Published:Updated:

கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ஒமைக்ரான்... தமிழகத்தில் எதிர்கொள்ள ஸ்டாலின் அரசின் திட்டம் என்ன?!

ஒமைக்ரான்
News
ஒமைக்ரான்

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில். இவ்வகை கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளத் தமிழக அரசு மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலையின் தாக்கம் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு மிக மோசமாக இருந்தது. தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததற்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல்தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். டெல்டா வகை கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமின்றி, உலகின் 130 நாடுகளுக்கும் அதிகமாகப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இன்றளவும் ஒருசில நாடுகளில் டெல்டா வைரஸ் பரவலால் பாதிப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்னும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 30-க்கும் அதிகமானோர் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் டெல்டா வகை கொரோனா வைரஸைவிட மிக வேகமாகப் பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ``இந்த வகை வைரஸ் கொரோனா தடுப்பூசியின் செயல்திறனைக் குறைக்கக் கூடியது” என்றும் கூறியிருக்கிறது. மேலும், ``இந்த வகை வைரஸ் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தவில்லை என்றாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தென்னாப்பிரிக்காவில் கிடைக்கப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த வைரஸ் ஏற்கெனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது இறுதி முடிவு கிடையாது. இந்த வைரஸின் தன்மை குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன'' என்று கூறியுள்ளது.

Covid 19 Outbreak
Covid 19 Outbreak

ஒமைக்ரான் வகை வைரஸ் பரவல் காரணமாக நான்காம் அலை ஏற்பட்டுள்ளதாகத் தென்னாப்பிரிக்கா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வகை வைரஸ் பாதிப்பு குறித்து அந்த நாட்டில் உள்ள நெட்கேர் மருத்துவமனை, ``ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களில் 90 சதவிகிதம் பேருக்கு ஆக்சிஜன் தெரபி சிகிச்சை தேவைப்படவில்லை. ஒமைக்ரான் பாதிப்பில் உள்ள சிலருக்கு மட்டுமே ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது" என்று தெரிவித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் ``சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தாதவர்கள்தான். உயிரிழந்தவர்களும் இணை நோய் உடையவர்களும் வயதானவர்களும்தான். ஒமைக்ரான் தொற்றின் பாதிப்பு குறைவாகவே உள்ளது. இருந்தாலும், இது ஆரம்பநிலையே... பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

கொரோனா
கொரோனா

தற்போதைய நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை நாளொன்றுக்குப் புதிதாகக் கிட்டத்தட்ட 7,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. மேலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 30-க்கும் அதிகமானோருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஒமைக்ரான் வகை வைரஸ் பரவலைத் தடுக்க அந்த மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் இவ்வகை வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று பரவும் சூழலில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``மத்திய அரசின் வழிகாட்டுதல்படி மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, தொற்று இல்லாதது உறுதிசெய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். மாநில எல்லைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" என்றார்.

மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

மேலும், ``தமிழகத்தில் அனைத்து வகை மருத்துவக் கட்டமைப்புகளும் தயார்நிலையில் உள்ளன. ஒருவேளை ஒமைக்ரான் வைரஸ் பரவல் ஏற்பட்டாலும் அதற்காகச் சிகிச்சை வழங்க, சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறன. மாணவர்களின் நலனை உறுதிசெய்ய பள்ளி, கல்லூரிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு வருவதையடுத்து கடைகளிலும், பொது இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருப்பதைக் கண்காணிக்கவும், மக்கள் முகக்கவசங்களை அணிவதை உறுதிப்படுத்தவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், `` மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளத் தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வெளியில் வரும்போது முகக்கவசங்களை அணிய வேண்டும். சரியான தனிமனித இடைவெளிகளைப் பின்பற்ற வேண்டும். 18 வயது பூர்த்தியான அனைவருமே கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்" என்று பேசினார்.

ஒமைக்ரான் சிகிச்சைப் பிரிவு
ஒமைக்ரான் சிகிச்சைப் பிரிவு

உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் வைரஸைப் பொறுத்தவரை டெல்டா வகை வைரஸைவிட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வகை வைரஸால் சமூகப் பரவல் ஏற்படுமேயானால் பாதிப்பு அளவு டெல்டா வகை பாதிப்பைவிட மிக அதிகமா இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய வகை வைரஸ் கடந்த சில வாரங்களிலேயே 60-க்கும் அதிகமான நாடுகளில் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒமைக்ரான் வைரஸின் பரவும் தன்மை, தொற்று பாதிப்பு குறித்து பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்திவருகிறார்கள். தற்போதைய நிலையில் நம் கண்முன்னே இருக்கும் ஒரே தீர்வு முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டும்தான்.

நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். அதன் பின்னர் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பில், `` தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. சமுதாய, அரசியல், கலாசார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய நாள்களில் அனைத்துக் கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.