Published:Updated:

மகாராஷ்டிரா: `தடுப்பூசிக்கு உரிமை கொண்டாடும் பிரதமர், உயிரிழப்புகளுக்கு..?!’ -மாநில அமைச்சர் காட்டம்

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

``கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறும் பட்சத்தில், கொரோனா நோயாளிகளின் இறப்புச் சான்றிதழிலும் மோடியின் படம் இடம்பெற வேண்டும்” என்று மகாராஷ்டிரா அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. அதேசமயம் கொரோனா தடுப்பூசிக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் அளித்த பேட்டியில், ``கொரோனாவால் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவருகின்றனர்.

மோடி படத்துடன் சான்றிதழ்
மோடி படத்துடன் சான்றிதழ்

கொரோனா தடுப்பூசிக்கு உரிமை கொண்டாடும் பிரதமர் மோடி கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறும் பட்சத்தில், கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழிலும் மோடியின் படம் இடம்பெற வேண்டும்.

நாட்டில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இறப்புகளும் பெரிய அளவில் நடந்துகொண்டிருக்கின்றன. உடல்களை எரிக்கும் இடத்தில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டுவதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்து நிற்பது போன்ற வீடியோக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தற்போதைய இந்தச் சூழ்நிலைக்கு மத்திய அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். பதிலளிக்காமல் தப்பிக்க முடியாது.

கொரோனாவுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த மருந்துகளைத் தயாரிக்கும் அனைத்து கம்பெனிகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதிப்பதில்லை. இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய தடைவிதித்திருப்பதால் ஏற்றுமதியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட16 கம்பெனிகள் தாங்கள் தயாரித்துள்ள ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளன. ஆனால், மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. மத்திய அரசு தாங்கள் இந்த மருந்துகளை வாங்கும் ஏழு கம்பெனிகள் மட்டுமே இந்த மருந்தை விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவேதான் மருந்துக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கொரோனா
கொரோனா

இதற்கிடையே மகாராஷ்டிராவில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்க ரயில் மூலம் ஆக்ஸிஜன் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான திட்டத்துக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. திரவநிலை ஆக்ஸிஜன் ரயில்களில் கொண்டு வரப்படும் என்றும், இதற்கான கட்டணத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதில் தலையிட்டு தீர்வு காணும்படியும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பிரதமர் மோடி தேவைப்படும் மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறைகளிடம் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு