Election bannerElection banner
Published:Updated:

ஆக்சிஜன் தட்டுப்பாடு... இந்தியா மூச்சுத் திணறுவது ஏன்?

ஆக்சிஜன்
ஆக்சிஜன் ( Aijaz Rahi )

இந்தியாவின் ஆக்சிஜன் தட்டுப்பாடு பற்றிய வழக்கில் மத்திய அரசை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஏன் இந்தத் தட்டுப்பாடு? இது எப்போது சரியாகும்?

'இன்னும் சில மணி நேரங்களில் எங்களின் ஆக்சிஜன் ஸ்டாக் தீர்ந்துவிடும்' என்று கதறுகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். புகழ்பெற்ற கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் இறந்துகொண்டிருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் தனிநபர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மூச்சுத் திணறும் தங்கள் உறவினர்களுக்காக ஆக்சிஜன் வாங்க முடியாமல் பலர் தவிக்கிறார்கள். மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் குளறுபடியால் நோயாளிகள் பலர் இறந்துள்ளார்கள். மத்தியப் பிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கும்பலாகச் சேர்ந்து கொள்ளையிடும் சம்பவங்கள் நடக்கின்றன.

இந்தியாவின் ஆக்சிஜன் தட்டுப்பாடு பற்றிய வழக்கில் மத்திய அரசை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஏன் இந்தத் தட்டுப்பாடு? இது எப்போது சரியாகும்?

உற்பத்தியை விட தேவை அதிகம்!

ஆக்சிஜன் பற்றாக்குறை
ஆக்சிஜன் பற்றாக்குறை

இந்தியாவில் ஒருநாள் ஆக்சிஜன் உற்பத்தி 7,127 மெட்ரிக் டன். இதில் 54 சதவிகிதம் மட்டுமே மருத்துவமனைகளுக்குத் தேவைப்பட்டது. மீதி தொழிற்சாலைகளுக்குத் தரப்படுகிறது.

பல மாநில அரசுகளும் ஆக்சிஜன் கேட்டு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில், 'இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை' என கடந்த ஏப்ரல் 12-ம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் சொன்னது. மருத்துவத் தேவைகளுக்காக சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஸ்டாக்கில் இருப்பதாகவும் சொன்னது.

அந்த நாளில் இந்தியாவில் 12 லட்சத்து 64 ஆயிரம் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருந்தார்கள். இன்று அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஆகிவிட்டது. இதனால் தினசரி ஆக்சிஜன் தேவை 8 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. அதாவது, இந்தியாவின் ஒட்டுமொத்த தினசரி உற்பத்தியைவிட, தினசரி தேவை அதிகமாகிவிட்டது.

தொழிற்சாலைகளுக்குத் தடை!

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொழிற்சாலைகளின் ஆக்சிஜன் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. 'மருந்து நிறுவனங்கள், அணுமின் நிறுவனங்கள் உள்ளிட்ட ஒன்பது துறைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் தர வேண்டும்' என கட்டுப்பாடு விதித்து, மற்ற எல்லா ஆக்சிஜனையும் மருத்துவத் தேவைகளுக்குத் திருப்பிவிட்டது.

இந்த ஒன்பது துறைகளுக்கும் தினமும் 2,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை. இதுபோக 4,600 மெட்ரிக் டன் மட்டுமே மருத்துவத் தேவைகளுக்குத் தரப்படுகிறது. ஆனால், தேவை 8 ஆயிரம் டன். தினமும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தேவை இன்னும் அதிகரிக்கும். அது நிலையை இன்னும் சிக்கலாக்கும்.

ஏற்கெனவே இருப்பில் இருப்பதைப் பயன்படுத்தினாலும், இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே சமாளிக்க முடியும். அதனால், அவசரமாக 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய உள்ளது மத்திய அரசு. இதுதவிர பெரும் தொழில் நிறுவனங்களும் தங்களிடம் இருக்கும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்கிவருகின்றன.

ஆக்சிஜன்
ஆக்சிஜன்
Aijaz Rahi

எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை!

இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தியும், ஆக்சிஜன் தேவையும் ஒரே சீராக இல்லை. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிஷா, குஜராத், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய எட்டு மாநிலங்களில்தான் 80 சதவிகித ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என தேவை அதிகம் உள்ள இடங்களில் உற்பத்தி இல்லை.

ஆக்சிஜனைக் கொண்டு செல்வதும் பிரச்னை. க்ரையோஜெனிக் டேங்கர் லாரிகளில்தான் கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் போதுமான அளவு இந்த டேங்கர்கள் இல்லை. அதனால் நைட்ரஜன் டேங்கர் உள்ளிட்ட இதர டேங்கர்களையும் ஆக்சிஜன் கொண்டு செல்ல ஏற்றதாக மாற்றிவருகிறது அரசு.
ஆக்ஸிஜன் அரசியல்... என்னதான் நடக்கிறது?

அவற்றை எடுத்துச் சென்று சேமித்து வைப்பதும் சவாலாக உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு உள்ளது. இந்தியாவில் தினசரி 10 ஆயிரம் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. ஆனால், தேவையான அளவுக்கு சிலிண்டர்கள் கைவசம் இல்லை. கடந்த ஆண்டு கொரோனா தீவிரமாக இருந்தபோது, சிலிண்டர்களை அதிகமாகத் தயாரிக்கச் சொல்லி அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா தொற்று குறைந்ததால் சிலிண்டர் தயாரிப்பு மீண்டும் குறைந்துவிட்டது. இப்போது தேவை பத்து மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஆனால், அவசரமாக சிலிண்டர்களைத் தயாரிக்க முடியவில்லை.

மருத்துவமனை தயாரிப்புக்கும் வாய்ப்பில்லை!

ஆக்சிஜன் ஏற்றிச்செல்லும் லாரிகள்
ஆக்சிஜன் ஏற்றிச்செல்லும் லாரிகள்
Twitter (மாதிரி படம்)

ஒரு மருத்துவமனையின் தேவைக்கு ஏற்றபடி குறைந்த அளவில் ஆக்சிஜன் தயாரித்துக் கொடுக்கும் Pressure Swing Adsorption oxygen generator வசதிகளை ஏற்படுத்த முடியும். தமிழகத்திலும் சில மருத்துவமனைகளில் இந்த ஆக்சிஜன் உற்பத்திக்கூடங்கள் உள்ளன. இப்படி ஒரு ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை அமைக்க ஒன்றேகால் கோடி ரூபாய் செலவாகும்.

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா தாக்கியபோதே, நாடு முழுக்க 162 மருத்துவமனைகளில் இப்படி ஆக்சிஜன் உற்பத்திக்கூடங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், டெண்டர் நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டதால் இதுவரை 33 மருத்துவமனைகளில் மட்டுமே இவை நிறுவப்பட்டுள்ளன.

பெரிய செலவு பிடிக்காத இதுபோன்ற ஆக்சிஜன் உற்பத்திக்கூடங்களை அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் நிறுவியிருந்தால், உயிரிழப்புகள் நிச்சயம் தடுக்கப்பட்டிருக்கும்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு