மருத்துவர்களுக்கு வழங்கப்படும் இலவசங்களுக்கு மருந்து நிறுவனங்கள் வரிவிலக்கு கோர முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மருந்து நிறுவனங்கள் மருத்துவர் களுக்கு கொடுக்கும் அன்பளிப்புப் பொருள்களுக்கு வரிவிலக்கு வழங்க வேண்டும் என அபெக்ஸ் லேபரட்டரீஸ் மருந்து நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சென்னையில் இதே சலுகையைக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அபெக்ஸ் லேப் மேல்முறையீடு செய்தது. அப்போது, `மருத்துவர்கள் இலவசங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று விதிகள் உள்ளன. ஆனால், மருந்து நிறுவனங்கள் அன்பளிப்புகள், பரிசுகளை அளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை' என்று அபெக்ஸ் லேப் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கோரிக்கைகளை நிராகரித்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், `நடைமுறையில் இருக்கும் விதிகளின்படி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் இலவசங்கள், அன்பளிப்புகளுக்கு மருந்து நிறுவனங்கள் வரிவிலக்கு கோர முடியாது. வருமானவரிச் சட்டம் 1961-ன் பிரிவு 37-ன் கீழ் அத்தகைய இலவசங்களை வழங்குவதில் ஏற்படும் செலவினங்களுக்கான வரிவிலக்கை மருந்து நிறுவனங்கள் கோர முடியாது.

செலவினங்களுக்கு எந்தச் சலுகையும் இல்லாமல் மருந்து விற்பனை செய்யும் பார்மா நிறுவனங்கள் முழு வரியையும் செலுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, `மருந்து நிறுவனங்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு இலவசங்கள், அன்பளிப்புகளை வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்குவது குற்றம், சட்டத்தின்படி அந்தச் செயல் தடைசெய்யப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.