Published:Updated:

"கொரோனா, நோய்க் கட்டுப்பாட்டுக் குழுவில் சித்த மருத்துவர் எங்கே?"- தமிழக அரசு தரும் விளக்கம்

"கொரோனாவைத் தடுப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நவீன மருத்துவத் துறையினரும் சித்த மருத்துவத் துறையோடு இணக்கமான போக்கைத்தான் கடைப்பிடித்து வருகின்றனர்."

கொரோனா பாதிப்பில் உச்சம் தொட்டுவரும் தமிழகத்தில், நோய்த்தொறுக்கு எதிராகப் போராடிவரும் சுகாதாரத் துறையின் பங்களிப்பு மகத்தானது. தங்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும்கூட மருத்துவர், செவிலியர் என அனைவரும் பொதுமக்களின் உயிர்காக்கப் போராடிவருகின்றனர். இந்தவகையில், ஆங்கில மருத்துவம் எனப்படும் நவீன மருத்துவத் துறையின் செயல்பாடுகள்தான் கொரோனா ஒழிப்பில் முன்னணியில் இருந்துவருகிறது.

விஜயபாஸ்கர் - எடப்பாடி பழனிசாமி
விஜயபாஸ்கர் - எடப்பாடி பழனிசாமி

அதேசமயம், கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் மருந்துகள் எதுவும் நவீன மருத்துவத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தச் சூழலில்தான், நம் பாரம்பர்ய மருத்துவமான சித்த மருத்துவ சிகிச்சைகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகுக்கின்றன. அதிக செலவில்லாத, எந்தவித பக்க விளைவுகளையும் உண்டுபண்ணாத, எளிய மருத்துவ முறைதான் சித்த மருத்துவம் எனப்படுகிறது. ஆனாலும்கூட, கொரோனா ஒழிப்பில், சித்த மருத்துவத்துறையை முழுமையாக ஈடுபடுத்தாமல் இருந்துவருவதாக சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதில், நவீன மருத்துவத் துறை - பாரம்பர்ய மருத்துவ முறைகளுக்கு இடையிலான போட்டிகள் உலகம் முழுவதுமே தடதடத்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில், நவீன மருத்துவத்தோடு பாரம்பர்ய மருத்துவ முறையையும் இணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அலோபதியுடன் கலந்த சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தரவுகளை எடுத்துரைக்கிறார்கள்.

எனவே, 'கொரோனா உச்சம் தொட்டுவரும் இந்நேரத்தில், சித்த மருத்துவத்தின் பயன்பாட்டை நவீன மருத்துவ முறையுடன் சேர்த்து அங்கீகரித்து செயல்படவைத்தால், விரைவிலேயே கொரோனா தாக்கத்திலிருந்து தமிழ்நாடு முழுமையாக விடுபடும்' என்கிறார்கள் இத்துறையைச் சார்ந்த மருத்துவ வல்லுநர்கள். அரசியல் ரீதியாகவும், சித்த மருத்துவத்துக்கான ஆதரவுக் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.

ஜெயபிரகாஷ் நாராயணன்
ஜெயபிரகாஷ் நாராயணன்

இந்தநிலையில், கொரோனா நோய்த்தடுப்பில், சித்தமருத்துவத்தின் பங்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொலியில் உரையாடிய சித்த மருத்துவரும் 'தேசிய சித்த மருத்துவ அறிவியல் ஆலோசனைக் குழு முன்னாள் தலைவருமான டாக்டர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம் பேசியபோது, ''மரபு சார்ந்த நமது மருத்துவ முறைகளை அப்படியே பின்பற்றுவதைவிடவும் நவீன மருத்துவத்துடன் (modern parameters) இணைந்து பின்பற்றும்போதுதான் அது அனைத்துத் தரப்பு மக்களுக்குமான மருத்துவமாகப் போய்சேரும். கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்த நேரத்திலேயே, மரபுசார்ந்த மருத்துவ வல்லுநர்களுடனான கலந்துரையாடலின்போது பிரதமர் நரேந்திர மோடியும் இந்தக் கருத்தைத்தான் எங்களிடம் எடுத்துச் சொன்னார்.

இதை வரவேற்றுப் பேச ஆரம்பித்த நான் 'சித்தர்கள் மற்றும் மகரிஷிகள் சொல்லிச்சென்ற மருத்துவ முறைகளை நாங்கள் அப்படியே பயன்படுத்துவது இல்லை. நவீன மருத்துவத் துறையோடு இணைந்த வழிமுறைகளைத்தான் பின்பற்றி வருகிறோம்' என்று சொன்னேன். மேலும், கடந்த முறை தமிழ்நாட்டில் கொள்ளை நோயாக உருவெடுத்த டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த, சித்த மருத்துவத்தின் 'நிலவேம்புக் குடிநீர்'தான் நல்லமுறையில் பயனளித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல், தற்போது பரவிவரும் கொரோனா நோய்த்தொற்றைக் குணப்படுத்த, சித்த மருத்துவத் தயாரிப்பான 'கபசுரக் குடிநீரும்' மாத்திரை வடிவிலான சித்த மருந்துகளும் நன்றாகப் பயன்படும். இதனை எல்லோரும் பயன்படுத்த உதவவேண்டும் என்றும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். ஏனெனில், கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் வைரஸின் தாக்கத்தை தடுத்து நிறுத்தி குணப்படுத்துவதுமாக திறம்பட வேலை செய்யக்கூடியது கபசுரக் குடிநீர்.

கொரோனா தடுப்பு சிகிச்சைக்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சித்த மருத்துவர் வீரபாபு என்னுடைய மாணவர்தான். இவரது தலைமையில், சென்னை - நெற்குன்றத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கொரோனா நோய்த் தடுப்பு சிகிச்சைக்காக 400 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சித்த மருத்துவ முறையிலேயே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து ஐந்தே நாள்களில் குணப்படுத்தியும் வருகிறார்கள். செங்கல்பட்டில் உள்ள கொரோனா தடுப்பு மையத்தில், சித்த மருத்துவத்தையும் இணைப்பு மருத்துவமாக சேர்த்து சிகிச்சையளிக்கும் வசதியைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதுவும் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

கோவிட்-19
கோவிட்-19

கொரோனாவைத் தடுப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நவீன மருத்துவத் துறையினரும் சித்த மருத்துவத் துறையோடு இணக்கமான போக்கைத்தான் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால், நோய்த்தொற்றின் தாக்கம் ஆரம்பித்த மார்ச் மாதத்திலேயே சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற விரும்புவோருக்குத் தனியே வசதி ஏற்படுத்திக்கொடுத்திருந்தால், கொரோனா தீவிரத்தைப் பெருமளவில் கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

கொரோனா பரவல் உச்சத்துக்குச் சென்றிருக்கும் இந்தக் காலகட்டத்திலும்கூட சித்த மருத்துவர்கள் அனைவரும் தெருத்தெருவாகப் போய் கபசுரக் குடிநீரை மக்களுக்கு வழங்கிவருகிறார்கள். ஆனால், அரசு மருத்துவமனைகளில், சித்தா - யுனானி மற்றும் ஆயுர்வேதப் பிரிவுகளில் உள்ள ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்கள் என்பது இன்னும் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன என்பதுதான் வேதனையாக இருக்கிறது. புதிதாக மருத்துவர்களை நியமிக்காவிட்டாலும்கூட, ஏற்கெனவே பணியாற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் இப்போதும் நிரப்பப்படாமல் இருக்கிறதென்றால், அது எவ்வளவு வேதனையான செய்தி.

குஜராத்தில், நவீன மருத்துவர்களோடு இணைந்து செயல்படும் வகையில் வார்டுதோறும் மரபு சார் மருத்துவர்கள் 6,000 பேரையும் நியமனம் செய்து நல்லமுறையில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதேபோல், தமிழ்நாட்டிலும் ஓர் அங்கீகாரத்தைக் கொடுத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். மேலும் கொரோனாவைத் தடுக்கும் நோய்க் கட்டுப்பாட்டுக் குழுவிலும்கூட, இதுவரை எந்தவொரு சித்த மருத்துவரும் சேர்க்கப்படவில்லை என்பது வருத்தமான விஷயம்'' என்றார் வேதனையாக.

இதற்கிடையே, பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், 'சித்த மருத்துவ நிறுவன ஆராய்ச்சியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை 5 நாள்களில் குணமாக்கியிருப்பதாக தெரியவருகிறது. இது ஒரு மருத்துவ அதிசயம்.

கொரோனா
கொரோனா

எனவே, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இந்தச் செயல், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் கடந்துபோகக்கூடிய ஒன்றல்ல. மாறாக கவனத்தில் கொண்டு பரிசீலிக்கவேண்டிய ஒன்று. எனவே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தையும் தமிழக அரசு இணைத்துக்கொள்ள வேண்டும்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசுகிற அந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி-யும் மருத்துவருமான செந்தில், ''ஆங்கில மருத்துவத்தில், பாக்டீரியாக்களை முழுமையாகக் கொல்லக்கூடிய மருந்துகள் உண்டு. ஆனால், வைரஸை முழுமையாகக் கொல்லக்கூடிய மருந்துகள் என்பது மிக மிகக்குறைவு. அதனால்தான் ஹெச்.ஐ.வி வைரஸ் ஒருவரைத் தாக்கினால், அந்த வைரஸோடு காலம் முழுவதும் அவர் போராட வேண்டியதிருக்கிறது. அதேசமயம், வைரஸைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் இருக்கின்றன.

கொரோனா எனப்படும் கோவிட்-19 வைரஸ் என்பது புதிதாக வந்துள்ள வைரஸ். ஆரம்பத்தில், கொரோனாவைத் தடுக்க 'குளோரோகுயின்' மாத்திரைகள் கொடுக்கலாம் என்றார்கள். இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அடுத்து, 'ஆன்ட்டி பாராசைட்' கொடுக்கலாமா, வேண்டாமா என்பதிலும் சர்ச்சைகள் இருக்கின்றன. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்குத் தடையின்றி ஆக்சிஜன் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மட்டும்தான் நவீன மருத்துவத்தில் சர்ச்சைகள் ஏதும் இல்லை. இதைத்தான் நவீன மருத்துவமும் தற்போதுவரை செய்துவருகிறது.

எந்தவொரு விஷயத்திலுமே மந்திரம் போட்டதுபோல், உடனடியாகத் தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்வதெல்லாம் பொய்தான். எனவே, சித்த மருத்துவத்தையும்கூட, அறிவியல் ரீதியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அந்தவகையில், முதன்முதலில் பாதிப்பு ஏற்பட்ட சீனாவில், அங்குள்ள பாரம்பர்ய மருத்துவ முறைகளைக் கையாண்டுதான் நோயிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள்; ஏனெனில், நவீன மருத்துவத்தில் இதற்கான தீர்வு இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இரா.செந்தில்
இரா.செந்தில்

சித்த மருத்துவத்தில், இயற்கையாகக் கிடைக்கக்கூடிய மூலிகைகளைப் பயன்படுத்தியே மருந்துகளைத் தயாரிக்கிறார்கள். எனவே இந்த மருத்துவ முறையினால் எந்தவொரு பக்கவிளைவுகளுமே கிடையாது என்பதுதான் இதன் தனிச்சிறப்பு. 'கபசுரக் குடிநீர்' கொரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான் பயன்படுத்தி வருகிறோம். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 160 பேர் மற்றும் புழல் சிறைக் கைதிகள் 23 பேர் என இவர்கள் அனைவரையும் சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் வெறும் ஐந்தே நாள்களில் குணப்படுத்தியுள்ள சான்றுகளும் இருக்கின்றன.

இனி அடுத்தகட்டமாக, ஆங்கில மருத்துவ சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் குணமடைந்துள்ளனர், சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டவர்களில் எத்தனைபேர் குணமடைந்துள்ளனர் என்றுதான் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், நோய்த்தொற்று தீவிரமாகியிருக்கும் இந்நேரத்தில் இந்த ஆராய்ச்சிகளை செய்வதென்பது சரியான நடைமுறையாக இருக்காது.

மேலும், வருகிற நோயாளியிடம் 'சித்த மருத்துவ முறையில் மட்டுமே சிகிச்சையளிப்போம்; ஆக்சிஜன் பொருத்தமாட்டோம்' என்றெல்லாம் சொன்னால், நோயாளிகளேகூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே, நோயாளிகளுக்கு நவீன மருத்துவமுறையில் ஆக்சிஜன் அளிப்பதோடு, சாதாரண உணவு முறையைச் சார்ந்தே உள்ள சித்த மருந்துகளையும் கொடுத்து வருவதே நல்லது.

கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவிவரும் இந்த நேரத்தில், அதைத் தடுப்பதற்கான மருந்துகளும் நவீன மருத்துவத்தில் இல்லை என்கிறபோது, பக்கவிளைவுகள் இல்லாத நம் பாரம்பர்ய மருத்துவமான சித்த மருத்துவத்தையும் பயன்படுத்திக்கொள்வதுதான் சரியானதாக இருக்கும். இதைத்தான் மருத்துவர் அன்புமணி ராமதாஸும் அறிக்கையின் வாயிலாக தெரிவித்திருக்கிறார்.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

அலோபதி மருத்துவம் என்ற சொல்லாடலே இப்போது கிடையாது. ஏனெனில், அலோபதி என்ற தனிப்பட்ட மருத்துவ முறையே இப்போது இல்லை. உலகில் உள்ள அனைத்து மருத்துவ முறைகளிலும் உள்ள நல்ல கூறுகளையெல்லாம் எடுத்துப் பயன்படுத்திவரும் முறைதான் நடைமுறையில் இருந்துவருகிறது. எனவே, இதை 'நவீன மருத்துவ முறை' என்றுதான் கூறவேண்டும்'' என்றார் தெளிவாக.

தமிழ்நாட்டின் தற்போதைய சூழலில், சித்த மருத்துவ சேவையினை முழுமையாகப் பயன்படுத்துதல் மற்றும் சித்த மருத்துவர்களுக்கான பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கேள்விகளை சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்...

கொரோனா vs சாதாரண சளி, காய்ச்சல் - என்ன செய்ய வேண்டும் நாம்?

''கொரோனா பாதிப்புகளைத் தடுத்து நிறுத்துவதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையோடு மாநில அரசின் முயற்சியாகவும் சித்த மருத்துவத்தின் பங்களிப்புகளை அதிகப்படுத்தி வருகிறோம். இந்த வகையில், இரு மருத்துவ முறைகளையும் சேர்த்து கூட்டு முயற்சியாக சில இடங்களில் சிகிச்சையளித்து வருகிறோம். மேலும், சித்த மருத்துவத்தை விரும்புகிற மக்களுக்காக ஒரு சில இடங்களில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தினரின் மேற்பார்வையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும்கூட சித்த மருத்துவத்தின் பங்களிப்பினை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அரசு எடுத்துவருகிறது.

ராதா கிருஷ்ணன்
ராதா கிருஷ்ணன்

சுகாதாரத் துறைச் செயலாளராக நான் பொறுப்பேற்று சில நாள்கள் மட்டுமே ஆகியிருக்கின்றன. கொரோனா நோய்த் தடுப்புக் குழு என்பது ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளது. இதில், கொள்ளை நோய் தடுப்பில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள், பொதுசுகாதாரத் துறை மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்கள். எனவே, சித்த மருத்துவர்கள் மட்டுமே இதில் இடம்பெறவில்லை என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டாம். இயல்பாக இந்தக் குழுவில் எந்தெந்த மருத்துவர்களின் பங்களிப்புகள் தேவையோ அவையனைத்தும் நிச்சயம் கொண்டுவரப்படும். இதேபோல், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்தும் அரசு தீவிர முயற்சி செய்துவருகிறது'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு