Published:Updated:

சென்னைக்குள் நுழைய, வெளியேறத் தடையா... இ பாஸ் நிறுத்தமா? - நிஜ நிலவரம் என்ன?

சென்னை சென்ட்ரல் (எம்.ஜி.ஆர்) ரயில் நிலையம்
சென்னை சென்ட்ரல் (எம்.ஜி.ஆர்) ரயில் நிலையம்

`அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை எதையும் வெளிப்படையாக சொல்ல அதிகாரிகள் தயங்குகிறார்கள். இருப்பினும் உள்ள நிலவரத்தை சொல்லுங்கள் எனக் கேட்டபோது சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்'

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய (ஜூன் 7-2020) கணக்குப்படி தமிழகத்தில் 31,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 16,999 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 269 ஆக இருக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் கணிசமாக சென்னையிலேயே நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தேசிய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். மகாராஷ்டிராவில் 82,968 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

உடல் வெப்பநிலை பரிசோதனை
உடல் வெப்பநிலை பரிசோதனை

தமிழகத்தில் 31,667 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் 22,149 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில் வடசென்னையின் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 4,000-த்தை நெருங்குகிறது. அங்கு, 3,859 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 4 மண்டலங்களில் 2,000-த்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக மணலியில் 328 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

``சென்னையில் கொரோனா பரவ 2 காரணங்கள்... 4 சிஸ்டம் சிகிச்சை!'' - விளக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம்

சென்னையில் பாதிப்பு அதிகம் இருக்கும் சூழலில் வரும் நாள்களில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து சென்னையை முழுமையாகத் தனிமைப்படுத்தவும் ஆலோசனை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்க தற்போது இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் இ-பாஸ் சேவையை நிறுத்துவது குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகச் சொல்கிறார்கள்.

ரேபிட் ரெஸ்ட் கருவி
ரேபிட் ரெஸ்ட் கருவி

இதுதொடர்பாக தலைமைச் செயலக அதிகாரிகளிடம் பேசினோம். அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை எதையும் வெளிப்படையாக சொல்ல அதிகாரிகள் தயங்குகிறார்கள். இருப்பினும் உள்ள நிலவரத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்டபோது சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். ``தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கிறது. இப்போதைய சூழலில் மாவட்டங்களில் தொற்று கண்டறியப்படுபவர்கள் பெரும்பாலும் சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு சோதனை செய்யும்போது சராசரியாக 10-இல் 5 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது. அதேபோல், மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்களில் 10-இல் 7 அல்லது 8 பேருக்கு தொற்று இருப்பது தெரியவருகிறது. மகாராஷ்டிரா மட்டுமல்லாது ராஜஸ்தான், தெலங்கானா என இந்த 3 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்குப் பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் வெளிமாவட்டங்களுக்குச் செல்கையில் அங்கு 10-ல் 8 பேர் வரை நோய்த் தொற்றுடன் வந்திருப்பது சோதனையில் தெரியவருகிறது. அப்படி வருபவர்கள் எல்லாரையும் கண்காணிப்பது சவாலான விஷயம். பாதிப்பேர் பாஸ் பெற்று வருகிறார்கள். மீதமுள்ளவர்கள் பற்றி முறையாக எந்தத் தகவலும் இருப்பதில்லை. அவர்களாகவே சொந்த ஊர்களுக்கு அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் வந்துவிடுகிறார்கள்.

சென்னையிலிருந்து பிறபகுதிகளுக்கு இருசக்கர வாகனத்திலேயே சென்றுவிடுகிறார்கள். மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் இருசக்கர வாகனத்தில் மக்கள் சொந்த ஊர்களுக்கு வருவதைப் பார்க்கிறோம். எந்த பாஸும் இல்லாமலும் வருகிறார்கள். அதிகாலை நேரத்தைக் குறிவைத்தே இவர்கள் பயணிக்கிறார்கள். இப்படி வருபவர்களைக் கண்காணிப்பதே பெரும் சவால். அதேபோல், களத்தில் வேலைபார்ப்பவர்கள் தொடர்ச்சியாக 80 நாள்களுக்கும் மேலாக பணியில் இருப்பதால், சோர்வடைந்திருக்கிறார்கள்.

தமிழக அரசு
தமிழக அரசு

ஒருசில மாவட்டங்களில் சென்னையிலிருந்து வருபவர்கள், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து இ-பாஸுக்கு விண்ணப்பிக்கும்போது அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படி வருபவர்கள் உண்மையான காரணத்தைச் சொல்லித்தான் வருகிறார்களா என்று நம்மால் சொல்ல முடியாது. அதேநேரம், அவர்களில் சிலர் உண்மையிலேயே அவசர காரணத்துக்காகத்தான் இ-பாஸ் விண்ணப்பிக்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை.

``சென்னையில் கொரோனா பரவ 2 காரணங்கள்... 4 சிஸ்டம் சிகிச்சை!'' - விளக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம்

`சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு யாரும் செல்லக் கூடாது; மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த யாருக்கும் சென்னைக்குள் அனுமதி இல்லை என்றரீதியில் 15 நாள்கள் முழுமையாக எல்லைகளை சீல் வைக்க வேண்டும்’ எனவும் மாவட்ட அதிகாரிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள். தலைமைச் செயலாளரிடமும் இதுபற்றி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வடசென்னையை மட்டும் சீல் வைக்கலாம் என ஆலோசனை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 சென்னை
சென்னை

ஆனால், மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் சென்னை முழுமைக்கும் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். `சென்னையைத் தனிமைப்படுத்தாமல் பாதிப்பு எண்ணிக்கையைக் குறைக்க முடியாது’ என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பொதுவாக சோதனை செய்யும்போதே இத்தனை பாசிட்டிவ் கேஸ்கள் வருகின்றன என்றால், அதிக அளவில் பரவியிருக்கிறது என்று அர்த்தம்.

`35 சிறுவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்’ - சென்னை அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய வைரஸ் தொற்று!

சென்னை முழுவதையும் தனிமைப்படுத்துவது தொடர்பாக preliminary arguments போய்ட்டு இருக்கு. இன்னும் சில நாள்களில் உத்தரவு பிறப்பிக்கப்படலாம். சென்னையைத் தனிமைப்படுத்துவது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளும் தீவிரமாகப் பேசி வருகின்றனர். கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் மாவட்டங்களில், தெருவுக்குத் தெரு விஜிலென்ஸ் கமிட்டி போடப்பட்டது போல, சென்னையிலும் தீவிரமாக அமல்படுத்துவது குறித்தும் பேசப்பட்டு வருகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு