Published:Updated:

`12 மணி நேர காத்திருப்பு; டோக்கன் பஞ்சாயத்து!' - கோவை ரெம்டெசிவிர் குளறுபடிகள் - நேரடி ரிப்போர்ட்

கோவை மருத்துவக் கல்லூரி
கோவை மருத்துவக் கல்லூரி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் இருந்த வாடகைக் காரில் ஓர் இளைஞர் வந்திருந்தார். அவரின் அம்மாவுக்குக் கொரோனா பாதிப்பு உள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு வந்தவருக்கு, நண்பகல் 12 மணிக்குத்தான் ரெம்டெசிவிர் மருந்து கிடைத்தது.

2020-ம் ஆண்டைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவை தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்
`பயனில்லாத மருந்துக்கா இவ்வளவு பஞ்சாயத்துகளும்?' - தொடரும் ரெம்டெசிவிர் குழப்பம்!

இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. அன்றைய தினம் முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ரெம்டெசிவிர் மருந்து வாங்கக் குவிந்து வருகின்றனர்.

அங்கு ஏராளமான குளறுபடிகள் நடப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ரெம்டெசிவிர் மருந்து எப்படி வழங்கப்படுகிறது என்பதை அறிய களத்துக்குச் சென்றோம். ``கோவைக்கு தினசரி 500 குப்பிகள் வழங்கப்படுகின்றன. உரிய ஆவணங்கள் கொடுத்து, ரூ. 1,568 (1 குப்பி)க்கு வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறியிருந்தனர். ஒரு நபருக்கு அதிகபட்சம் 6 குப்பிகள் வழங்கப்படும்.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்

கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர் மாவட்டங்களுக்கு கோவைதான் மையம். இதனால், ஏராளமான மக்கள் இரவு முதலே கூடத்தொடங்குகின்றனர். காலை 10 மணி அளவில்தான் மருத்துவப் பணியாளர்கள் கோவை மருத்துவக் கல்லூரிக்கு வருகை புரியத் தொடங்கினர்.

பிறகு, அதில் ஒரு மருத்துவப் பணியாளர் தனது சொந்த காரில் சென்று மருந்துகளை எடுத்து வந்தார். அதற்குள் மருத்துவக் கல்லூரி வளாகத்திலும், வெளியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். நீண்ட வரிசையில் நிற்பவர்களை சமாளிக்க அதன்பிறகுதான் ஒவ்வொருவராகப் பணிகளைத் தொடங்கினர். மருத்துவப் பணியாளர்களில் ஒருவர் ரசீது போடுகிறார். மற்றொருவர் அந்த மருந்து பாக்ஸின் மீது அரசு விலையைக் குறிப்பிடுகிறார். இன்னொருவர் ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

இதற்கு நடுவே, மருத்துவப் பணியாளர்களின் உதவியுடன் வந்த சிலர் வரிசையில் நிற்காமல் நேரடியாக விற்பனை மையத்துக்குச் சென்றனர். அவர்களுக்கு மருத்துவ ஊழியர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, வரிசையை மீறி ரெம்டெசிவிர் வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர்.

பல பெரிய தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்கள், தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்கிவிடுகின்றனர். இதனால், வரிசையில் நின்றவர்கள் கொதித்தெழுந்து சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். மருத்துவ ஊழியர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தவர்களை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து அங்கு வந்த மருத்துவ ஊழியர் ஒருவர் நிலைமையை விளக்கினார். மக்களில் ஒருவர், ``டோக்கன் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை? வரிசையில் நிறைய பெண்களும் உள்ளனர். ஆனால் குடிநீர், கழிப்பறை போன்ற எந்த வசதியும் இல்லை” என ஆதங்கப்பட்டார்.

அதற்கு அந்த மருத்துவ ஊழியர், ``நானா உங்களை நிக்க சொன்னேன்?” என அலட்சியமாகப் பதிலளித்தார். மேலும், கோபமடைந்த மக்கள், ``உங்கள் வீட்டில் யாராவது நின்றால் இப்படித்தான் பேசுவீர்களா?” என்று சரமாரியாக எழுப்பிய கேள்விக்கு, அந்த ஊழியரால் பதில் சொல்ல முடியவில்லை. 11.30 மணி அளவில் பணிக்கு வந்த ஒரு பெண் மருத்துவ ஊழியர், ``இங்க என்ன பிரச்னை... தண்ணீர் இல்லைனா கேன் வைங்க.

எல்லாருக்கும் டோக்கன் கொடுத்து அனுப்புங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். நாம் அங்கு நின்றிருந்த 4 மணி நேரத்தில் ஒரு மருத்துவ ஊழியர்கூட மக்களிடம் சரியாகப் பேசவில்லை.

முழு ஊரடங்கு நாளான அன்று, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் இருந்து வாடகைக் காரில் ஓர் இளைஞர் வந்திருந்தார். அவரின் அம்மாவுக்குக் கொரோனா பாதிப்பு உள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு வந்தவருக்கு, நண்பகல் 12 மணிக்குத்தான் ரெம்டெசிவிர் மருந்து கிடைத்தது. நெருங்கிய ரத்த சொந்தங்களுக்கு கொரோனா பாதித்ததால் மிகவும் சோர்ந்த நிலையில் வந்த பாபு என்பவருக்கு நீண்ட நேரம் நின்றும் டோக்கனே வழங்கப்படவில்லை.

பாபு
பாபு

இதுகுறித்து பாபு கூறுகையில், ``என் மனைவி, மகள், மனைவியின் தங்கை ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகள் கர்ப்பமாக உள்ளார். நாங்கள் அனுமதித்துள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்டாக் இல்லை. இங்கேயும் முறையான பதில் வழங்குவதில்லை.

ஊழியர்களிடம் கேட்டால், `ஒரு நாளுக்கு 85 பேருக்குத்தான் டோக்கன் கொடுக்கச் சொல்லியுள்ளனர். நாங்கள் 100 பேருக்கு டோக்கன் வழங்கியுள்ளோம். அதுபோக கூடுதலாக வந்துவிட்டனர்' எனச் சொல்கின்றனர். ஆனால், நடப்பதை பார்க்கும்போது பிளாக்கில் விற்பதற்காக இப்படிச் செய்கிறார்களா என்ற சந்தேகமும் வருகிறது. கோவையில் மட்டும் ஒரு நாளுக்கு 2,000 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகிறது.

மக்கள் வரிசை
மக்கள் வரிசை

அப்படி இருக்கும்போது 500 குப்பிகள் எப்படி போதுமானமாக இருக்கும்? அரசாங்கம் முதலில் எப்போது வழங்குகிறோம் என்று ஒரு டோக்கனை வழங்கினால்கூட பரவாயில்லை. எல்லோரும் மிகுந்த வேதனையில் இருக்கிறோம்” என்றார்.

இதுகுறித்து கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா கூறுகையில், ``மருத்துவப் பணிகள் கழகம் மூலம்தான் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. ஒருநாளுக்கு 500 குப்பிகள்தான் கொடுக்கின்றனர். கோவையில் சனிக்கிழமை முதல் மருந்து கொடுத்து வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று சொல்லியும் பலர் வந்துவிட்டனர். அவர்களுக்கும்கூட நேற்று நாங்கள் டோக்கன் வழங்கினோம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.

`பயனில்லாத மருந்துக்கா இவ்வளவு பஞ்சாயத்துகளும்?' - தொடரும் ரெம்டெசிவிர் குழப்பம்!

மருந்து இருக்கும்வரை கொடுத்துவிடுகிறோம். அதன் பிறகு வருபவர்களுக்கு கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதை சரிபடுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். மக்கள் ஏதோ நாங்கள் மருந்துகளை வைத்துக் கொண்டு வழங்குவதில்லை என நினைக்கின்றனர்.

எங்களுக்கும், ரெம்டெசிவிருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மருந்துகளைப் பராமரிப்பதில் இருந்து பணத்தை கையாள்வதுவரை அனைத்தும் மருத்துவப் பணிகள் கழகம்தான். வரிசைப்படிதான் மருந்து வழங்க வேண்டுமென ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளோம். எனவே, அந்த உத்தரவை மீற வாய்ப்புகள் குறைவு. அதையும் மீறி ஏதாவது சம்பவம் நடந்திருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

`ரெம்டெசிவிர் பலனற்றது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்!' -அமெரிக்க மருத்துவர் ப்ரியா சம்பத்குமார்

கொரோனாவை கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மருந்துகளை வாங்கும் இடமே, கொரோனாவை உருவாக்கும் இடமாக மாறிவிடக்கூடாது. தமிழகம் முழுக்க ரெம்டெசிவிர் மருந்து எளிதில் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுதான் இப்போதைய தவிர்க்க முடியாத தேவை என்பதை கள நிலவரங்கள் உணர்த்துகின்றன.

அடுத்த கட்டுரைக்கு