Published:Updated:

`மரங்களைப் பராமரிப்பவர்களுக்கு மரியாதை' - வித்தியாசமாகக் கொண்டாடப்பட்ட மருத்துவமனை தினம்!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டியின் பிறந்ததினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும், `மருத்துவமனை தினமா'கக் கொண்டாடப்படுகிறது.

பொன்னேரி அரசு மருத்துவமனை
பொன்னேரி அரசு மருத்துவமனை

அறுவை சிகிச்சை நிபுணர், கல்வியாளர், சென்னை மாகாண சபையின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை அரசு மகப்பேறு மருத்துவமனையின் முதல் பெண் பயிற்சி மருத்துவர் என பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருப்பவர் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி.

விழா
விழா

மருத்துவம் மட்டுமல்லாது சமூக சீர்திருத்தச் செயல்பாடுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். அவரின் பிறந்தநாளை மருத்துவமனை தினமாகக் கொண்டாட தமிழக அரசு முடிவுசெய்து அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. அதன் காரணமாக, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று காலை முதலே பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன.

முத்துலெட்சுமி அம்மையாரின் மருத்துவ மற்றும் சமூக செயல்பாடுகளைப்பற்றி அனைவருக்கும் எடுத்துக் கூறினோம். அவரைப்போல் செயல்பட வேண்டும் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையின் சார்பாகவும் முத்துலெட்சுமி ரெட்டியின் பிறந்ததினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள். சமூக ஆர்வலர்கள் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவர் அனுரத்னா
மருத்துவர் அனுரத்னா

விழா குறித்து பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனுரத்னா பேசும்போது, ``மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 12 மணிக்குப் பிறகு விழா கொண்டாட முடிவுசெய்தோம். மருத்துவமனை ஊழியர்கள் மட்டுமல்லாது, மருத்துவமனையின் வளர்ச்சிக்கு உதவியவர்களுடனும் இணைந்து மருத்துவமனை தினத்தைக் கொண்டாட வேண்டும் எனவும் முடிவெடுத்தோம்.

அந்தவகையில் எங்கள் மருத்துவமனையை அடிக்கடி சுத்தம்செய்து பராமரித்துவரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நண்பர்களையும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள செடிகளுக்கு தினம் தண்ணீர் ஊற்றிப் பராமரித்துவரும் பொன்னேரி வள்ளலார் சபையைச் சேர்ந்த நண்பர்களையும் எங்கள் மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தொடர்ந்து உதவி செய்துவரும் சென்னை பெட்ரோ கெமிக்கல் குழுமத்தைச் சேர்ந்தவர்களையும் விழாவுக்கு அழைத்து பொன்னாடைப் போர்த்தி மரியாதை செய்தோம்.

சேவையாளர்களுக்கு மரியாதை
சேவையாளர்களுக்கு மரியாதை

பொன்னேரி போலீஸ் டி.எஸ்.பி. பவன்குமார்ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவில், கலந்துகொண்ட அனைவருக்கும் துணிப்பைகள் வழங்கினோம். பிளாஸ்டிக் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். மருத்துவமனை வளாகத்தில் மரங்கள் நட்டோம். முத்துலெட்சுமி அம்மையாரின் மருத்துவ மற்றும் சமூக செயல்பாடுகளைப்பற்றி அனைவருக்கும் எடுத்துக் கூறினோம். அவரைப்போல் செயல்பட வேண்டும் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம் '' என்றார் அவர்.