Published:Updated:

`21 நாள் ஊரடங்கு; தினக்கூலிகளின் நிலை என்ன?’ - டெல்லி முதல்வரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களைக் கிடைக்கச் செய்வது எங்களுடைய பொறுப்பு. அதைப்பற்றி நீங்கள் கவலைகொள்ள வேண்டாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு இதை அறிவித்தார். இதையடுத்து, நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி ``நாட்டின் ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டியது நமது பொறுப்பு. இது நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரது பொறுப்பு. இந்த 21 நாள்களை நம்மால் தாக்குப்பிடிக்க முடியாவிட்டால், நாம் 21 வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டி இருக்கும்” என்றார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
DD National

அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்கும் என மத்திய, மாநில அரசுகள் கூறுகிறது. வீடு இருப்பவர்கள் வீட்டுக்குள் முடங்கியிருப்பார்கள். நாம் பகலில் நடந்து செல்லும் பிளாட்பாரங்கள் இங்கு ஏராளமான மக்களுக்கு இரவு தங்குமிடமாக இருக்கிறது. அந்த மக்களின் நிலை என்னவாகும். தினக்கூலிகள் இருக்கிறார்கள் தினசரி வருமானங்களைக் கொண்டுதான் அவர்களது வாழ்வாதாரமே நடக்கிறது. இவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

`21 நாள் ஊரடங்கு ஏன்?; கொரோனாவை எதிர்க்கும் ஆயுதம்!’ -  பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

இந்த நிலையில், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நாள்களில் டெல்லி மக்கள் யாரும் பசியோடு இருக்காதவாறு எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது ஒரு கடினமான காலகட்டம். இப்போது இங்கு எந்தப்பிரச்னையும் இல்லை என நாங்கள் கூறவில்லை. ஆனால், அனைவரையும் கவனித்துக்கொள்வோம் என உறுதியாகக் கூறமுடியும்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியைப் பொறுத்தவரையில் அத்தியாவசியப் பொருள்களுக்கு எந்தப் பற்றாக்குறையும் இருக்காது. ஊரடங்கு உத்தரவின் நோக்கம் மக்கள் கடைகளில் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான். ரேஷன், பால், காய்கறிகள், மருந்துப்பொருள்கள் உள்ளிட்ட மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களைக் கிடைக்கச் செய்வது எங்களுடைய பொறுப்பு. அதைப்பற்றி நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். இந்த ஊரடங்கு நாள்களில் மக்கள் தயவுசெய்து வீட்டுக்குள்ளே முடங்கியிருங்கள்.

`40 மணிநேரத்தில் புதிய நோயாளிகள் இல்லை!' – உற்சாகத்தை வெளிப்படுத்திய அரவிந்த் கெஜ்ரிவால் #corona

அதேபோல் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் சுகாதாரத்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள். உங்களை யாரும் தடுத்து நிறுத்த மாட்டார்கள். அதேபோல் மளிகைக்கடைக்காரர்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்பவர்கள் அரசாங்கத்தை தொடர்புகொண்டு இ-பாஸ்களை வாங்கிக் கொள்ளுங்கள், இந்த ஊரடங்கு நாள்களில் உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள். அவசர உதவி எண்கள் விரைவில் வழங்கப்படும். வேறு ஏதாவது அவசர சூழல் என்றால் 011-23469536 என்ற எண்ணில் காவல் ஆணையரை தொடர்புகொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி
டெல்லி
ANI
`உலகின் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாதான் காரணம்!’ - பிரிட்டிஷ் எழுத்தாளர் #coronavirus

கொரோனா தடுப்பு தொடர்பாக இதுவரை டெல்லி அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன

  • பள்ளிகள், கல்லூரிகளுக்கு கடந்த வாரமே விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது.

  • ஷாப்பிங் மால்கள் மற்றும் திரையரங்குகளும் கடந்த வாரமே பூட்டப்பட்டுவிட்டன.

  • மெட்ரோ சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.

  • குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

  • சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஓலா. ஊபர் போன்ற வாடகைக் கார் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பையடுத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது

  • டெல்லியில் 72 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது டெல்லி அரசு. கூடுதலாக 50 சதவிகிதம் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

  • கட்டடத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும்.

  • வீடற்ற மக்களுக்கு இலவச உணவு.

  • முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பென்ஷன் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு