Published:Updated:

``அன்று துடித்து அடங்கியது அவனது உயிர்... இன்றும் அவனுக்காகத் துடிக்கிறது மு.க.ஸ்டாலினின் இதயம்!’’

2008-ம் ஆண்டு  ஹிதேந்திரனின் பெற்றோருக்கு ஆறுதல்...
News
2008-ம் ஆண்டு ஹிதேந்திரனின் பெற்றோருக்கு ஆறுதல்...

``உடல் உறுப்பு தானத்தை சாதாரணமாகத்தான் நினைத்தேன். அன்றைய முதல்வர் கலைஞர், எங்களைப் பாராட்டி எழுதியிருந்தார். அடக்கம் நடந்த மறுநாளே அப்போது மு.க.ஸ்டாலின், எங்கள் வீட்டுக்கு வந்து கூறிய ஆறுதல், எங்கள் மனதைத் தேற்றிக் கொள்ள மிகப்பெரிய உதவியாக இருந்தது...”

``அன்று துடித்து அடங்கியது அவனது உயிர்... இன்றும் அவனுக்காகத் துடிக்கிறது மு.க.ஸ்டாலினின் இதயம்!’’

``உடல் உறுப்பு தானத்தை சாதாரணமாகத்தான் நினைத்தேன். அன்றைய முதல்வர் கலைஞர், எங்களைப் பாராட்டி எழுதியிருந்தார். அடக்கம் நடந்த மறுநாளே அப்போது மு.க.ஸ்டாலின், எங்கள் வீட்டுக்கு வந்து கூறிய ஆறுதல், எங்கள் மனதைத் தேற்றிக் கொள்ள மிகப்பெரிய உதவியாக இருந்தது...”

Published:Updated:
2008-ம் ஆண்டு  ஹிதேந்திரனின் பெற்றோருக்கு ஆறுதல்...
News
2008-ம் ஆண்டு ஹிதேந்திரனின் பெற்றோருக்கு ஆறுதல்...

செப்டம்பர் -2008... திருக்கழுக்குன்றம் டாக்டர் அசோகன் - டாக்டர் புஷ்பாஞ்சலி தம்பதியின் மூத்த மகன் 15 வயது ஹிதேந்திரன், சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்துவிட, அவருடைய உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் தைரியமான ஒரு முடிவை எடுத்தனர் அந்தத் தம்பதியர். தாளாத துக்கத்துக்கு நடுவேயும் அன்று அவர்கள் எடுத்த உறுதியான அந்த முடிவு, இன்றைக்கு உடல் உறுப்பு தானத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தங்களின் மகனுக்கு அந்தப் பெற்றோர் `இறவாப்புகழ்' தேடித்தர, அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்களின் உயிர் ஊசலாட்டத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வைப் போற்றும் வகையில், `ஹிதேந்திரன் உயிர்த் தியாகம் செய்த செப்டம்பர் 23-ம் தேதி, உடல்உறுப்பு தான நாளாக நினைவுக்கூரப்படும்' என்று தமிழக அரசு, கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது. அதனடிப்படையில் முதன்முறையாக கடந்த 23 தேதியன்று, அந்த நாளை சிறப்பாக நினைவுகூர்ந்திருக்கிறது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை.

டாக்டர் அசோகன் - டாக்டர் புஷ்பாஞ்சலி தம்பதிக்கு மரியாதை செய்த அமைச்சர் மா.சுப்ரமணியன்
டாக்டர் அசோகன் - டாக்டர் புஷ்பாஞ்சலி தம்பதிக்கு மரியாதை செய்த அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஹிதேந்திரனின் நினைவாக ஒரு நாளையே தமிழக அரசு அர்ப்பணித்திருப்பதன் பின்னணியில் இருப்பவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆம், அன்று ஹிதேந்திரனின் உயிர் துடித்து அடங்கிய நாள் முதலாக, அந்த விஷயத்தை தன் இதயத்தில் முழுமையாக வாங்கிக் கொண்டுவிட்டவர், அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின். இன்றைக்கு முதல்வராக பதவியேற்றுவிட்ட நிலையிலும் ஹிதேந்திரனுக்காகவும் அவருடைய இதயம் தொடர்ந்து துடித்துக் கொண்டிருப்பதற்கு சாட்சியே, `உடல்உறுப்பு தான நாள்' எனும் அறிவிப்பு.

2008-ம் ஆண்டு செப்டம்பரில் ஹிதேந்திரனின் உடல்உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, உடல் அடக்கம் நடந்த மறுநாள் நேரடியாக திருக்கழுக்குன்றத்துக்குச் சென்ற துணை முதல்வர் ஸ்டாலின், யாராலும் ஆறுதல் கூறி தேற்றிவிட முடியாத அசோகன்-புஷ்பாஞ்சலி தம்பதியை, தன்னால் முடிந்தவரை தேற்றினார். இதையடுத்து, ஹிதேந்திரன் வீடு இருக்கும் சாலைக்கு அவருடைய பெயரைச் சூட்டவும், அந்தப் பகுதியில் நினைவுப் பூங்கா அமைக்கவும் ஏற்பாடு செய்தார். அத்துடன், அன்றைய முதல்வர் கருணாநிதி மூலமாக, `உடல்உறுப்பு தான ஆணையம்' உருவாக்கவும் செய்தார்.

மு.க. ஸ்டாலின், அத்துடன் நின்றுவிடவில்லை. ஹிதேந்திரனின் முதலாம் ஆண்டு (2009) நினைவு நாளையொட்டி தன் இணையர் துர்காவுடன் சென்று உடல் உறுப்பு தானத்தைப் பதிவு செய்தார். அன்றே, சென்னை மருத்துவமனை ஒன்றில் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் ஸ்டாலின். கையோடு அவரும் துர்காவும் உடல்உறுப்பு தான விண்ணப்பங்களை முதல் நபர்களாக நிரப்பிக் கொடுத்தனர். `எங்களுடைய வாழ்க்கைக்குப் பிறகு இந்த உடல் உறுப்புகளைத் தானமாக மனப்பூர்வமாக வழங்குகிறோம்’ என்று அவர்கள் இருவரும் தம்பதி சமேதராகச் சிரித்துக்கொண்டே கையெழுத்துப் போட்ட காட்சி, பெரும் விழிப்புணர்வுக்கு மேலும் வலு கூட்டியது.

உடல் உறுப்பு தான பத்திரத்தில் கையெழுத்திட்ட போது -2009.
உடல் உறுப்பு தான பத்திரத்தில் கையெழுத்திட்ட போது -2009.

இந்நிகழ்வு பற்றி அப்போது விகடனுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், ``ஹிதேந்திரன் மறைந்த நாளில் நடந்த சம்பவங்கள் மனதை நெகிழவைத்தன. அந்தக் குடும்பத்தை நினைத்துப் பெருமைப்பட்டேன். பெற்ற மகன் இறந்த சோகமான நேரத்தில், அறிவுப்பூர்வமாக யோசித்து, மகனின் உடல் உறுப்புகளைத் தானமாக எப்படி வழங்கலாம் என்று சிந்தித்த பெற்றோர் அவர்கள். அதனால்தான், 'கல்பனா சாவ்லா விருது' ஹிதேந்திரனின் தாய் டாக்டர் புஷ்பாஞ்சலிக்கு முதல்வர் கலைஞரால் வழங்கப்பட்டது. தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தவன் ஹிதேந்திரன்!’’ என்று உருக்கமுடன் அப்போது பதிவு செய்திருந்தார்.

ஹிதேந்திரனின் பெற்றோர் போட்ட விதை தமிழகம் முழுக்கவே பரவிய நிலையில், கடலூர் மாவட்டம், புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் குணசேகரன், அந்த நாளை தொடர்ந்து நினைவுகூர்ந்து வந்தார். அதையொட்டி ஏழை எளியவர்களுக்கு உணவு அளிப்பது, சுகாதார விழிப்புணர்வு வழங்குவது என்று செயல்பட்டு வந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், ``ஹிதேந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் செய்திருக்கும் தியாகத்தை நினைவுகூரும்வகையில் அவர் மறைந்த நாளை 'உடல்உறுப்பு தான நாள்' என அறிவிக்க வேண்டும்'' என்று கோரிக்கையும் வைத்துக் கொண்டிருந்தார். இடைப்பட்ட காலத்தில் கவனிக்கப்படாமலே இருந்த அந்தக் கோரிக்கை, மீண்டும் ஆட்சியைப் பிடித்ததோடு தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பேற்ற நிலையில் ஸ்டாலின் மூலமாக இப்போது நிறைவேறியிருக்கிறது.

குணசேகரனின் கோரிக்கை, கடந்த பிப்ரவரி மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாணையாக வெளியிடப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை (23 செப்டம்பர்) அன்று சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருக்கும் மருத்துவமனையில் மாபெரும் நிகழ்வாகவும் நடத்தப்பட்டிருக்கிறது.

குணசேகரன்
குணசேகரன்

மாலை ஏழு மணியளவில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு, டாக்டர் அசோகன் - டாக்டர் புஷ்பாஞ்சலி தம்பதி சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அத்துடன், உடல் உறுப்பு தானம் செய்திருப்பவர்களின் குடும்பத்தினர், உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று இன்றளவிலும் நலமுடன் வாழ்ந்துகொண்டிருப்போர் என பலரும் அழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மேடையில் மரியாதை செய்தார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

நிகழ்வில் பேசிய ஹிதேந்திரனின் தந்தை டாக்டர் அசோகன், ``உடல் உறுப்பு தானம் என்பதை சாதாரணமாகத்தான் நான் நினைத்தேன். 2008-ம் ஆண்டு இதே நாளில், கிட்டத்தட்ட இதே நேரத்தில் என் மகனின் உடலைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று சேர்ந்தேன். மறுநாளில் அடக்க நிகழ்வுகள் நடந்தன. வேறு எந்த விஷயங்களும் எங்களுக்குத் தெரியவில்லை. இதற்கிடையேதான் அன்றைய முதல்வர் கலைஞர், எங்களைப் பாராட்டி எழுதியிருந்தார். அது பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு முதல்வரே இதைப் பாராட்டியிருக்கிறாரே என்று நாங்கள் உணர ஆரம்பித்தோம். உடல் அடக்கம் நடந்த மறுநாளே அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், எங்கள் வீட்டுக்கு வந்து அவர் தந்த ஆறுதல், எங்கள் மனதைத் தேற்றிக் கொள்ள மிகப்பெரிய உதவியாக இருந்தது. அதைத் தொடர்ந்து பற்பல தலைவர்களும் மருத்துவர்களும் பேசப்பேச, இந்த விஷயம் பெரிய தீயாகப் பற்றிக் கொண்டது. அப்போதுதான், இதன் வீரியம் எங்களுக்கும் புரிந்தது. இந்த உடல் உறுப்புதானம் இந்த அளவுக்கு மாறுவதற்கு ஊடகங்களும் அன்றைய முதல்வர் கலைஞரும் மிகமுக்கிய காரணம்'' என்று உருக்கமாகச் சொன்னார்.

 நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, ``ஹிதேந்திரன் தொடங்கி வைத்த உடல் உறுப்பு தானம் என்பது, இந்தியா முழுமைக்கும் வழிகாட்டியாக மாறியிருக்கிறது. இப்போது டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குச் செல்லும் போது, வெளிமாநில அதிகாரிகளும் அமைச்சர்களும், உடல்உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடியாக இருப்தைப் பற்றித்தான் கேட்பார்கள். அப்போதெல்லாம் எங்களுக்கு ஹிதேந்திரனின் நினைவுதான் வரும்.

2008 செப்டம்பர் தொடங்கி இன்று வரை 1559 பேர் உடல் உறுப்புகளைத் தானமாகத் தந்திருக்கிறார்கள். மனிதநேயமும் மனிதாபிமானமும் இணைந்து சாதித்திருக்கும் ஒரு விஷயம்தான் இது.

ஹிதேந்திரனின் அப்பா பேசும்போது சொன்னார், `ஹிதேந்திரனுக்கு முன்பே உடல் உறுப்பு தானம் நடந்துள்ளது. ஆனால், அவையெல்லாம் பெரிய தனியார் மருத்துவமனைகளின்தான். ஆனால், ஹிதேந்திரனின் தியாகத்துக்குப் பிறகுதான், அது பெருமளவில் பேசப்பட்டு, அனைத்து மக்களுக்குமான ஒரு விஷயமாக மாறியது'' என்று சொன்ன அமைச்சர், ``ஹிதேந்திரனின் கல்லீரலைத் தானமாகப் பெற்ற கேரளப் பெண், தற்போது ஒரு குழந்தைக்குத் தாயாக மாறியிருக்கிறார்.

உடல் உறுப்புதான சான்றிதழ்
உடல் உறுப்புதான சான்றிதழ்

அவர் உயிர் பிழைத்ததோடு, இன்னோர் உயிரையும் இந்த உலகுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இதுதான் உறுப்புதானத்தின் உன்னதம். மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலை தீயுக்கும் மண்ணுக்கும் தருவதைவிட, இதுபோல எண்ணற்ற உயிர்களை வாழவைப்பதற்காக உடல் உறுப்புதானத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்'' என்று அழுத்தமாகச் சொன்னார்.

ஆம்... ஹிதேந்திரன் ஏற்றிவைத்த ஜோதியை அணையாமல் காப்போம்!