தொடங்குகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சரளா.

"எங்க கிராமத்துல இருந்து தினமும் பஸ்ஸுல விழுப்புரத்துக்கு வந்து சந்தையில் காய்கறி வியாபாரம் பார்த்துட்டு இருக்கேன். கொரோனா பரவ ஆரம்பிச்ச பிறகு ஊரடங்கு விதிக்கப்பட்டதால் தினமும் குட்டியானை வண்டியில வந்துதான் வியாபாரம் பாக்குறேன். ஒரு நாளைக்குப் போக்குவரத்துக்கே 250 ரூபாய்க்கு மேல செலவாகிட்டு இருக்கு. இந்த நேரத்துல தளர்வுகள்னு சொல்லி பஸ்சு போகும்னு சொன்னது சந்தோஷமாதான் இருக்கு. செலவு கம்மியாகும். ஆனா பயமா இருக்கு தாயீ. கொரோனா வந்துருச்சுனா என்ன பண்றது. அதான் இன்னும் கொஞ்ச நாளைக்கு பஸ்ல போக வேண்டாம்னு புள்ளைங்க சொல்லிருச்சுங்க. பஸ்ல போறதுக்குப் பதிலா ரெண்டு ரெண்டு பேரா வண்டியில கூட போயிறலாம். காசை விட உசுரு தானம்மா முக்கியம்" என்கிறார் சரளா அக்கா.

ஆனந்த்
ஆனந்த்

சென்னையில் தங்கி போட்டித்தேர்வுகளுக்குத் தயார் செய்துகொண்டிருந்த ஆனந்திடம் பேசினோம்.

"எனக்குச் சொந்த ஊரு விருதுநகர். இரண்டு வருஷமா சென்னையில தங்கி நெட் தேர்வுக்குத் தயார் செஞ்சுட்டு இருந்தேன். கொரோனாவுக்காக முதல் ஊரடங்கு அறிவிப்பு வந்ததுமே, பைக் எடுத்துட்டு சொந்த ஊருக்கு வந்துட்டேன். ஆனா இப்பவும் சென்னையில் நான் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு வாடகை கொடுத்துக்கிட்டுதான் இருக்கேன். இப்போதைக்கு சென்னைக்கு எந்தப் பொதுப் போக்குவரத்தும் கிடையாது. அப்படியே இருந்தாலும் இப்போதைக்குச் சென்னைக்கு வர்ற ஐடியாவும் இல்ல. சென்னைக்கு வந்தா மூணு நேரமும் கடையில்தான் சாப்பிடணும். பொது போக்குவரத்தைப் பயன்படுத்துற மாதிரி இருக்கும். அதுனால இன்னும் ஆறுமாசத்துக்கு சொந்த ஊரில்தான் இருக்கணும்னு முடிவு பண்ணியாச்சு. கடந்த இரண்டு மாதங்களைவிட, இப்போதான் கொரோனா அதிகமாக பரவ ஆரம்பிச்சுருக்கு. இந்த நேரத்தில் தளர்வுகள் அறிவிச்சா இன்னும் கொரோனா பரவல் அதிகமாகத்தான் செய்யும். அது இன்னும் அடுத்தடுத்த ஊரடங்கிற்கு வழிவகுக்கும். அரசாங்கம் என்ன முடிவுனாலும் எடுக்கட்டும், நம்முடைய பாதுக்காப்பை நாமதான் உறுதி செஞ்சுக்கணும். முடிஞ்ச வரை பாதுகாப்பாக இருப்போம்" என்கிறார் ஆனந்த்.

"எனக்குச் சொந்த ஊரு கும்பகோணம். சென்னையில் தங்கி வேலைபார்த்துட்டு இருந்தேன். கொரோனாவுக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுமே சொந்த ஊருக்குப் போயிட்டேன். முழுசா ரெண்டு மாசம் ஆச்சு. தனியார் நிறுவனம் என்பதால் சம்பளம் கொடுக்கல. அதேநேரம் ஹாஸ்டலுக்கு வாடகை கொடுக்க வேண்டிய சூழல். ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்துச்சு. ஆனாலும் பாதுகாப்பா இருக்குற மனநிலை இருந்துச்சு. இப்போ அடுத்த கட்ட ஊடரங்கு அறிவிக்கப்படலாம்னு சொன்னவுடனே எங்க நிறுவனத்திலிருந்து போன் பண்ணி வேலைக்கு வரச் சொல்லிட்டாங்க. வீட்டில், அதெல்லாம் போக வேண்டாம். கொரோனா முடியட்டும் பாத்துக்கலாம்னு சொன்னாங்க. ஆனா வீட்டுக்குப் பாரமா இருக்க விரும்பல. என்னோட சம்பளமும் என் குடும்பத்துக்கு ரொம்ப அவசியமான ஒண்ணு. அதனால் உயிரைப்பணயம் வெச்சு சென்னை வர முடிவு பண்ணேன்.

சுங்கம் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்டிருக்கும் அரசு பேருந்துகள்
சுங்கம் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்டிருக்கும் அரசு பேருந்துகள்

இ- பாஸ் வாங்கிட்டு, மூணு ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்து 20,000 ரூபாய் செலவழிச்சு கார்ல சென்னை வந்துட்டோம். சென்னையில் வெளிய போகவே பயமா இருக்கு. லோக்கல் ட்ரெயின் ஓடாததால் தினமும் ஆட்டோவுக்கே 200 ரூபாய் செலவழிக்கிற மாதிரி இருக்கு. வெளி இடங்களில் சாப்பிட, கழிப்பறைகள் பயன்படுத்த தயக்கமா இருக்கு. ஆனாலும் தொடர்ந்து வேலையில இருக்கணும்னா இதெல்லாம் ஏத்துக்கிட்டுதான் ஆகணும். அரசு சொன்ன மாதிரி கொரோனா கூட வாழப் பழகிக்க வேண்டியதுதான்" என்கிறார் சென்னையில் தங்கி பணிபுரியும் சுபிதா.

சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்த வைரவன், "எங்க ஏரியாவுல கொரோனா பாதிப்பு ரொம்பவே அதிகமா இருக்கு. நான் பில்டிங் கான்ட்ராக்டரா வேலை பார்த்துட்டு இருக்கேன். ரெண்டு மாசமா வேலையே இல்ல. ரொம்ப மன அழுத்தமா இருக்கு. வீட்டை விட்டு வெளியே வந்து யார்கிட்டையும் பேசக்கூட பயமா இருக்கு. எனக்கு இப்படினா என் ஃப்ரெண்ட்க்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் கொரோனாவால் தள்ளிப் போயிருச்சு. இந்தக் கொரோனா மக்களோட வாழ்க்கையைப் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல... மனரீதியாகவும் ரொம்பவே பாதிச்சுருச்சு.

`நான் என்னை முன்னிலைப்படுத்தவில்லை..!’ - கொரோனா விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி

கொரோனாவோட தாக்கம் சென்னையில நாளுக்கு நாள் அதிகமாயிட்டு இருக்கு. கொரோனா இருக்குமோனு சந்தேகத்தோட மருத்துவமனைக்குப் போனாகூட அறிகுறி இல்லைனா வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கோங்கனு சொல்லி அனுப்பி வெச்சுறாங்களாம். இப்படியிருக்கும்போது சகஜ நிலைக்கு வாங்கனு அரசாங்கம் சொல்றதை எப்படி ஏத்துக்க முடியும். ஆரம்பத்தில் ரொம்ப பயத்தை ஏற்படுத்திட்டு, இப்போ கொரோனா உயிர்க்கொல்லி இல்ல, அதிலிருந்து மீளமுடியும், கொரோனாவோட வாழப்பழகிக்கோங்கனு ரொம்ப சாதாரணமா சொல்றது என்ன நியாயம். சென்னைக்கு இன்னும் பஸ் விடல. ஆனாலும் கார், பைக்குனு மக்கள் வேற வேற ஊர்களிலிருந்து வர ஆரம்பிச்சுட்டாங்க. ஆரம்பத்தில் இ- பாஸ் வாங்க பயங்கர கட்டுப்பாடுகள் இருந்துச்சு இப்ப அப்படியில்ல .இது இன்னும் கொரோனா பாதிப்பை அதிகரிக்கத்தான் செய்யும்.

தளர்வுகள் விதிக்கப்பட்டது சரி, வெளியே வர்ற மக்கள் பாதுக்காப்பா இருக்கணும்னா மாஸ்க் க்ளவுஸ், சானிட்டைசர் வேணும். இதெல்லாம் 20 ரூபாய், 30 ரூபாய்னு இஷ்டத்துக்கு விலைவெச்சு விக்கிறாங்க. சாப்பாட்டுக்கே மக்கள் சிரமப்படும் போது இதெல்லாம் எங்க சாத்தியம் சொல்லுங்க. விழிப்புணர்வுக்கு பேப்பர் பேப்பரா விளம்பரம் கொடுக்குற அரசாங்கம் மக்களுக்கு குறைவான விலையில் மாஸ்க், க்ளவுஸ் கொடுக்கலாம். எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்காமல் தளர்வுகள் கொடுக்கிறது, கொரோனாவின் பாதிப்பை இன்னும் அதிகரிக்கத்தான் வழிவகுக்கும். பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில் எல்லாமே இயல்பு நிலைக்குத் திரும்புறது ரொம்ப அவசியமான ஒன்றுதான். அதுக்காக மக்களோட உயிர் கூட விளையாட முடியாதுல. ஊரடங்கு, தளர்வுகள் இதையெல்லாம் தாண்டி, மக்களோட உயிரைக் காப்பாத்துணுங்கிற தார்மிகப் பொறுப்பு அரசுக்கு இருக்குங்கிறதை உணர்ந்து சராசரி மக்களுக்கும் வழிகாட்டினால் மட்டுமே தமிழகம் கொரோனாவில் இருந்து மீளும்" என்கிறார்.

வைரவன்
வைரவன்

விழுப்புரத்தைச் சேர்ந்த இல்லத்தரசி லோகாவிடம் பேசினோம். "காய்கறிக்கடைகள், பலசரக்கு கடைகளுக்கு தளர்வு விதிக்கப்பட்டது கொஞ்சம் மனநிறைவா இருக்கு. ஆனாலும் தினமும் கடைக்குப் போகவோ, மக்கள்கூட சேர்ந்து நிக்கவோ பயமாத்தான் இருக்கு. ஒரு ஊரிலிருந்து ஒரு ஊருக்குப் போகலாம்னு அரசாங்கம் சொன்னாலும், நமக்குக் கொரோனா வந்தா நாமதான கஷ்டப்படணும், வீட்டுல குழந்தைகள் இருக்காங்க. அதனால் தேவையில்லாமல் நாங்க யாரும் வெளியவே போறதே இல்ல. நமக்கு மூணு நேரச் சாப்பாட்டுக்கு வழி இருக்கு... வீட்டில் இருக்கோம். ஆனால் அன்றாடப் பொழப்புக்காக வெளியே வர்ற ஜனங்க நிலைமையை நினைச்சாதான் பயமா இருக்கு. வாழ்வாதாரத்துக்காக வெளிய வர்ற மக்களைத் தடுக்க முடியாதுதான். அவர்களுக்காக தளர்வுகள் கொடுக்கப்படுவதை ஆதரிக்கலாம்தான். ஆனாலும், அரசாங்கம் சொல்ற விதிகளைக் கண்டிப்பா கடைப்பிடிக்கணுங்கிறதை வற்புறுத்தனும். மக்களும் அதைக் கடைப்பிடிக்கணும்" என்கிறார்.

பாதுகாப்பாய் இருப்போம் மக்களே... நம் பாதுகாப்பு நம் கையில்!

அடுத்த கட்டுரைக்கு