Published:Updated:

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை குறைவாகச் செய்யப்படுவது ஏன்?

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

தனியார் ஆய்வகங்கள் பரிசோதனைக்கான கிட்ஸை நேரடியாகக் கொள்முதல் செய்ய அனுமதியில்லை. அரசு மூலமாகவே அவற்றைப் பெற முடியும்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நேரத்தில் தமிழகத்தில் வெறும் நான்கு அரசு ஆய்வகங்களே இதற்கான பரிசோதனைகளைச் செய்யத் தொடங்கின. அதிகரித்து வந்த நோயாளிகள் எண்ணிக்கையை அடுத்து ஆய்வகங்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அரசு மட்டுமன்றி தனியார் ஆய்வகங்களுக்கும் கோவிட்-19 பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

தமிழகத்தில் 27 தனியார் மருத்துவமனைகளுக்கு இதற்கான பரிசோதனைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 31 தனியார் ஆய்வகங்கள் இதற்கான பரிசோதனைகளைச் செய்கின்றன. அதைத் தொடர்ந்து தமிழகத்தில்தான் அதிகம் தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Testing lab
Testing lab

இந்தியாவைப் பொறுத்தவரை, 607 ஆய்வகங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அனுமதி அளித்துள்ளது. அவற்றில் 180 ஆய்வகங்கள், அதாவது 30 சதவிகிதம் தனியார் ஆய்வகங்களே.

பரிசோதனைகளை அதிகரித்தால்தான் நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதால்தான் தனியாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறதா என்றால் இல்லை என்பதே நிதர்சனம்.

நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ள பரிசோதனைகள் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது வெறும் 18 சதவிகிதப் பரிசோதனைகள் மட்டுமே தனியார் ஆய்வகங்களில் நடைபெற்றுள்ளன. மீதம் 82 சதவிகிதப் பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளில்தான் நடைபெற்றுள்ளன.

30 சதவிகித தனியார் ஆய்வகங்களில் வெறும் 18 சதவிகிதப் பரிசோதனை என்பது மிகமிகக் குறைவான எண்ணிக்கையாகவே கருதப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சுமார் 3.50 லட்சம் பரிசோதனைகளில் 49,000-த்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மட்டுமே தனியார் ஆய்வகங்களில் செய்யப்பட்டுள்ளன.

தனியார் ஆய்வகங்களின் கைகளை அரசு கட்டிப்போட்டிருக்கிறது. இதுதான் தனியார் ஆய்வகங்கள் சரியாகச் செயல்பட முடியாததற்குக் காரணம்.
சமூகச் செயற்பாட்டாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
`நேற்று அட்மிட்; இன்று விபரீத முடிவு!’ - சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொரோனா வார்டு அதிர்ச்சி

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கும் பரிசோதனைகள் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்நிலையில் குறைவான எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நோய்ப் பரவலை அதிகரிக்கவே செய்யும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இது தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசினோம்:

"தனியார் ஆய்வகங்களின் கைகளை அரசு கட்டிப்போட்டிருக்கிறது. இதுதான் தனியார் ஆய்வகங்கள் சரியாகச் செயல்பட முடியாததற்குக் காரணம். அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறது அரசு. ஒரு குடும்பத்தில் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால்கூட, அந்த வீட்டிலுள்ளவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்வதில்லை. அவர்களில் யாருக்காவது அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய அனுமதி உள்ளது.

Dr.G.R.Ravindranath
Dr.G.R.Ravindranath

ஒருவர் தனக்குக் கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் அவர் நேரடியாகப் போய் தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்துகொள்ள முடியாது. அரசு மருத்துவர் அல்லது தனியார் மருத்துவரின் பரிந்துரையில் மட்டுமே செய்துகொள்ள வேண்டும். இதுபோன்ற காரணங்களால் தனியார் ஆய்வகங்களுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்வோர் எண்ணிக்கை குறைகிறது.

மேலும் தனியார் ஆய்வகங்கள் பரிசோதனைக்கான கிட்ஸை நேரடியாகக் கொள்முதல் செய்ய அனுமதியில்லை. அரசு மூலமாகவே அவற்றைப் பெற முடியும். இதனால் அதிக பரிசோதனைகளைச் செய்ய தனியார் ஆய்வகங்கள் நினைத்தாலும் வாய்ப்பில்லாமல் போகிறது. அதிகப் பரிசோதனைகள் செய்யப்பட்டால் நோயாளிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்பதால், பரிசோதனைகளைக் குறைத்து நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளதாகக் காட்ட விரும்புகிறது தமிழக அரசு.

Swab Test
Swab Test

பரிசோதனை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோர் எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை போன்ற விவரங்களையும் தனியார் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால்தான் தனியார் ஆய்வகங்களால் அதிக பரிசோதனைகளைச் செய்ய இயலவில்லை. தனியாரின் கைகள் விடுவிக்கப்பட்டால்தான் பரிசோதனைகள் அதிகரிக்க முடியும்" என்றார்.

இது தொடர்பாக அரசின் சார்பில் விவரங்களைப் பெற பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் மருத்துவர் வடிவேல், தமிழக பொது சுகாதாரத் துறையின் மாநிலத் தொற்றுநோய்க் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பி.சம்பத் ஆகியோரைத் தொடர்புகொண்டோம். இருவரும் அழைப்புக்குப் பதில் அளிக்கவில்லை.

covid-19
covid-19
ஹெல்த் பாலிசி மருத்துவப் பரிசோதனை... கொரோனாகால புதிய மாற்றம்!

நோயின் தீவிரம் அதிகரித்துள்ள நேரத்தில் அதன் ஆபத்தை உணர்ந்து தனியார் மருத்துவமனைகளிலும் அதிக அளவில் பரிசோதனைகள் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். அரசென்றும் தனியாரென்றும் பிரித்தறிய வேண்டிய நேரம் இதுவல்ல!

அடுத்த கட்டுரைக்கு