Published:Updated:

`எங்கள் அடிமடியிலேயே கைவைப்பது நியாயமா?' - புதிய உத்தரவால் அலறும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள்

ஏற்கெனவே பற்பல காரணங்களுக்காக மாதம்தோறும் தங்களின் சம்பளப் பணத்தை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இழந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது சுகாதாரத்துறையின் உயரதிகாரிகளிடமிருந்து புதிதாக வந்திருக்கும் வாய்மொழி உத்தரவு ஒன்று, அவர்களை ஆடிப்போகச் செய்திருக்கிறது.

`அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி’ என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் மின்னல் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கின்றன. அடாது மழை பெய்தாலும், விடாது தடுப்பூசி போடப்படும் என்கிற அளவுக்குத் தமிழக சுகாதாரத்துறை மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்தகட்டமாக, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் என்று ஊருக்கு ஊர் ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், இந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குமுறல்களுக்குச் செவிமடுக்கத்தான் ஆளில்லை!

கொரோனாவுக்கான அரசாங்க செலவுகளை `காந்தி கணக்கு’, `நேரு கணக்கு’ கதையாகக் கையாண்டு, பல நூறு கோடிகளை சுருட்டியிருக்கிறார்கள் முந்தைய ஆட்சியாளர்கள். இன்றைய ஆட்சியிலும் அந்தச் சுருட்டல் நின்றபாடில்லை. அதேசமயம், களத்தில் முன்னின்று கொரோனாவுக்கு எதிராக வாள் வீசிக்கொண்டிருக்கும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்களின் சம்பளப் பணத்திலும், கொரோனாவைக் காரணம் காட்டி கைவைக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல?

Govt Primary health centre (Representational Image)
Govt Primary health centre (Representational Image)
Photo: Vikatan

ஏற்கெனவே பற்பல காரணங்களுக்காக மாதம்தோறும் தங்களின் சம்பளப் பணத்தை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இழந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது சுகாதாரத்துறையின் உயரதிகாரிகளிடமிருந்து புதிதாக வந்திருக்கும் வாய்மொழி உத்தரவு ஒன்று, அவர்களை ஆடிப்போகச் செய்திருக்கிறது.

`ஆரம்ப சுகாதார நிலையங்களைப் புனரமைக்கும் வேலையை, அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவரே மேற்கொள்ள வேண்டும். இதற்கான செலவை அவர்கள் செய்ய வேண்டும். அந்தத் தொகை, பிறகு அவர்களுக்கு வழங்கப்படும்‘ என்பதுதான் அந்த உத்தரவு.

இதுகுறித்து பேசிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர், ``கொரோனா ஆரம்பித்த நாள் முதலாகவே பல வகைகளிலும் எங்கள் கையிலிருந்துதான் பணத்தைச் செலவழிக்கிறோம். பிறகு தருகிறோம் என்று அரசுத் தரப்பில் சொல்கிறார்களே தவிர, இரண்டு ஆண்டுகளாக ஒரு ரூபாயைக்கூடத் தரவில்லை.
இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதற்கான பிரசாரம், சேர், டேபிள், மைக் செட், உணவு உள்ளிட்ட அனைத்துக்கும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள்தான் செலவழிக்கிறார்கள். மாதம்தோறும் ஒவ்வொரு மருத்துவரும் 3,000 ரூபாய்வரை இப்படிச் செலவழிக்கிறார்கள்.

மருத்துவமனையை நிர்வகிப்பதற்காக வழங்கப்படும் `பிடபுள்யு எஸ்' நிதியானது (PWS GF - Patient Welfare Society) கடந்த 10 மாதங்களாக வழங்கப்படவில்லை. அதனால், அத்தியாவசிய செலவினங்கள், தற்காலிக துப்புரவுப் பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களையும் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள்தான் மாதம் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 5,000 வரை தங்களுடைய சம்பளத்திலிருந்து கொடுத்துவருகிறார்கள். ஆகக்கூடி மாதம் 8,000 ரூபாய் வரை ஒவ்வொரு மாதமும் கையிலிருந்து செலவு செய்ய நேரிடுகிறது.
கடந்த டிசம்பரில் அம்மா மினி கிளினிக் திறந்தார்கள். அதற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி பின்னர் வழங்கப்படும். இப்போதைக்கு உங்கள் கையிலிருந்து செலவு செய்யுங்கள் என்று உயரதிகாரிகள் உத்தரவிட்டதால், மருத்துவ அலுவலர்கள் கையிலிருந்து செலவு செய்தார்கள். ஆனால், இன்றுவரை மருத்துவ அலுவலர்களுக்கு அந்தப் பணமும் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில்தான், ஆரம்ப சுகாதார நிலைய புனரமைப்பு வேலையைச் செய்யச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். மத்திய அரசின் `என்.க்யூ.ஏ.எஸ்’ (NQAS - National quality assurance standard) மற்றும் காயகல்ப் (Kayakalp) என்கிற இரண்டு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு உரிய எவ்வித நிதி ஆதாரமும் வழங்கப்படவில்லை. ஏற்கெனவே செலவு செய்ததே வராமல் இருக்கும்சூழலில், மேற்கொண்டு மருத்துவர்களின் சம்பளப் பணத்தில் கைவைக்கும் வேலையாகவே இருக்கிறது.

Govt Primary health centre (Representational Image)
Govt Primary health centre (Representational Image)
Photo: Vikatan
`ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி; நிறைவேற உதவுவாரா உதயநிதி?' - காத்திருக்கும் மருத்துவர்கள்!

மத்திய அரசின் தரச்சான்று பெற வேண்டுமென்றால், மருத்துவமனைகளைப் புதுப்பிக்க வேண்டும். அதற்காகத் தனியார் மருத்துவமனைக்கு இணையாக மாற்ற வேண்டும் என்று மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வருகின்றன. ஆனால், பல ஆண்டுகளாக பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படாத ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குக் கழிவறை சுத்தம் செய்வது, சுவரில் வர்ணம் பூசுவது, நோயாளிகள் படுக்கைகளுக்கு இடையில் திரைச்சீலை போடுவது, மருத்துவ உபகரணங்களைப் புதிதாக வாங்குவது, மூலிகைத் தோட்டம் அமைப்பது என அதற்கான செலவுகள் மிகமிக அதிகம். இவற்றையும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களே செய்ய வேண்டும் என வாய்மொழியாக அச்சுறுத்தப்படுகிறார்கள். பிறகு பணம் தருவதாகக் கூறுகிறார்கள்.

ஆயிரம், இரண்டாயிரம் என்றால்கூட பரவாயில்லை. ஒவ்வொரு மருத்துவமனைக்கும் குறைந்தபட்சம் இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்யவேண்டியிருக்கும். ஒவ்வொரு மருத்துவ அலுவலருக்கும் சராசரியாக மூன்று மாதத்துக்கான சம்பள தொகை இது’’ என்று வருத்தம் பொங்கச் சொன்னவர், ``இப்படி செலவு செய்யச் சொன்னால், மருத்துவ அலுவலர்கள் எங்கே போவார்கள்.... கொரோனா சமயத்தில் எங்களைக் கொண்டாடியவர்கள், எங்களின் அர்ப்பணிப்பான பணிகளைப் பார்த்து ஊக்கத்தொகை வழங்குகிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். பிறகு, அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அப்படி ஊக்கத்தொகைகூட தரவேண்டாம். அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால், சம்பள பணத்திலும் கைவைப்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. இதை எங்களுடைய சங்கத் தலைவர்களும் கண்டுகொள்ளவில்லை’’ என்று சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சும்மாவே நம் ஊரில் லஞ்சம் வாங்குவார்கள். ஊழல் செய்வார்கள். அப்படியிருக்க, அரசாங்கம் செய்ய வேண்டிய செலவுகளை, பணியாளர்களே செய்ய வேண்டும் என்று நிர்பந்தித்தால், நேர்மையாகப் பணியாற்ற நினைப்பவர்கள்கூட லஞ்சம், ஊழல் செய்துதான் சமாளிக்கப் பார்ப்பார்கள். ஆகக்கூடி, லஞ்சம் வாங்குவதற்கான நெருக்கடியை அரசாங்கமே ஏற்படுத்துவதுபோலத்தான் இருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் (TNMOA) மாநிலச் செயலாளர் மருத்துவர் மு.அகிலனிடம் கேட்டபோது, `` `பிடபுள்யு எஸ்' நிதி இன்னும் வரவில்லை என்பது உண்மைதான். கையிலிருந்து செலவழித்துவிட்டு பின்னர் செலவுக்கான ரசீதுகளைச் சமர்ப்பித்து நிதி வரும்போது பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இது வழக்கத்தில் உள்ள நடைமுறைதான். புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இதுபற்றிய தெளிவு இருக்காது. இதுதொடர்பாக தெளிவை ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யவிருக்கிறோம்.

Doctor
Doctor
(Representational Image)
`பிரசவம் பார்க்கிற எங்களுக்கே மகப்பேறு விடுப்பு இல்லை!' - விரக்தியில் அரசு பெண் மருத்துவர்கள்

அதேசமயம், நிதி தொடர்பான பிரச்னைகளை மாநில சுகாதாரத் துறை அமைச்சர், தேசிய சுகாதாரத் திட்ட (NHM) இயக்குநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுவிட்டோம். முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றுவோம் என்று அமைச்சர் உறுதி கொடுத்திருக்கிறார்.
நிதியை அனுப்புவதில் நடைமுறை சிக்கல்கள், தாமதங்கள் இருப்பதால் நிதியை நேரடியாகவே ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் பிரச்னை சரியாகிவிடும்'' என்று சொன்னவர், ``மத்திய அரசின் `என்.க்யூ.ஏ.எஸ்’ தரச்சான்றிதழ் பெறுவது மற்றும் காயகல்ப் திட்டம் இரண்டையும் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி விரும்பினால் மட்டுமே செய்ய வேண்டும்.

கட்டாயப்படுத்தினால், என் கவனத்துக்குக் கொண்டு வரும்பட்சத்தில் தீர்வு கண்டுவிட முடியும். கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பதற்கான அரசாணை வந்துவிட்டது. அனைவருக்கும் ரூ.30,000 வழங்குபடி சுற்றறிக்கையும் வந்துவிட்டது. மருத்துவர்களுக்குத் தேவையான ஒவ்வொரு விஷயமாக அரசு செய்து வருகிறது. ஒரு சங்கத்தின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்போதுதான் போராட வேண்டும். சும்மாவே எப்படி எதிர்க்க முடியும்?'' என்று கேட்டார் அகிலன்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ``தடுப்பூசி முகாம் என்பது மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. அதுமட்டுமன்றி தன்னார்வலர்கள், தனியார் மருத்துவமனை எனப் பல்வேறு அங்கங்கள் இணைந்து இதைச் செய்கின்றன. ஆட்சியர்தான் இதனை ஒருங்கிணைக்கிறார். பிடபுள்யு எஸ் நிதி தொடர்பாக தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் தாரேஸ் அகமதின் கவனத்துக்கு நான் கொண்டு செல்கிறேன்” என்றார்.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

நாமே தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் தாரேஸ் அகமதுவிடமும் கேட்டோம். அதற்கு, ``தடுப்பூசி முகாம்களை பொது சுகாதார இயக்ககம், தேசிய சுகாதாரத் திட்டம் உள்ளிட்டவை இணைந்துதான் நடத்துகின்றன. தேசிய சுகாதாரத் திட்டத்திலிருந்து முதல் 5 தடுப்பூசி முகாம்களுக்கு இதுவரை ரூ.8 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 6 மற்றும் 7-வது தடுப்பூசி முகாம்களுக்கான நிதியை பொது சுகாதார இயக்ககம் விடுவித்துள்ளது.

பிடபுள்யு எஸ்' நிதியைப் பொறுத்தவரையில் இதற்கு மாநிலம் முழுமைக்கு ஒரே வங்கிக்கணக்கை (Single Nodal Account) உருவாக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான கணக்குகள் இருப்பதால் யார், எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்கிற தெளிவு இல்லாமல் இருந்தது. ஒரே கணக்காக மாறும்போது எந்த ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து பணம் எடுக்கப்படுகிறது. அது எதற்காகச் செலவிடப்படுகிறது, பண விரயம் நடக்கிறதா போன்றவற்றையெல்லாம் கண்காணிக்க முடியும். ஒரே வங்கிக்கணக்கை உருவாக்கும் பணி நிறைவு பெற்று அதற்கான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நிறைவடைந்தவுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தங்களுக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளலாம்“ என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு