Published:Updated:

`வீட்டுக் கண்காணிப்பில் யாரும் இல்லை... புதிய தொற்றும் இல்லை!’ -மீண்டு வரும் நீலகிரி #CoronaUpdate

Corona
Corona

இரண்டு பேர் மட்டுமே கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களும் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 1,471 பேரின் வீட்டுக் கண்காணிப்புக் காலம் முடிந்ததால், தற்போது ஒருவர்கூட வீட்டுக் கண்காணிப்பில் இல்லை.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
மாதிரிப் படம்

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடிவரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக ஒரே ஆயுதமாக ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா நகரான நீலகிரியில், கொரோனா குறித்த அச்சம் அதிகமாகவே இருந்தது. அதேபோல ஆரம்பமே நான்கு பேருடன் நீலகிரி கணக்கைத் தொடங்கியது. நான்கு ஏழானது, பின்னர் ஏழு ஒன்பதாக மாறியது. இதனால் மக்கள் அஞ்சினர்.

Ooty  temporary GH
Ooty temporary GH

எந்த அச்சமும் இன்றி, மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் வேகமெடுத்துக் களமிறங்கினர். கேரளா மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதிகளில் அதிகக் கவனம் செலுத்தினர்.

ஒரு மாதத்திற்கு முன்னதாக, நீலகிரி மாவட்டத்திற்கு வந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. குறிப்பாக, வெளி நாடுகள் மற்றும் வெளியூர்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வந்தவர்களின் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டன. அதன்படி, வெளியூர்களிலிருந்து மாவட்டத்திற்குள் வந்தவர்களின் எண்ணிக்கை 1,471 ஆக இருந்தது. இவர்களின் பெயர்கள் சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்டன. சுகாதாரத்துறையினர், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஒரு ஸ்டிக்கரை ஒட்டினர்.

ooty botanical garden
ooty botanical garden

வெளியூரிலிருந்து வந்த அவர்கள் யாரும் 28 நாள்களுக்குள் வெளியில் வரக் கடுமையான தடை விதிக்கப்பட்டது. வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு நாள்தோறும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. வீட்டிலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி, அவர்களிடம் சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீஸார், நாள்தோறும் நலம் விசாரித்துவந்தனர்.

இந்நிலையில், அவர்களின் வீட்டுக் கண்காணிப்புக் காலம், அவர்கள் மாவட்டத்திற்குள் வந்த நாள்களைப் பொறுத்து குறைந்து கொண்டேவந்தது. படிப்படியாகக் குறைந்து கொண்டேவந்த நிலையில், நேற்று முதல் 1,471 பேரின் வீட்டுக் கண்காணிப்புக் காலம் முடிந்தது. இதன்மூலம், வெளியூர் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள், தற்போது நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக் கண்காணிப்பில் யாரும் இல்லை.

Innocent Divya
Innocent Divya

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நீலகிரி மாவட்டத்திலிருந்து கோவை அழைத்துச்செல்லப்பட்ட 9 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது, இரண்டு பேர் மட்டுமே கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களும் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், நீலகிரி மாவட்டம் மஞ்சள் மண்டலத்திலிருந்து பச்சை மண்டலத்திற்குச் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு