Published:Updated:

நீலகிரி: `கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி முடித்த முதல் மாவட்டம்!’ - நம்பிக்கை பகிரும் கலெக்டர்

தமிழ்நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் 100 சதவிகிதம் செலுத்திய முதல் மாவட்டமாக நீலகிரி மாறியிருப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் கோடை வாசஸ்தலமாகவும், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களோடு எல்லைகளைப் பகிரும் மலை மாவட்டமாகவும் விளங்கிவரும் நீலகிரி மாவட்டம், கொரோனா பரவலைத் தடுக்க, கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றிவரும் முன்னோடி மாவட்டமாக இருக்கிறது. அதேபோல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலும் முன்னோடி மாவட்டமாக இருக்கிறதுது.

தடுப்பூசி
தடுப்பூசி

நாட்டிலேயே பழங்குடி மக்களுக்கு 100 சதவிகித கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற நம்பிக்கையை பெற்ற இந்த மாவட்ட நிர்வாகத்தின் அடுத்த சாதனையாக தமிழ்நாட்டிலேயே கொரோன தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்ட முதல் மாவட்டம் என்ற நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது.

இந்தச் சாதனை குறித்துப் பகிர்ந்துகொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``நமது மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதி வாய்ந்தவர்களாக 5,21,060 பேர் உள்ளனர். இவர்களில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மூன்று மாத காலம் நிறைவடையாமல் இருப்பவர்களான 6,277 நபர்களை தவிர்த்து மீதமுள்ள 5,14,783 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக 12-ம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாமில் மட்டும் 29,760 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மெகா தடுப்பூசி முகாம் ரவுண்ட்அப்: இலக்கைத் தாண்டிய கோவை, திருச்சியின் ஊராட்சி 100%, மதுரை 5-ம் இடம்!

தமிழக முதல்வர் நமது மாவட்டத்துக்கு அதிக அளவிலான தடுப்பூசி வழங்கியதாலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் ஊக்குவிப்பாலும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி 100 சதவிகிதம் செலுத்தப்பட்டு, தற்போது தமிழகத்தின் முதல் மாவட்டமாக நீலகிரி மாறியிருக்கிறது. சுகாதாரத்துறை உட்பட அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியதால்தான் இலக்கை அடைய முடிந்தது.

நீலகிரி மாவட்டம், 100 சதவிகித இலக்கை எட்ட சிறப்பாகப் பணியாற்றிய அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டுகள். அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் முழுமையாகச் செலுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது" என்றார்.

தடுப்பூசி
தடுப்பூசி

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், ``இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே 97 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தபட்டது. மது அருந்துவோர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில்லை என்ற தகவல் வெளியானது. இதனால் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிவது எளிதாக இருந்தது. அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு 100 சதவிகித இலக்கை எட்டியிருக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு