Published:Updated:

` சீனாவிலிருந்து ஊட்டிக்கு வந்த 7 பேர்!' -கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டும் நீலகிரி மருத்துவக்குழு

corona virus
corona virus

சீனாவிலிருந்து நீலகிரிக்கு வந்த 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. அதேநேரம், 5 மருத்துவக் குழுவினருடன் எல்லையோர சோதனைச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

`சீனாவிலிருந்து நீலகிரிக்கு வந்த 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. அதேநேரம், எல்லையோர சோதனைச் சாவடிகளில் 5 மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். நீலகிரிக்குச் சுற்றுலா வருபவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்' என்கிறார் மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்காக தனி வார்டு
கொரோனா வைரஸ் பாதிப்புக்காக தனி வார்டு

சீனாவின் வுகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் எனும் உயிர்க்கொல்லி நோய், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் உள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களை மீட்கும் பணியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.

மருத்துவக் குழுவினரின் சோதனை
மருத்துவக் குழுவினரின் சோதனை

இந்த நிலையில், சீனாவிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு இதுவரை 7 பேர் வந்துள்ளனர். இதில் 4 பேர் மாணவர்கள், 3 பேர் மாணவர்களின் பெற்றோர்கள். இவர்கள் அனைவரும் வுகான் மாநிலத்திலிருந்து சுமார் 600 கி.மீ தொலைவிலிருந்து வந்துள்ளனர். இவர்களிடம் நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறையினர் தீவிரப் பரிசோதனை மேற்கொண்டனர். இந்தப் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதி செய்தனர். இருப்பினும் மருத்துவக் குழுவினர் காலை, மாலை என இருவேளைகளும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று பரிசோதனை செய்வதுடன் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

`12 பேருக்கு நெகட்டிவ்; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை!' - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் தடுப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி கூறுகையில், ``சீனாவிலிருந்து 7 பேர் நீலகிரிக்குத் திரும்பியுள்ளனர். இவர்கள் கூடலூர், கல்லட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. மருத்துவக் குழுவினர் நாள்தோறும் இவர்களுக்குப் பரிசோதனை மேற்கொண்டு தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் நாடுகாணி, சோலாடி, தாளூர், நம்பியார்குன்னு மற்றும் பாட்டவயல் ஆகிய 5 எல்லையோரச் சோதனைச் சாவடிகளில் 5 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ உபகரணங்கள்
மருத்துவ உபகரணங்கள்

கேரள மாநிலத்திலிருந்து நீலகிரிக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு சாதாரணக் காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் உரிய பரிசோதனைகள் செய்த பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஊட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 12 படுக்கைகள் கொண்ட வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, படகு இல்லம், தாவரவியல் பூங்கா உட்பட மக்கள் கூடும் பகுதிகள், மருத்துவமனைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன" என்றார்.

அண்டை மாநிலமான கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீலகிரியில் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

`48 மணிநேரத்தில் சீரானது !’- கொரோனா நோயாளியைக் குணமாக்கியதாக அறிவித்த தாய்லாந்து மருத்துவர்கள்
அடுத்த கட்டுரைக்கு