கொரோனா தொற்று இந்தியாவுக்குள் நுழைந்த நாளிலிருந்து இந்திய பிரதமர் தொடங்கி தமிழக முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு அறிவுறுத்திய முக்கியமான விஷயங்களுள் ஒன்று, `சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்பதுதான். ஆனால், மக்களுக்கு இவ்வாறு அறிவுறுத்திய தலைவர்களே, `சமூக இடைவெளியெல்லாம் மக்களுக்குத்தான், எங்களுக்கில்லை' என்பது போன்று கூட்டங்களைக் கூட்டி நலத் திட்ட உதவிகளை வழங்கியது 'ஊருக்கு மட்டும்தான் உபதேசம்' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்துக்கட்சியைச் சேர்ந்தவர்களும் சமூக விலகலைப் பின்பற்றாமல் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவிட்டார்கள். அதில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டங்களில், `சமூக இடைவெளியா அப்டின்னா..?' என்று கேட்கும் அளவுக்கு நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்புதான் இந்தக் கட்டுரை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅ.தி.மு.க
தமிழகத்தின் ஆளும்கட்சியான அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட பெரும்பாலான நிகழ்வுகளில் சமூக விலகல் பின்பற்றப்படவில்லை. அதில் சில முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகளைப் பின்வருமாறு காணலாம்.
செல்லூர் ராஜூ
'முதல்வருக்குக் கொரோனா வராது; வந்தாலும் சரியாகிவிடும்', 'ஒரு படத்தில் நடிகர் வடிவேலுவைக் கடித்துவிட்டு நாய்கள் அனைத்தும் செத்துவிடும். அதுபோல நம்மைக் கண்டு கொரோனா பயந்து ஓடும்' என்று தொடர்ந்து கொரோனாவை தாக்கிப் பேசி வந்த நம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கடந்த ஜூலை 8-ம் தேதியன்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், ஜூலை 17-ம் தேதியன்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் ஜூலை 31-ம் தேதியன்று தன் சொந்த ஊரான மதுரைக்கு... இல்லை இல்லை சிட்னிக்குத் திரும்பினார் அமைச்சர் செல்லூர் ராஜு.
அவர் மதுரை திரும்பியதை வெடி வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள், பல நூற்றுக்கணக்கான மக்களையும் அங்கு கூட்டியிருந்தனர். 'ஆகஸ்ட் 31 வரை தமிழகத்தில் 144 தடை தொடரும்' எனத் தமிழக முதல்வரும் செல்லூர் ராஜுவின் பாசத்துக்குரிய அண்ணனுமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததையெல்லாம் சற்றும் மதிக்காமல் மேடையமைத்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நலத் திட்ட உதவிகளை வழங்கினார் கூட்டுறவுத்துறை அமைச்சர். இந்த நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கிய பின்னர் பலரும் மேடைக்கு வந்து அவரை கும்பிட்டுக் கும்பிட்டுக் கீழே இறங்கியது சற்று விநோதமாக இருந்தது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு...
கொரோனா... நம்ம வடிவேலு கணக்குல சொன்னா... அப்பிடியே லைட்டா டச்-அப் பண்ணிட்டு போயிடுச்சு. எனக்கு வேற ஒண்ணுமில்ல... சும்மா ரெஸ்ட் எடுத்துட்டுதான் வந்தேன்.செல்லூர் ராஜு
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வந்தபின் `அப்பிடியே லைட்டா டச்-அப் பண்ணிட்டு போயிடுச்சு' என்று ஜாலியாகப் பேசியது அவரின் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் அங்கு கூடியிருந்து நூற்றுக்கணக்கான தொண்டர்களில் பலரும் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருந்தது குறித்து அமைச்சர் ஒரு வார்த்தைகூட பேசாதது அதிர்ச்சியைத் தருகிறது.

ஊரடங்கில் இதுபோன்ற கூட்டங்களில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறார் செல்லூர் ராஜு. அந்தக் கூட்டங்கள் எதிலுமே சமூக இடைவெளியானது கடைப்பிடிக்கப்படவேயில்லை. குறிப்பாக, கடந்த ஜூன் 1-ம் தேதியன்று மதுரை பெத்தானியாபுரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு நிவாரணம் வழங்கினார். அந்தக் கூட்டத்திலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. அந்தக் கூட்டம் முடிந்த கையோடு அங்கிருந்து டூவீலரில் சென்று பக்கத்திலிருந்த ரேஷன் கடையொன்றைப் பார்வையிட்டார். அங்கும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் அமைச்சரே வாயிலிருந்த மாஸ்க்கை கழட்டிவிட்டுப் பேசியது அதிர்ச்சியைக் கிளப்பியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜி.பாஸ்கரன்
கதர் மற்றும் கிராமத் தொழில் வாரிய அமைச்சர் ஜி.பாஸ்கரன் இந்த ஊரடங்கு முழுவதும் சிவகங்கை மாவட்டத்தைச் சுற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று நிவாரணப் பொருள்கள் வழங்கி வந்தார். ஆனால், அவர் சென்ற ஒரு இடத்தில்கூட சமூக இடைவெளியானது கடைப்பிடிக்கப்படவில்லை.
கடந்த ஏப்ரல் மாதத்தில் காரைக்குடியில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை அமைச்சர் வழங்கியபோது சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பலரும் கீழே விழுந்துவிட்டனர்.

அதேபோல சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளுக்கும் கபசுர குடிநீர், மூலிகைப் பொடி உள்ளிட்ட சித்த மருத்துவ பொருள்கள் அடங்கிய பெட்டிகளை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கிய போதும் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.
திண்டுக்கல் சீனிவாசன்
எதைப் பேசினாலும் சர்ச்சையாக மாறும் அமைச்சர்களுள் முக்கியமானவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால், ஊரடங்கு காலத்தில் அமைதியாகவே இருந்தவர் திண்டுக்கல்லில் நடந்த பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். மார்ச் மாதத்தில் ஊரடங்கு போடப்பட்டபோது, 'திண்டுக்கல்லில் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்கள்' என்று பேட்டியளித்தவர் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாதது பற்றி வாய் திறக்கவேயில்லை. ஏப்ரல் 23-ம் தேதியன்று திண்டுக்கல்லில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அந்த சிறிய அம்மா உணவகக் கட்டடத்துக்குள் 50-க்கும் அதிகமானோர் நுழைந்த காரணத்தால் சமூக இடைவெளி காணாமல் போனது.
நியாயவிலைக் கடை திறப்பு விழா, நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழா என அமைச்சர் சீனிவாசன் கலந்துகொண்ட விழாக்கள் பலவற்றிலும் சமூக விலகல் பின்பற்றபடவில்லை. அதுமட்டுமல்லாமல் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்காக முகக்கவசத்தையும் கழற்றிவிட்டபடியே இருந்ததும் சர்ச்சைக்குள்ளானது.

ஆர்.பி.உதயகுமார்
அதேபோல, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, மதுரையிலுள்ள தெற்கு மாசி வீதியில் பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டியளித்தார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அந்தச் சமயத்தில் தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனா நோய்த்தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், முறையான ஏற்பாடுகள் செய்யாமல் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் அமைச்சர் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தது பத்திரிகையாளர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
விஜயபாஸ்கர்
கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்தே பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருப்பவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். தினமும் செய்தியாளர்கள் சந்திப்பில், "அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று தொடர்ந்து கூறி வந்தவரும் அமைச்சர் விஜயபாஸ்கர்தான்.
பொதுமக்கள் மாஸ்க் அணியாம பொறுப்பில்லாம இருக்கீங்க... சமூக விலகலைக் கடைப்பிடிக்காதது வருத்தமா இருக்குது.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர்
"பொதுமக்கள் பொறுப்பில்லாம இருக்கீங்க" என்றவர் அவரே பொறுப்பில்லாமல் நடந்துகொண்டது சர்ச்சையைக் கிளப்பியது. புதுக்கோட்டை மாவட்டம், கருக்காக்குறிச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் சமூக இடைவெளியை யாரும் கடைப்பிடிக்கவில்லை.

புதுக்கோட்டைச் செல்லப்பா நகரில், அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ.80 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா திறப்பு விழா, புதுக்கோட்டைப் பிடாரி அம்மன் கோயில் திருப்பணி ஆய்வு நிகழ்ச்சி என அவர் தொடர்ச்சியாகப் பங்கேற்ற நிகழ்ச்சிகளிலும் சமூக இடைவெளியானது கடைப்பிடிக்கப்படவேயில்லை.
துணை முதல்வர்
தேனி போடிநாயக்கனூரில், ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் 1-ம் தேதி நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நலத்திட்ட உதவிகளைப் பெற வந்திருந்த மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை; முகக்கவசம் அணியவில்லை; கடும் நெரிசல் வேறு. எதற்கும் அலட்டிக்கொள்ளாத ஓ.பி.எஸ் பெயருக்கு ஐந்து நபர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகளைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

தொடர்ந்து போடி, மீனாட்சிபுரம் கண்மாயில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்தவர், இருநூற்றுக்கும் அதிகமானோர் கூடியிருந்த கூட்டத்தில் கைகூப்பியபடியே புகுந்தார். இதைப் பார்த்து தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
முதல்வர்
`தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த மக்களுக்கு ஏன் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கவில்லை' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு `தூத்துக்குடியில் 144 தடை இருப்பதால் அங்கு போக முடியவில்லை' என்று பதிலளித்தார் முதல்வர். ஆனால், தமிழகத்தில் நோய்த்தொற்று பெருகி வந்த நிலையில், சேலத்தில் நடந்த பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் முதல்வர். அப்போதும் தமிழகம் முழுவதும் 144 தடை அமலிலிருந்தது. முதல்வர் கலந்துகொண்ட அந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் கலந்துகொண்டது எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை.

இவ்வளவு கூட்டம் கூடிய நிகழ்ச்சியில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் கலந்துகொண்ட முதல்வர், ``மக்கள் ஒத்துழைக்காததால்தான் கொரோனா பரவுகிறது’’ என்று சொல்வது வேடிக்கையாகத்தான் உள்ளது.
தி.மு.க
தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்ட நிகழ்வுகள் பலவற்றிலும் சமூக இடைவெளியானது கடைப்பிடிக்கப்படவில்லை.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டிருந்தாலும், மே 31-ம் தேதியன்று விருகம்பாக்கத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூட்டப்பட்டது. அந்த நிகழ்வில் சமூக விலகலானது சுத்தமாக கடைப்பிடிக்கப்படவில்லை. அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் தனசேகரனிடம் '300 பேருக்கு மேல் கூட வேண்டாம்' என்று காவல்துறை எச்சரித்திருந்தது. ஆனால், விருகம்பாக்கம் தொகுதியைக் குறிவைத்துள்ள அவர், ஸ்டாலினிடம் தன் பலத்தைக் காட்டியே ஆக வேண்டும் என்று 5,000 பேரைக் கூட்டிவிட்டாராம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், முகக்கவசமும் முழுமையாக அணியாமல் ஏராளமான மக்கள் திரண்டிருந்ததைப் பார்த்த பின்னும் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த ஸ்டாலின், ஐந்தே நிமிடங்களில் நிகழ்ச்சியை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.

கடந்த ஜூன் மாதம், தி.மு.க எம்.பி ஆ.ராசா, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்த நிகழ்விலும் சமூக இடைவெளியை யாரும் கடைப்பிடிக்கவில்லை. நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது ஆ.ராசாவுக்கு அருகிலிருந்த மூன்று நான்கு தி.மு.க நிர்வாகிகள் முகக்கவசமே அணியவில்லை. ஆ.ராசா முகக்கவசம் அணிந்திருந்தார். ஆனால், வாய்க்கோ மூக்குக்கோ அல்ல... கழுத்துக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ்
கடந்த ஜூன் 19-ம் தேதியன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் மரம் நடும் விழா ஒன்றில் கலந்துகொண்டார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. அந்த நிகழ்வின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். அந்தப் புகைப்படத்தை வைத்துப் பார்க்கும்போது அந்த நிகழ்விலும் சமூக இடைவெளியானது கடைப்பிடிக்கப்படவில்லை என்பது தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் அந்தப் புகைப்படத்தில் சிறுவன் ஒருவனும் மாஸ்க் அணியாமல் நின்றுகொண்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பி.ஜே.பி திட்டம்போடுவதாகக் கூறி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்திலும் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. சிலர் முகக்கவசம்கூட அணியாமல் கோஷமிட்டது அதிர்ச்சியைத் தந்தது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலரும் பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்ட காமராஜர் பிறந்தநாள் விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை.
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிவகங்கை மாவட்டத்தைச் சுற்றி உள்ள ஊர்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் பலவற்றிலும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படவில்லை.
பி.ஜே.பி
கடந்த ஜூலை 6-ம் தேதியன்று, ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காக தி.நகரிலுள்ள பி.ஜே.பி அலுவலகத்தில் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் கூடியிருந்தனர். தமிழக பி.ஜே.பி-யின் தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த நிகழ்வில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படவில்லை.

சர்ச்சைப் பேச்சுகளை அடிக்கடி அவிழ்த்துவிடும் பி.ஜே.பி-யின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தன் சொந்த ஊரான காரைக்குடியில் ரோட்டரி சங்கத்தின் மரம் நடும் விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ஒருவருக்கொருவர் மிக அருகில் நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். இந்தப் புகைப்படத்தில் முகக்கவசத்தைக்கூட சரியாக அணியாமல் போஸ் கொடுத்திருந்தார் ஹெச்.ராஜா.
இந்த ஊரடங்கில் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகள் பலவற்றிலும் சமூக விலகல் பின்பற்றபடவில்லை என்பதற்கு அவர்களின் சமூக வலைதளக் கணக்குகளில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்களே சாட்சி!
தமிழகத்தில் மட்டுமல்ல...
இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்தியாவிலேயே அதிக தொற்றுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்ரே, துணை முதல்வர் அஜித் பவார், எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் என மூத்த தலைவர்கள் அனைவருமே அங்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் சமூக விலகலைக் கடைப்பிடிக்கவில்லை. மற்ற மாநிலங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
நலத் திட்ட உதவிகள் வழங்குவதை யாரும் குறை சொல்ல முடியாது. அதே நேரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது அங்கு கூடும் மக்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பும் அந்த நிகழ்வை ஒருங்கிணைத்த கட்சிக்காரர்களையும் அங்கு கண்காணிப்பில் ஈட்டுப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளையும் அம்மாநில அரசாங்கத்தையுமே சாரும்.
ஆளுங்கட்சி மட்டுமல்ல எந்தவொரு கட்சியைச் சேர்ந்த தலைவராக இருந்தாலும் தாங்கள் கலந்துகொள்ளும் விழாக்களில் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்பதை முதலில் உறுதி செய்த பின்னர்தான் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் உள்துறை அமைச்சர், தமிழக ஆளுநர், கர்நாடக முதல்வர் எனப் பெரும் பதவிகளில் இருப்பவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இனியாவது அரசியல் தலைவர்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிப்பது, சரியான முறையில் மாஸ்க் அணிவது என எல்லாவற்றையும் சரி செய்துகொண்டு விழாக்களை நடத்தும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும்.
இதுபோன்று சமூக விலகலைக் கடைப்பிடிக்காத நிகழ்வுகள் ஏதேனும் விடுபட்டிருந்தால் கமென்ட்டில் பகிருங்கள்..!