Published:Updated:

மோடி உரை... மற்றொரு ஜும்லா... சர்ச்சையாகும் இலவச உணவுதானிய அறிவிப்புகள்!

மோடி
மோடி

இந்தியாவில் 80 கோடிப் பேருக்கு நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவுதானியங்கள் வழங்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி வாயிலான நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது உரையாற்றிவருகிறார். அந்த வகையில், கடந்த ஜூன் 30-ம் தேதி தொலைக்காட்சியில் பிரதமர் உரையாற்றினார். அப்போது கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட்ட அவர், பல நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், பிரதமரின் இந்தக் கூற்றுக்கும் கள நிலவரத்துக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தில் இருக்கிறது. கொரோனா தொற்று தொடர்பாகத் தினந்தோறும் அரசால் வெளியிடப்படும் புள்ளிவிவரங்களும் பிரதமரின் கருத்துக்கு நேர்மாறானதாக இருக்கின்றன.

மோடி
மோடி

ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன், `பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வுத் திட்டம்’ மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இது பற்றி தனது உரையில் குறிப்பிட்ட மோடி, "மூன்று மாதங்களுக்கு 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் `5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 கிலோ பருப்பு ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் வரை ஏழைகளுக்கு இலவசமாக உணவுப்பொருள்கள் வழங்கப்படும்” என்றார்.

இதை பிரதமர் மோடி இப்போது பெருமையுடன் சொல்லிக்கொண்டாலும் ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்டபோது ஏழை எளிய மக்கள் அன்றாட உணவுத்தேவைக்கு தடுமாறிப்போனார்கள். இந்திய உணவுக்கழகத்தின் குடோன்களில் வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி டன் உணவுதானியங்களை மக்களுக்கு இலவசமாக விநியோகிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். வேறு பல சமூக ஆர்வலர்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். உணவுப் பிரச்னை காரணமாக மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பும் ஏற்பட்டது. அதன் பிறகுதான், மத்திய அரசு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஊரடங்கு தொடரும் நிலையில், பட்டினிச் சாவுகளைத் தடுக்க வேண்டுமென்றால், அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 10 கிலோ வீதம் உணவுப்பொருள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், அது குறித்து பிரதமர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை.

சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

வழக்கமாக, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 43 லட்சம் டன் உணவுதானியங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்ற. இதுபோக, 5 கிலோ உணவுதானியம் கூடுதலாக இலவசமாக வழங்கப்படுவதாக பிரதமர் கூறுகிறார். அப்படியென்றால், வழக்கமாக மானிய விலையில் வழங்கப்படும் 43 லட்சம் டன் உணவுதானியம் என்பது இரு மடங்காக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், ஏப்ரல் மாதம் 26 லட்சம் டன், மே மாதம் 29 லட்சம் டன் என்ற அளவுக்குத்தான் இலவச உணவுதானியங்கள் தரப்பட்டுள்ளன. அப்படியென்றால், "இதுவும் ‘ஜும்லா’தானா?” என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. ஜும்லா என்றால் வாய்ச்சவடால் என்று பொருள்.

வரக்கூடிய மாதங்களில் பல முக்கியப் பண்டிகைகள் வரவுள்ளன. ஜூலை 5-ம் தேதி குரு பூர்ணிமாவும் அதைத் தொடர்ந்து ஆவணி மாதமும் தொடங்குகிறது. பின்னர் ரக்‌ஷா பந்தன், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகிய பண்டிகைகள் வரவுள்ளன. இவை தவிர கட்டி பிஹூ, நவராத்திரி, துர்கா பூஜை, தசரா, தீபாவளி, சாத் பூஜா ஆகியவையும் வருகின்றன. இது குறித்து தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர், "விழாக்காலம் மக்களின் தேவைகளையும் செலவினங்களையும் அதிகரிக்கும். இதைக் கருத்தில் கொண்டு, பிரதம மந்திரி ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டத்தை நவம்பர் மாத இறுதி வரை நீட்டிப்பது என்று முடிவெடுத்துள்ளோம். இதன் மூலம் வரும் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் வரை இலவச உணவுதானியங்கள் வழங்கப்படும்” என்றார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தற்போதைய பீகார் மாநில சட்டமன்றத்தின் ஆயுள் வரும் நவம்பர் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அங்கு தேர்தல் நடத்த வேண்டும். எனவே, பீகார் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே, உணவுதானியங்கள் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பீகார் சட்டமன்றத் தேர்தலைத் தள்ளிவைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா சமீபத்தில் தெரிவித்தார். எனவே, பீகார் சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடத்தப்பட்டுவிடும் என்பது உறுதியாகிவிட்டது.

நவம்பர் மாதம் வரை உணவுதானியங்கள் வழங்கும் திட்டத்தை பிரதமர் விரிவுபடுத்தியுள்ளார் என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. மோடியின் தொலைக்காட்சி உரைக்கு காங்கிரஸ் கட்சியிடமிருந்து உடனடியாக எதிர்வினை வந்தது. ஏழைகளுக்கு உணவுதானியங்கள் வழங்க வேண்டும் என்று ஊரடங்கு ஆரம்பித்தபோது கோரிக்கை வைத்ததாகவும், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியதாகவும் காங்கிரஸ் இப்போது கூறுகிறது.

நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்

`உணவுதானியங்களை வழங்குமாறு நாங்கள் சொன்ன கோரிக்கை நிறைவேற்றிவிட்டீர்கள். இதேபோல, நாங்கள் சொன்ன ‘நியாய்’ திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி இப்போது கூறியுள்ளது. 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ‘குறைந்தபட்ச வருமானத் திட்டம்’ என்று பெயரிடப்பட்ட அந்தத் திட்டம், `நியாய்’ என்ற பரவலாக அறியப்பட்டது. தற்போது, ஊரடங்கு காரணமாக வேலையின்றி, வருமானமின்றி கோடிக்கணக்கான மக்கள் சிரமப்படும் நேரத்தில், `நியாய்’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்தக் கோரிக்கையை வீடியோ பதிவு மூலம் வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நியாய் திட்டத்தை ஆறு மாதங்களுக்கு செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை அது ஊக்குவிக்கும்” என்று கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பீகார் மாநில மக்கள் கடும் துயரங்களை அனுபவித்துவருகிறார்கள். பல்வேறு மாநிலங்களுக்கு பிழைப்புக்காகச் சென்ற புலம்பெயர்த் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தாம் அதிகம். எத்தனை பேர் திரும்பினார்கள் என்பது பற்றிய சரியான புள்ளிவிவரங்கள் இல்லை என்றாலும், 23 - 24 லட்சம் பேர் இருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.

புலம்பெயர்த் தொழிலாளர்கள்
புலம்பெயர்த் தொழிலாளர்கள்

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் பா.ஜ.க-வும் இடம்பெற்றுள்ளது. சொந்த ஊருக்குத் திரும்பிய பீகார் புலம்பெயர்த் தொழிலாளர்கள் அரசுக்கு எதிரான கடும் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, அவர்களை கோபத்தைத் தணிக்கும் வகையில் பிரதமரின் அறிவிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

`உலகப்போரைப் போலவே கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என உலகம் மாறிவிட்டது!’ - பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கொரோனா வைரஸ் அடித்துநொறுக்கியுள்ளது. ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், மாத ஊதியதாரர்கள் ஆகியோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். இத்தகைய சூழலில், மக்களுக்கு வருவாய் உறுதித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு `நியாய்’ திட்டத்தின்படி உதவித்தொகை வழங்குவது இந்திய அரசுக்கு பெரிய சுமையை ஏற்படுத்தாது என்றும், நாட்டின் ஜி.டி.பி-யில் மிகச்சிறிய சதவிகிதமே இதற்கு செலவாகும் என்று பொருளாதார வல்லுநர்களும் சொல்கிறார்கள்.

மோடி
மோடி

ஆனால், இத்தகைய திட்டம் குறித்து மத்திய அரசு இதுவரை எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சலுகைகள் வழங்கப்பட்டு, வரித்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில் பெட்ரோல் டீசல் விலைகள் 22 முறை உயர்த்தப்பட்டுள்ளன. 'பி.எம் கேர்ஸ்' நிதிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் குவிந்துள்ளது. இந்த நேரத்தில் மக்களுக்கு உதவாமல் எப்போது உதவப்போகிறீர்கள் பிரதமர் மோடி அவர்களே!

அடுத்த கட்டுரைக்கு