Published:Updated:

புதுச்சேரி:`கொரோனா நோயாளிக்குத் தடை’ - கலெக்டர் அதிரடியால் மிரண்ட தனியார் மருத்துவமனை

புதுச்சேரி கலெக்டர் அருண்
புதுச்சேரி கலெக்டர் அருண்

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்த தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அதிரடியாகக் கைப்பற்றியதுடன், அதை கொரோனா மருத்துவமனையாக மாற்றியிருக்கிறார் புதுச்சேரி கலெக்டர் அருண்.

புதுச்சேரி மாநிலத்தில், கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. புதுச்சேரியில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,292 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 5,634 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ள 3,521 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137-ஐ தொட்டிருக்கிறது. இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிறைந்துவிட்டதால், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கும் சுகாதாரத்துறை, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் மட்டும் மருத்துவமனையை அணுகும்படி கூறுகிறது. அத்துடன் அறிகுறிகளுடன் புதிதாக வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று புதுச்சேரியிலிருக்கும் ஏழு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிடம் கேட்டுக்கொண்டது அரசு.

கொரோனா பிரிவாக மாற்றப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி
கொரோனா பிரிவாக மாற்றப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி

அரசின் கோரிக்கைகளை இரண்டு தனியார் கல்லூரிகள் மட்டும் ஏற்றுக்கொண்ட நிலையில், மற்ற ஐந்து கல்லூரிகள் ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்தன. அதன் காரணமாக, கொரோனா நோயாளிகள் படுக்கையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் படுக்கைகளைப் பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து மத்திய உள்துறைக்கு புகார் அனுப்பினார் கவர்னர் கிரண் பேடி.

புதுச்சேரி:`கொரோனா நெகட்டிவ்... ஆனா, தப்பு நடந்துபோச்சு’ - அதிர்ச்சி கொடுத்த அரசு மருத்துவமனை

அந்தப் புகாரில், ``5,000 படுக்கைகளுடன் போதிய மருத்துவ வசதிகள்கொண்ட மருத்துவமனைகள் புதுச்சேரியில் இருந்தும், கொரோனா நோயாளிகள் சிரமப்படுகிறார்கள். அதனால் புதுச்சேரி அரசை வழிநடத்துங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து, புதுச்சேரி கலெக்டர் அருண் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,``தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசிடம் ஒப்புக்கொண்டபடி அரசுக்குத் தேவைப்படும் கொரோனா படுக்கைகளை வழங்க வேண்டும். அப்படித் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர், அரசு மருத்துவமனைகள் பரிந்துரைக்கும் கொரோனா நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகள் திருப்பி அனுப்பக் கூடாது.

புதுச்சேரி:`கொரோனா நெகட்டிவ்... ஆனா, தப்பு நடந்துபோச்சு’ - அதிர்ச்சி கொடுத்த அரசு மருத்துவமனை

கொரோனா நோயாளிகளைச் சேர்க்க மறுத்த அரியூர் பகுதியிலுள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கொரோனா மருத்துவமனையாக மாற்ற புதுவை அரசு முடிவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே நகர்ப்புறத்தில் கதிர்காமம் அரசு மருத்துவமனை கோவிட் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது கிராமப்புற மக்களுக்காக அரியூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டு, அங்குள்ள அனைத்துப் படுக்கைகளும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் அருணின் இந்த அதிரடி நடவடிக்கையால் விழிபிதுங்கி நிற்கின்றன தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள்.

அடுத்த கட்டுரைக்கு