Published:Updated:

`இந்தப் பூக்கள்‌ எங்களுக்காகவே பூத்திருக்கின்றன’’- செவிலியர்களை நெகிழவைத்த நீலகிரி மாவட்ட நிர்வாகம்

பூங்காவை  கண்டுரசிக்கும் மருத்துவ பணியாளர்கள்
பூங்காவை கண்டுரசிக்கும் மருத்துவ பணியாளர்கள்

கொரோனாவுக்கு எதிராக, இரவு பகலாகப் பணியாற்றிவரும் சுகாதாரப் பணியாளர்களின் மன‌அழுத்தத்தைப் போக்க, ஊட்டி அரசு பூங்காவில் பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான மலர்களைக் கண்டு ரசிக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா நகரான நீலகிரியில், கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதியே சுற்றுலாப் பயணிகள் உள்ளே வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

 ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

ஏற்கெனவே வந்திருந்த பயணிகளையும் வெளியேற்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா எல்லைகள் 17-ம் தேதி மூடப்பட்டன. அன்றைய தினமே சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

நூற்றாண்டுப் பாரம்பர்யம்மிக்க ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை, குன்னூர் சிம்ஸ் பூங்கா, ஊட்டி படகு இல்லம், பைக்காரா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன.

 ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டாலும், மழை வெயில் பாராது பூங்கா ஊழியர்கள் பணியாற்றி மலர்ச்செடிகளைப் பராமரித்துவந்தனர். தற்போது, எல்லா பூங்காக்களிலும் லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. வண்ண வண்ண மலர்களால் நிறைந்து காணப்படும் பூங்கா மலர்களைக் கண்டு ரசிக்க ஆளில்லை என்ற பேச்சு பரவலாகவே இருந்தது.

இந்தக் குறையை நிவர்த்திசெய்ய சிறப்பு ஏற்பாடு ஒன்றுக்கு திட்டமிட்டது, நீலகிரி மாவட்ட நிர்வாகம்.

பூங்காவை  கண்டுரசிக்கும் மருத்துவப் பணியாளர்கள்
பூங்காவை கண்டுரசிக்கும் மருத்துவப் பணியாளர்கள்

எளிதில் தொற்றிக்கொள்ளும் எனத் தெரிந்தும், இரவு பகல் பாராமல், குடும்பத்தையும் சொந்தங்களையும்‌ மறந்து சேவையாற்றி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறப்பு அனுமதி அளித்து, பூங்காவைக் கண்டுரசிக்க சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பதுதான் அந்தத் திட்டம்.

திட்டமிட்டபடியே, இன்று காலை 10 மணிக்கு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மூடிவைக்கப்பட்டிருந்த பூங்கா கதவுகள், இவர்களை வரவேற்கவே திறக்கப்பட்டன.

பூங்காவை  கண்டுரசிக்கும் மருத்துவப் பணியாளர்கள்
பூங்காவை கண்டுரசிக்கும் மருத்துவப் பணியாளர்கள்

பூங்கா கதவுகள் திறக்கப்பட்டதும், நுழைவுவாயிலில் புன்னகையுடனும் கையில் மலர்க்கொத்துடனும் காத்திருந்த பூங்கா ஊழியர்கள், இருபக்கமும் நின்று கரவொலியுடன் வரவேற்று மலர்ச்செண்டுகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

இந்த உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தவர்களை மகிழ்விக்க பல்வேறு வண்ணங்களில் லட்சக்கணக்கான மலர்கள் காத்திருந்தன.

பூங்காவை  கண்டுரசிக்கும் மருத்துவப் பணியாளர்கள்
பூங்காவை கண்டுரசிக்கும் மருத்துவப் பணியாளர்கள்

கொரோனா வைரஸ் , மருத்துவமனை, மருந்து மாத்திரைகள் என மூன்று மாதங்களாக வாழ்ந்துவந்த இந்தப் பணியாளர்கள் அனைவரும் மலர்களின் அழகில் மெய்மறந்தனர்.

இந்த இளைப்பாறுதல் குறித்து நம்மிடம் பேசிய செவிலியர் ஒருவர், " இது எங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது. வீட்டை மறந்து மருத்துவமனையே வீடாக நினைத்துப் பணியாற்றிவருகிறோம். எங்கள் உழைப்பை சாதாரண மக்களும் அங்கீகரித்து வாழ்த்துவது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின்‌ ஒரு சிறிய பாராட்டு,‌ எங்களை தொடர்ந்து இயங்கவைக்கும். எங்களின்‌ மன‌அழுத்தைப் போக்க மாவட்ட நிர்வாகம் இந்த சிறப்பு ஏற்பாடு செய்திருப்பது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது"என்றார்.

பூங்காவை  கண்டுரசிக்கும் மருத்துவப் பணியாளர்கள்
பூங்காவை கண்டுரசிக்கும் மருத்துவப் பணியாளர்கள்

மற்றொரு செவிலியர், " ஊட்டியில் இருந்தாலும் இதுவரை இப்படி ஒரு மலர் கண்காட்சியைக் கண்டதில்லை. இந்தப் பூக்களெல்லாம்‌ எங்களுக்காகவே பூத்திருப்பதைப் போல உணர்கிறோம். இந்த ஏற்பாடு, எங்களுக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. கொரோனாவை முழுமையாக விரட்ட எங்களால் முடிந்தவரை பணிகளைச் செய்வோம்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், " ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனுக்கு பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பூங்காவிற்கு வருகைதந்து, மலர்களைக் கண்டு ரசித்துச் செல்வார்கள். இந்த முறை பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பூத்துக்குலுங்கும் மலர்களைக் கண்டு ரசிக்க யாருமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பூங்காவை  கண்டுரசிக்கும் மருத்துவப் பணியாளர்கள்
பூங்காவை கண்டுரசிக்கும் மருத்துவப் பணியாளர்கள்

இந்த நிலையில், தற்போது கொரோனாவிற்கு எதிராகக் களமாடிக்கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்களை அழைத்து மலர்களை கண்டுரசிக்கச் செய்ததில் பெருமை கொள்கிறோம்"என்றார்.

அடுத்த கட்டுரைக்கு