Published:Updated:

கொரோனாவை வென்ற தமிழகத்தின் முதல் மாவட்டம்.. மீண்ட நீலகிரி- மகிழ்ச்சியில் மக்கள்

Testing Corona
Testing Corona

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 9-வது நபரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ள நபர்கள் எவரும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு மீண்ட முதல் மாவட்டமாக நீலகிரி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத்துவங்கியபோதே நீலகிரி மாவட்டத்தில் நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கொரோனா
கொரோனா

மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டன. சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டது. மார்ச் மாத துவக்கத்திலிருந்து வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

வெளியூர்களிலிருந்து மாவட்டத்துக்குள் வந்தவர்கள் எண்ணிக்கை 1,471 ஆக இருந்தது. சுகாதாரத்துறையினர் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஒரு ஸ்டிக்கரை ஒட்டினர். வெளியூரிலிருந்து வந்தவர்கள் யாரும் 28 நாள்கள் வெளியில் வர கடுமையான தடை விதிக்கப்பட்டது. வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

Ooty
Ooty

இந்தச் சூழலில் நீலகிரியிலிருந்து டெல்லி சென்று வந்த 8 பேரில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. சில நாள்கள் கழித்து அவர்களது உறவினர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நீலகிரியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

இவர்கள் அனைவரும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வசித்துவந்த ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.

Ooty Market
Ooty Market

இந்த நிலையில், வீட்டுக் கண்காணிப்பில் இருந்தவர்களின் கண்காணிப்பு காலம் அவர்கள் மாவட்டத்துக்குள் வந்த நாள்களைப் பொறுத்து குறைந்துகொண்டே வந்தது. படிப்படியாக குறைந்துகொண்டே வந்த நிலையில், கடந்த 23-ம் தேதியுடன் 1,471 பேரின் வீட்டுக் கண்காணிப்பு காலமும் முடிந்தது.

இதன் மூலம் புதிதாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் யாரும் இல்லை. இதனிடையே, நீலகிரி மாவட்டத்திலிருந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 பேரில் 8 பேர் படிப்படியாக குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

Ooty  temporary GH
Ooty temporary GH

ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று அந்த ஒரு நபரும் குணமடைந்து வீடு திரும்பினார். இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த முதல் மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளது. இதனால் நீலகிரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது ``மேற்கண்ட நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து 28 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தற்போது தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ள பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். நீலகிரி மாவட்ட மக்கள் முழு ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்.

nilgiris collector innocent divya
nilgiris collector innocent divya

தொடர்ந்து இதற்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு