Published:Updated:

`ஆக்ஸ்போர்டு' தடுப்பூசி பரிசோதனையில் பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு... தொடரும் பரிசோதனை!

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி
கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி

ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கின்றனர். அதாவது, தடுப்பு மருந்து செலுத்தி ஆராயப்படுபவர்கள் மற்றும் மருந்தற்ற குளிகைகள் (Placebo) மூலம் ஆராயப்படுபவர்கள்.

கொரோனா வைரஸ் தொற்று கடந்த டிசம்பர் மாதம் முதல் மனித இனத்தை அச்சுறுத்தி வருகிறது.

வைரஸை எதிர்த்துப் போராட பிரத்யேக மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத காரணத்தால், தடுப்பு மருந்தே நோயை தடுப்பதற்கான ஒரே ஆயுதம் என்ற நிலையில், உலகம் முழுவதும் பல நாடுகள் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும், தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும், பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

மருத்துவ ஆராய்ச்சி
மருத்துவ ஆராய்ச்சி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது மூன்றாம் கட்ட ஆராய்ச்சியில் தடுப்பு மருந்து உள்ள நிலையில், தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட தன்னார்வலர் ஒருவர் இறந்துள்ளதாக பிரேசிலியன் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இந்த மூன்றாம் கட்ட ஆராய்ச்சியைக் கண்காணிக்கும் சாவோபாலோ ஃபெடரல் பல்கலைக்கழகம், தற்போது இறந்துள்ள தன்னார்வலர், பிரேசிலைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து தன்னார்வலர் ஒருவருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தடுப்பு மருந்து ஆராய்ச்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு, பின்னர் தொடரப்பட்டது. தற்போது உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இறப்புக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கின்றனர். அதாவது, தடுப்பு மருந்து செலுத்தி ஆராயப்படுபவர்கள் மற்றும் மருந்தற்ற குளிகைகள் ( Placebo) மூலம் ஆராயப்படுபவர்கள்.

மருந்தற்ற குளிகை மூலம் ஆராயப்படுபவர்கள் 'கன்ட்ரோல் குரூப்' என்று கூறப்படுகிறார்கள்.

தடுப்பு மருந்து (மாதிரி படம்)
தடுப்பு மருந்து (மாதிரி படம்)
Pixabay

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், 'எங்கள் இரு குழுக்களில் இருக்கும் தன்னார்வலர்களுக்கு ஏற்படும் உடல் கோளாறுகளை தனித்தனியாக ஆராய்ந்து வருகின்றோம். தற்போது பிரேசிலில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வுக்கும் தடுப்பு மருந்தின் பாதுகாப்புத் தன்மைக்கும் சம்பந்தம் இல்லை. ஆகையால் ஆராய்ச்சியைத் தொடரலாம் என அரசுத் தரப்பு கூறியுள்ளது' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சியின் நெருங்கிய வட்டத்தில் உள்ள நபர், தற்போது இறந்துள்ள நபர் மருந்தற்ற குளிகைகள் செலுத்தப்பட்ட குழுவில் இருந்தவர், அவருக்கு தடுப்பு மருந்து அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனிகாவின் கண்டுபிடிப்பான இந்தத் தடுப்பு மருந்து ஆராய்ச்சி, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து இந்தியாவிலும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு