Published:Updated:

புதுச்சேரி: ``ஊரடங்கு மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும்!" -தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்
News
தமிழிசை சௌந்தரராஜன்

"இனி தடுப்பூசி தேவைப்படுவோர் மருத்துவமனைகளுக்கு சென்றுதான் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்" என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அவசர கூட்டம் ஒன்று துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் அஸ்வினி குமார், கூடுதல் காவல்துறை இயக்குநர் ஆனந்த மோகன், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வல்லவன், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌத்ரி, சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு, கோவிட் தலைமை அதிகாரி டாக்டர் ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் புதுச்சேரி பிரதிநிதி டாக்டர் சாய்ரா பானு, மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கொரோனா - ஊரடங்கு
கொரோனா - ஊரடங்கு

கூட்டத்தில் அதிகாரிகளிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ``நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவதில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்தை உடனடியாக வகுக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். திருமணங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கலாம். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அறிவியல் பூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நீண்ட நாட்களுக்கு பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். அதனால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதிகாரிகள் எந்த நேரமும் ஆய்வு செய்யலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். பொங்கல் விழா கொண்டாட தடை இல்லை என்றாலும் காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

இனி தடுப்பூசி தேவைப்படுவோர் மருத்துவமனைகளுக்கு சென்றுதான் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அவசியம் மற்றும் அவசர காரணங்களுக்காக மட்டும் மக்கள் மருத்துவமனைகளுக்கு வரலாம். அப்படியல்லாத நிலையில், இணைய வழியாக ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக முறையான முன்பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்கை வசதி, பிராணவாயு படுக்கைகள், மருந்துகள், மருத்துவப் பணியாளர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். புதுச்சேரியில் தடுப்பூசி போடுவதும், அதற்கான ஆவணத்தை வைத்துக்கொள்வதும் அவசியம் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். சுகாதாரத் துறையும் மற்ற அரசு துறைகளும் இணைந்து சூழ்நிலையை கூர்ந்து கண்காணிக்க வேண்டும்" என்றார்.