Published:Updated:

``கொரோனா சிகிச்சையை நிறுத்தச் சொல்லி மிரட்டுறாங்க!” - முன்னாள் தலைமைச் செயலாளர் மீது பகீர் புகார்

ஆஷரா மருத்துவமனை
ஆஷரா மருத்துவமனை

தி.மு.க-வில் தனக்கு இருக்கும் செல்வாக்கினைப் பயன்படுத்தி ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்படி நடந்துகொள்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது நிச்சயம் தமிழக அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும்.

கொரோனா இரண்டாவது அலை, நாம் நினைத்துப் பார்க்காத பேரழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமலும், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்காமலும் மக்கள் அல்லாடுகின்றனர். வயது வித்தியாசம் இல்லாமல் பல உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து கொரோனாவுக்கு எதிரான போரில் முன் நிற்கும் மருத்துவர்களையும் மருத்துவ பணியாளர்களையும் ஒட்டுமொத்த உலகமும் போற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், `கொரோனா சிகிச்சை தொடங்கியதால் நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம்’ என சென்னை அண்ணா நகர் ஆபிஸர்ஸ் காலனியில் உள்ள ஆஷரா என்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் பகீர் புகார் கிளப்பியிருக்கிறது.

மருத்துவர் மைதிலி
மருத்துவர் மைதிலி

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆஷரா மருத்துவமனை நிர்வாகியான மருத்துவர் மைதிலி, ``இந்த மருத்துவமனை 2014-லிருந்து இயங்கி வருகிறது. தேவையான அனைத்து அனுமதிகளையும் முறைப்படி பெற்றுத்தான் நாங்கள் இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறோம். மகப்பேறு சிகிச்சையை ஏழு வருடங்களுக்கு மேலாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் செய்துகொண்டிருக்கிறோம். கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவுவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் மக்கள் அல்லாடுகின்றனர்.

இந்தச் சூழலில் எங்களால் ஒதுங்கிச் செல்ல முடியவில்லை. 15 ஆக்ஸிஜன் படுக்கைகளை உள்ளடக்கிய 25 படுக்கை வசதி எங்களது மருத்துவமனையில் இருப்பதால் இந்தச் சூழலில் இங்கு கொரோனா சிகிச்சை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தோம். எங்கள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்திடம் முறையான அனுமதி பெற்று மே 7-ம் தேதியிலிருந்து கொரோனா சிகிச்சையளித்து வருகிறோம்.

ஆஷரா மருத்துவமனை
ஆஷரா மருத்துவமனை

இங்கு கொரோனா சிகிச்சை ஆரம்பித்ததிலிருந்தே பிரச்னைதான். சென்னை மாநகராட்சியிலிருந்து அவ்வப்போது வரும் அதிகாரிகள் வந்து மிரட்டல் தொனியில் பேசுகின்றனர். நீங்கள் கொரோனா சிகிச்சையளிக்க அனுமதி பெற்றிருக்கிறீர்களா எனக் கேட்கின்றனர். அனுமதி கடிதத்தைக் காட்டியதும் திரும்பிச் செல்கின்றனர். அடுத்த நாள் இன்னொருவர் வந்து உங்கள் மருத்துவமனைக் கட்டடத்தின் பிளானைக் காட்டுங்கள் என்கிறார். எங்கள் உயிரைப் பணயம் வைத்து நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது, ஏதோவோர் உள்நோக்கத்துடன் கேள்வி எழுப்பும் அதிகாரிகளிடம் நாங்கள் பொறுமையாகப் பதிலளித்து எங்களிடம் உள்ள ஆவணங்களைச் சமர்ப்பித்தோம். ஆனாலும், அவர்கள் விடவில்லை. தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தனர்.

மாநகராட்சியிலிருந்து வந்த சுகாதார அலுவலர் ஒருவர், `உங்க ஹாஸ்பிட்டல்ல இப்போ இருக்கிற கொரோனா நோயாளிகள் குணமாகி டிஸ்ஜார்ஜ் ஆனதும் நீங்க கொரோனா சிகிச்சைப் பிரிவை மூடணும், அதற்குமேல் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கக் கூடாது’ என்று மிரட்டல் தொனியில் பேசினார். நாங்கள் முறைப்படி அனுமதி வாங்கி சிச்சையளித்து வருகிறோம். தற்காலிக மருத்துவமனைகளை அதிகளவில் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிற இந்தப் பேரிடர் காலத்தில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையை நிறுத்தச் சொல்கிறீர்களே என்ன காரணம் எனக் கேட்டதற்கு அந்த அலுவலர் உரிய பதிலளிக்காமல் சென்றுவிட்டார். அதற்குமேல் தொல்லை தர மாட்டார்கள் என நினைத்தோம்.

ஆனால், அதற்கு அடுத்த நாளே,`` நீங்கள் உங்கள் கட்டுமான பிளானை சமர்ப்பிக்கவில்லை. ஆகையால் உடனடியாக கட்டுமான பணிகளை நிறுத்தவும்” என்று `ஸ்டாப் வொர்க்கிங்’ நோட்டீஸ் ஒன்றை மாநகராட்சியிலிருந்து அனுப்புகின்றனர். அதைப் பார்த்தது எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. நீங்களே பாருங்கள்… எட்டு வருடங்களுக்கும் அதிகமான பழைய கட்டடம். இங்கே எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் நடக்கவில்லை. அப்படியிருக்கும்போது எந்த கட்டுமான பணியை நிறுத்தச் சொல்லி நோட்டீஸ் கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை.

ஏன் இப்படியெல்லாம் எந்த முகாந்திரமும் இல்லாமல் தொல்லை கொடுக்கின்றனர் என்று குழம்பியபோதுதான் மாநகராட்சியிலிருந்து வந்த ஓர் அதிகாரி, `உங்க வீட்டுக்கு பக்கத்துல குடியிருக்கிற முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதிதான் இதுக்கெல்லாம் காரணம்... அவர்தான் இந்த மருத்துவமனையில கொரோனா சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது. அருகில் குடியிருக்கிறவங்களுக்கு பாதுகாப்பு இல்லை’ன்னு பிரஷர் போடுறாரு என்றார்.

அதைக் கேட்டதும் நாங்கள் மிகவும் நொந்துபோய்விட்டோம். முன்னாள் தலைமைச்செயலர் ஸ்ரீபதியின் வீடு எங்கள் மருத்துவமனையை ஒட்டித்தான் இருக்கிறது. அதாவது எங்களது கட்டடத்துக்குப் பக்கத்துக் கட்டடம். இங்கே கொரோனா சிகிச்சை மேற்கொண்டால் அவருக்கும் கொரோனா பரவிவிடும் என்ற அதீத அச்சத்தின் காரணமாக தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி மாநகராட்சி அதிகாரிகளைத் தூண்டி இப்படிச் செய்திருக்கிறார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த இடத்தில் மருத்துவமனை வரக்கூடாது என்பதற்காக ஆரம்பத்திலிருந்தே பல தடைகளை உருவாக்கியவர் ஸ்ரீபதி. அவர் தலையீடு இருந்ததால் சிஎம்டிஏ-வில் அனுமதி வாங்குவதற்கு 2012-லிருந்து 2014 வரையிலும் மிகவும் போராட வேண்டியிருந்தது. வீட்டுக்கு அருகில் மருத்துவமனை இருந்தாலே நமக்கும் பாதிப்பு வரும் என படிக்காத ஒருவர் அச்சப்பட்டால்கூட பரவாயில்லை. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்படிச் செய்கிறாரே என்று எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இப்போது கொரோனா சிகிச்சை பிரிவுக்கு ஆரம்பித்ததற்கும் அதேபோல தன் செல்வாக்கைப் பயன்படுத்தி இடையூறு கொடுக்கிறார். மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் மக்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது ஒரு முன்னாள் தலைமைச் செயலாளரால் எப்படி இப்படிச் சிந்திக்க முடிகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை.

ஆனால் உண்மையில், அவருடைய வீடுதான் நிறைய விதி மீறல்களுடன் கட்டப்பட்டிருக்கிறது. நாங்கள் விதிகளுக்குட்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அவர்மீதுதான் எடுக்க வேண்டும். இதுகுறித்து விரிவாக சென்னை மாநகராட்சிக்குப் புகார் அனுப்பியிருக்கிறோம். பேரிடர் காலத்தில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் நாங்கள் கொரோனா சிகிச்சை தொடங்கியது குற்றமா? அதற்காக எங்கள்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கிறார்களா? எங்களுக்கு எதுவுமே புரியவில்லை.

தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற சிலர் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தவறான செயல்பாட்டில் ஈடுபடும்போது அது அவப்பெயரை உருவாக்கும். எனவே அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு கொரோனா நோயாளிகளுக்கு நாங்கள் சிகிச்சையளிப்பதற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஸ்ரீபதி
ஸ்ரீபதி

ஆஷரா மருத்துவமனை நிர்வாகத்தினர் வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் தலைமைச் செயலரான ஸ்ரீபதியிடம் கேட்டதற்கு, ``யாரோ எதுவோ சொன்னா அதுக்கு நான்தான் காரணமா? அந்த ஹாஸ்பிட்டல்ல இப்படி ஒரு பிரச்னை இருக்கிறதே எனக்குத் தெரியாது. எதிர் வீடு, பின் வீடுன்னு அந்த ஹாஸ்பிட்டலைச் சுத்தி வசிக்கிறக்கவங்க எல்லோரும் சீனியர் சிட்டிசன்ஸ்தான். யார் யாரோ கம்ப்ளைண்ட் பண்ணுறாங்க. ஆனா, இவங்க சும்மா என் பெயரை இழுத்துவிடறாங்க. ஏன்னா என் பெயரைச் சொன்னாதான் மீடியா கவனம் திரும்பும்னு இப்படியெல்லாம் புகார் சொல்றாங்க. நான் வீட்டைவிட்டு வெளியிலே வருவது கிடையாது. கேட்டைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்கேன். சும்மா ஏதோ கதை விடுறவங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கிட்டிருக்க முடியாது” என்றார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம், ``அந்த மருத்துவமனையில் புதிதாக கொரோனா சிகிச்சை ஆரம்பித்துள்ளனர். அங்கு வரும் கொரோனா நோயாளிகள் கட்டுப்பாட்டுடன் இல்லாமல் வெளியில் உலவுவதால் அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு நோய் அச்சத்தை உருவாக்குவதாகப் புகார் வந்ததன் அடிப்படையில்தான் அங்கு விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. மற்றபடி வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. அங்கு சென்ற அதிகாரிகள் சம்பந்தமே இல்லாமல் ஸ்டாப் வொர்க்கிங் நோட்டீஸ் கொடுத்திருக்கின்றனர். அது தவறுதான்.

இந்தப் பிரச்னை எங்கள் கவனத்துக்கு வந்ததும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு மாநகராட்சி தரப்பிலிருந்து எந்தவித இடையூறும் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல அருகில் குடியிருக்கும் நபர்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடமும் அறிவுறுத்தியிருக்கிறோம். அந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்கு எவ்வித இடையூறும் ஏற்படாது” என்றனர்.

தொடர்ந்து அவர்களிடம், ``முன்னாள் தலைமைச் செயலர் ஸ்ரீபதிதான் தி.மு.க-வில் தனக்குள்ள செல்வாக்கினை பயன்படுத்தி அந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவை நிறுத்த முயல்கிறார்” என்று புகார் சொல்கிறார்களே என்று கேட்டதற்கு, `அதைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. அந்த மருத்துவமனைக்கு இனி எவ்வித இடையூறும் இருக்காது” என்பதுடன் முடித்துக்கொண்டனர்.

கொரோனா வந்தவர்களுக்கு 3 மாதங்களுக்குப் பின் தடுப்பூசி; அரசின் புதிய நெறிமுறைகள் என்னென்ன?

எப்படியாவது கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று தி.மு.க அரசு செயலாற்றிக்கொண்டிருக்கும் வேளையில், தி.மு.க-வில் தனக்கு இருக்கும் செல்வாக்கினைப் பயன்படுத்தி ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்படி நடந்துகொள்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது நிச்சயம் தமிழக அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும்.

அடுத்த கட்டுரைக்கு