சீனாவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வெளிநாட்டினருக்கு விசா ரத்து, வெளிநாட்டிலிருந்து வருவோர் முழுமையான பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவது மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மழலையர் மற்றும் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். மேலும், பிற மாநில எல்லைகளையொட்டிய தேனி, கன்னியாகுமரி,கோவை நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றையும் மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதேபோல், தனிநபர் சுகாதாரத்தை மக்கள் பேண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முதல்வர், கொரோனா முன்னெச்சரிக்கையாக 5 விஷயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

``1. அவ்வப்போது சோப்பு போட்டு கைகழுவுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தனிநபர் சுகாதாரத்தை அனைவரும் பேண வேண்டும்
2. பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூட வேண்டாம்.
3. பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பதை 15 நாள்களுக்குத் தவிர்க்க வேண்டும்.
4. கூட்டமான இடங்களுக்கு வயதானவர்கள் செல்ல வேண்டாம்
5. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களை அறிவுறுத்தியிருக்கிறார்.
அதேபோல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.