Published:Updated:

`எல்லாரையும் ஒரே இடத்துலதான் படுக்க வைப்பீங்களா?’ - டெங்கு ஆய்வில் அப்செட்டான கலெக்டர்

5 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்ட நிலையில், அந்த அறையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவந்தனர்.

மருத்துவமனையில் டெங்கு ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்
மருத்துவமனையில் டெங்கு ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. ஆங்காங்கே ஒருசிலர் இந்தக் காய்ச்சலுக்குப் பலியாகும் சோகமும் அரங்கேறி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்திருக்கிறது.

மருத்துவமனையில் டெங்கு ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்
மருத்துவமனையில் டெங்கு ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்

அந்தவகையில், ஈரோடு மாவட்டத்தில் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கா.பாலச்சந்திரன், ஈரோடு கலெக்டர் கதிரவனுடன் இணைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்காக அதிகாரிகள் வருகிறார்கள் என்பதற்காக, அரசு மருத்துவமனையின் முகப்பு மற்றும் ஆய்வு நடத்தும் அறைகளை சுத்தம் செய்து பளிச்சென மாற்றியிருந்தனர். சஸ்பென்ஸ் விசிட்டாக அதிகாரிகள் மருத்துவமனை முழுக்க ஒரு விசிட் அடித்திருந்தால், மருத்துவமனையின் சுத்தம் கேள்விக்குறியாகி இருக்கும். டெங்கு காய்ச்சல் அறிகுறிகளைக் கண்டறியும் பரிசோதனைக் கூடத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள், டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் அறைக்குச் சென்றனர். 5 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்ட நிலையில், அந்த அறையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். என்னவென்று விசாரித்த பிறகுதான், சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களையும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே அறையில் படுக்க வைத்திருப்பது தெரிந்திருக்கிறது.

மருத்துவமனையில் டெங்கு ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்
மருத்துவமனையில் டெங்கு ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்

இதைக் கேட்டு அப்செட் ஆன ஈரோடு கலெக்டர் கதிரவன் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம், ``டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியா வார்டு அமைக்கணும்னு கவர்மென்ட் ஆர்டர் போட்டுருக்கு. ஏன் அதை நீங்க செய்யலை. இப்படித்தான் எல்லோரையும் ஒரே இடத்துல படுக்க வைப்பீங்களா...? உங்க இஷ்டத்துக்கு வேலை பார்க்காதீங்க’ என கடுப்பானார். ஆய்வு முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கா.பாலச்சந்திரன், ``மாநில அளவில் டெங்கு பாதிக்கப்படாத மாவட்டமாக ஈரோடு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அக்டோபர் 16-ம்தேதி வரை டெங்கு காய்ச்சலால் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 86 பேர் சிகிச்சைக்குப் பின் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது அரசு மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேரும் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையில் இருக்கின்றனர். டெங்கு காய்ச்சலால் இதுவரை ஈரோட்டில் இறப்பு ஏதும் இல்லை” என்றார்.