Published:Updated:

பாராட்டுகள் போதும்... பணி நிரந்தரமும் பாதுகாப்பு உபகரணங்களும் தேவை - தூய்மைப்பணியாளர்களின் துயரம்!

தூய்மைப்பணியாளர்கள்
தூய்மைப்பணியாளர்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கையுறைகள் இல்லாமல், முகக்கவசம் இல்லாமல், பணி நிரந்தரம் இல்லாமல் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களின் கதைகள் துயரம் நிறைந்தவை.

தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து அவர்களைக் கௌரவப்படுத்துவது போன்ற நெகிழ்ச்சி சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்கின்றன. தூய்மைப் பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை நடத்தி அசத்தியிருக்கிறது திருநெல்வேலி காவல்துறை. கொரோனா தொற்று எல்லோருக்கும் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தூய்மைப்பணியாளர்கள் மேற்கொண்டுவரும் சேவை மகத்தானது என்று மக்கள் உணர்கிறார்கள் என்பதையே இந்த நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

குப்பை லாரி
குப்பை லாரி

ஆனால், எவ்வளவு ஆபத்தான சூழலில் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள், ஆட்சியாளர்கள் எந்தளவுக்கு அவர்களைப் புறக்கணிக்கிறார்கள் என்ற உண்மையை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும். ‘கைகழுவுங்கள்… கைகழுவுங்கள்’ என்று பல்லவி பாடுகிறார்கள். அந்த அறிவுரை மக்களுக்கு மட்டும்தான்… தூய்மைப்பணியாளர்களுக்கு இல்லை. தூய்மைப் பணியாளர்களை மக்களாக ஆட்சியாளர்களாக கருதுவதில்லை. அப்படிக் கருதியிருந்தால் கைகழுவுங்கள் என்று எல்லோருக்கும் அறிவுரை சொல்லும் ஆட்சியாளர்கள், குப்பைகளையும் ஆபத்தான கழிவுகளையும் கைகளால் அகற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு கையுறைகள் வழங்கியிருக்கும், கைகளைக் கழுவுவதற்கு, சோப்பு வழங்கியிருக்கும். ஆனால், எவ்வித பாதுகாப்பும் கவசங்களும் இல்லாமல் வெறும் கையால்தான் அவர்கள் குப்பைகளை அள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மருத்துவர்களும் தூய்மைப் பணியாளர்களும்தான் முன்வரிசையில் நின்று போராடுகிறார்கள். கொரோனாவுக்கு எதிராகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த சிறப்பூதியம் தூய்மைப்பணியாளர்களுக்கு மட்டும் கிடையாது. இதைவிட அக்கிரமம் வேறு என்ன இருக்க முடியும்? பாவப்பட்ட அந்த ஜனங்களில் பலரிடம் பேசினோம். அவர்களின் கதைகளைக் கேட்டால் கண்களில் ரத்தக் கண்ணீர் வருகிறது. ஊரைக் குப்பையாக்கிவிட்டு நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிவிடுகிறோம். அந்தக் குப்பைகளை அகற்றி ஊரைத் தூய்மைப்படுத்துவதற்காக, நமக்கு முன்பாகவே விழித்துக்கொண்டு பல கி.மீ தூரம் பயணம் செய்து நம் பகுதிகளுக்கு வருகிறார்கள் தூய்மைப்பணியாளர்கள்.

தூய்மைப்பணியாளர்
தூய்மைப்பணியாளர்
`எதோ எங்களால முடிஞ்சது ...' -ரூ.1 லட்சத்து 20,000 வழங்கிய தூய்மைப் பணியாளர்கள் -ஊட்டி நெகிழ்ச்சி

உதாரணத்துக்கு, தலைநகர் சென்னையைப் பார்ப்போம். 'குப்பை அள்ளுபவர்கள் குடியிருப்பது சென்னைக்கு அவமானம். அவர்களை நகரிலிருந்து அகற்றினால்தான் இது சிங்காரச் சென்னையாக, எழில்மிகு சென்னையாக மாறும்' என்கிற ரீதியில் நினைத்து, பலகாலம் நகரத்திலேயே வாழ்ந்து வந்த அவர்களை சென்னைக்கு பல கி.மீ தொலைவில் உள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற இடங்களுக்கு ஆட்சியாளர்கள் துரத்தியடித்துவிட்டனர். சென்னையைச் சுத்தம் செய்வதற்கு, அங்கிருந்து கைக்காசை செலவழித்து அந்தத் தொழிலாளர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.

கண்ணகி நகரிலிருந்து சென்னைக்கு வந்து தூய்மைப்பணி மேற்கொள்ளும் லட்சுமியிடம் பேசினோம். ``10 வருஷமா கான்ட்ராக்ட்ல வேலை செய்றேன். மாசம் 10,000 சம்பளம். வேறு எந்தச் சலுகையும் இல்லை. கண்ணகி நகர்ல இருந்து சென்னைக்கு வந்துபோக தினமும் ஐம்பது ரூபாய் செலவாகும். வூட்டுக்காரர் குடிச்சுக் குடிச்சு செத்துப்போயிட்டாரு. எனக்கு ரெண்டு புள்ளைங்க. வயசான அம்மா இருக்கு. அதுங்களைக் காப்பாத்துறதுக்காக இந்த வேலைக்கு வந்துகிட்டு இருக்கேன். 10,000 ரூபாய் பத்தாது. தவணைக்குப் பணம் வாங்குறது, வட்டிக்கு வாங்குறதுன்னு ரொட்டேஷன்லதான் வண்டி ஓடுது. வெறுங்கையாலதான் குப்பை அள்ளுவோம். கொரோனா வந்ததால ஒரு நாள் மட்டும் கிளவுஸ் கொடுத்தாங்க. அதை மறுநாள் யூஸ் பண்ண முடியல. அதுக்கப்புறம் கிளவுஸ் தரல. வழக்கம்போல வெறுங்கையாலதான் குப்பை அள்ளுறேன். கொரோனா பரவலைத் தடுக்கணும்னா சமூக இடைவெளி அவசியம்னு சொல்றாங்க. ஆனா, எங்களை ஆடுமாடுகளைப்போல குப்பை வண்டியில ஏத்திக்கிட்டு வர்றாங்க. நாங்களும் மனுசங்கதானே…” என்று கண்கலங்கினார் லட்சுமி.

தூய்மைப்பணியாளர்
தூய்மைப்பணியாளர்

தூய்மைப் பணியாளர்களின் நிலைமை குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான கே.ஆர்.கணேசனிடம் பேசினோம்.

``மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என தமிழ்நாட்டில் சுமார் இரண்டரை லட்சம் தூய்மைப்பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் சுமார் 20 சதவிகிதம் பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள். மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், சுயஉதவிக்குழுக்கள் என்ற முறையில் வேலை செய்கிறார்கள். அவர்களின் ஒரு நாள் சம்பளம் 379 ரூபாய். ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்கள் என்ற பெயரில் பலர் வேலை செய்கிறார்கள். கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளைக் கண்காணிப்பது, அந்தப் பகுதியில் கிருமிநாசினி தெளிப்பது, அங்குள்ள குப்பைகளை அகற்றவது ஆகியவை இவர்களின் வேலை. இவர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் 82 ரூபாய்.

தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, சோப்பு போன்றவை முழுமையாக வழங்கப்படவில்லை. மருத்துவப் பரிசோதனை, நோய்த்தடுப்பு ஊசி போன்ற ஏற்பாடுகள் இல்லை. எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழலில்தான் அவர்கள் வேலை செய்கிறார்கள். மருத்துவமனைகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் இன்னும் ஆபத்தான சூழலில் இருக்கிறார்கள். அதனால்தான், மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் ஒரு ஒப்பந்தத் தூய்மைப்பணியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு அக்கறையின்றி இருந்தால், இதுபோன்ற நிலை எல்லா இடங்களிலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உள்ளாட்சித் துறையின் கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 2017-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியம் அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச ஊதியம் ரூ.16,725 என நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாகியும் அது இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றமும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் உத்தரவுகள் பிறப்பித்தும் அவையும் அமல்படுத்தப்படவில்லை” என்றார்.

தூய்மைப்பணியாளர்
தூய்மைப்பணியாளர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜனிடம் பேசினோம்.

“சென்னை மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்று ஒரு விதிமுறை இருக்கிறது. ஆனால், அதன்படி தொழிலாளர்கள் எண்ணிக்கை இல்லை. பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். சுமார் 17,000 தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 20 சதவிகிதம் பேர்தான் நிரந்தரத் தொழிலாளர்கள். ஒருவர், 500 மீட்டருக்கு பெருக்க வேண்டும், ஒருவர் 250 வீடுகளில் குப்பை எடுக்க வேண்டும். ஒருவர் 250 வீடுகளுக்கு மலேரியா கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. ஆனால், இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் அளவிலான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இல்லை. உதாரணத்துக்கு, 500 மீட்டருக்கு ஒருவர் குப்பை அள்ள வேண்டும் என்று விதி இருக்கும்போது 1,500 மீட்டர் முதல் 2,000 மீட்டர் வரை ஒருவர் குப்பை அள்ள வேண்டியிருக்கிறது.

வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று மக்களே பிரித்து குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும். ஆனால், பெரும்பாலான மக்கள் அதைச் செய்வதில்லை. அதனால், குப்பையைப் பிரித்தெடுக்க வேண்டிய கூடுதல் வேலை தூய்மைப் பணியாளர்களின் தலை மீது விழுகிறது. ஒரு கைவண்டிக்காரர் நாளொன்றுக்கு 400 கிலோ குப்பையை எடுத்து வந்து மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்தெடுக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், அடுத்த 10 நாள்களுக்கு அவர்களுக்கு வேலை தர மாட்டார்கள்.

குப்பை வண்டி
குப்பை வண்டி

போதிய எண்ணிக்கையில் தொழிலாளர்கள் நியமிக்கப்படாததால், மூன்று பேர் நான்கு பேர் செய்ய வேண்டிய வேலைகளை ஒருவரே செய்ய வேண்டியுள்ளது. இதனால், தொழிலாளர்களின் உடல்நலன் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. தூய்மைப்பணியில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலோர் கர்ப்பப்பை கோளாறு, சுவாசக்கோளாறு போன்ற பல நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலோருக்கு தோல் பிரச்னை இருக்கிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நாள்களில் விடுப்பு தர மாட்டார்கள். அந்த நாள்களில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால் அவர்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். வேலை முடிந்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு வரும் பெண் தொழிலாளர்கள் உடை மாற்றுவதற்கு தனி அறைகள் கிடையாது. ஓய்வறைகள் கிடையாது. பல மண்டலங்களில் கை கால் முகம் கழுவுவதற்கு தண்ணீர் கூட கிடையாது.

ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் தொழிலாளர்களுக்குச் சம்பளம் தர வேண்டும் என்று நிர்வாகம் சொல்கிறது. ஆனால், 10-ம் தேதி 15-ம் தேதி என்று தாமதமாகத்தான் சம்பளம் தரப்படுகிறது. அதனால், பலரும் உரிய நேரத்துக்கு வீட்டு வாடகை தர முடிவதில்லை. அதனால் பல பிரச்னைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் போன்ற நிலையில் இருக்கும் பெண்கள்தான் இங்கு அதிகம். கொரோனா காலத்தில், வழக்கமாகச் செய்யும் வேலைகளைவிட அதிகமாகச் செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு சிறப்பூதியம் தரப்படவில்லை” என்று கொந்தளித்தார்.

தூய்மைப்பணியாளர்
தூய்மைப்பணியாளர்

திருச்சி, சேலம் போன்ற நகராட்சிகளில் கான்ராக்ட் தொழிலாளர்களுக்கு ரூ.500, ரூ.550, ரூ.590 என்று தினசரி ஊதியம் வழங்கப்படுகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் ரூ.379 தான் தரப்படுகிறது. இந்நிலையில், கோவை போன்ற இடங்களில் `குப்பை பொறுக்கும்' வேலைக்கு பட்டதாரிகள் பலரும் வந்துள்ளனர். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் பேர் பட்டியலின மக்களே இந்த வேலையில் இருக்கிறார்கள் என்கிறபோது ஒன்றிரண்டு இடங்களில் வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த வேலைக்கு வந்துள்ளார்கள். பட்டியலின சாதி அல்லாத அந்த சாதியினருக்கு குப்பை அள்ளும் வேலை தரப்படுவதில்லை. வரிவசூல் போன்ற வேலைகள் அவர்களுக்குத் தரப்படுகிறது. ஒரே வேலை, ஒரே சம்பளம் என்றாலும் அந்த இடத்தில் சாதியின் காரணமாக இந்தப் பாகுபாடு காட்டப்படுவதாக தொழிற்சங்கத் தலைவர் கே.ஆர்.கணேசன் வேதனையுடன் தெரிவித்தார்.

இப்படி பல அநியாயங்களும் அக்கிரமங்களும் மனித உரிமை மீறல்களும் சாதியப்பாகுபாடுளும் தூய்மைப்பணியாளர்களுக்கு இழைக்கப்படுகின்றன. இந்த வரிசையில் சமீபத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு கொடுமையையும் கடைசியாகப் பார்த்துவிடுவோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு ஒதுக்கிய நிதியில், தூய்மைப்பணியாளர்கள் கூடுதல் நேரம் இப்போது வேலை செய்கிறார்கள் என்பதால், அவர்களின் மதிய உணவுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியில் முறைகேடு நடைபெறுவதாகப் புகார்கள் வருகின்றன. சென்னை போன்ற இடங்களில் அம்மா உணவகத்தில் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு நிதியை அமுக்கும் கொடுமை நடப்பதாகத் தொழிலாளர்கள் புகார் சொல்கிறார்கள். பல இடங்களில் தன்னார்வலர்கள் தரும் உணவையே இவர்கள் சாப்பிடுகிறார்கள்.

தூய்மைப்பணியாளர்
தூய்மைப்பணியாளர்

இவர்கள் வேலை செய்யவில்லையென்றால் நாடு நாறிப்போய்விடும். அந்த நாற்றத்தை நம்மால் ஒரு நாள்கூட தாக்குப்பிடிக்க முடியாது. கொரோனா போன்ற சூழலில் மட்டும் இவர்களை கடவுள் ரேஞ்சுக்குத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோம். அவர்களின் சேவையைப் பாராட்டி கைத்தட்டுங்கள் என்று பிரதமர் மோடி சொன்னால் கைதட்டுகிறோம். ஆனால், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் பற்றி என்றாவது நாம் கவலைப்பட்டிருக்கிறோமா? அதற்காக நாமும் குரல் கொடுக்க வேண்டும் என்று நம்மில் எத்தனை பேர் நினைத்திருக்கிறோம்? தூய்மைப் பணியாளர்களுக்கு யாரோ ஒரு சிலர் பாதபூஜை செய்து மரியாதை செய்திருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான சமூகத்துக்கு, அந்த மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னை பள்ளிக்கரணையில் ஒரு தூய்மைப்பணியாளரை ஒருவர் மிகக் கேவலமாகப் பேசிய பேச்சின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த நபர் பேசிய வார்த்தைகளை இங்கு எழுத முடியாது. அவ்வளவு கொடூரமானவை அந்த வார்த்தைகள்.

கொரோனாவில் இறந்த உடலை அடக்கம் செய்யவும் தூய்மைப் பணியாளர்களையே அரசு பயன்படுத்துகிறது. முறையான உடைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் அந்தப் பணியைச் செய்ய இவர்கள் முன்வருவது பாராட்டுக்குரியதே. இறந்த உடலையே ஊருக்குள் மக்கள் விட சம்மதிக்காத நாட்டில், இவர்களின் இந்தப் பணிக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைப்பதில்லை.

`நீங்கள் எல்லோரும் கடவுளுக்கு சமம்!’ -தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நேற்று மதுரை திருமங்கலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுப்பொருள் வழங்குதல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏப்ரல் 16-ம் தேதி வழங்கினார். அப்போது, நீங்கள் எங்களுக்கு கடவுள் மாதிரி என்று சொல்லி அவர்களின் கால்களில் விழுந்து வணங்கினார். தங்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். முதல்வருடன் பேசி கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதியளித்தார். அவரது சொற்கள், செயல் ஆனால் மகிழ்ச்சியே!

சக மனிதர்களாக அவர்களை அனைவரும் மதிப்பதும், அரசு அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், நிவாரணங்கள் ஆகியவற்றை அளித்து பணியை நிரந்தரப்படுத்துவதுமே எப்போதைக்குமான தீர்வு.

அடுத்த கட்டுரைக்கு